வெள்ளி, 22 ஜூன், 2012

மகாராஷ்ட்ரா அரசு தலைமைச் செயலக தீ விபத்து சதிச் செயலா?

Viruvirupu மகாராஷ்ட்ரா அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள பில்டிங் தீப்பிடித்ததில், மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ளது இந்த பில்டிங்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியில்தான், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பான பைல்கள் வைக்கப்பட்டிருந்தன என்பதால், பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுந்துள்ளன.
‘மந்த்ராலயா’ என்ற பெயருடைய இந்த பிலிடிங்கில், மாநில முதல்வரின் அலுவலகம், முக்கிய அமைச்சர்களின் அலுவலகங்கள், மற்றும் மகாராஷ்ட்ரா அதிகார மையத்தின் அலுவலகங்கள் ஆகியவை அமைந்துள்ளன.
அரசு தலைமைச் செயலகம்
மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் மந்த்ராலயாவின் உள்ளே இருந்தார். தீவிபத்து ஏற்பட்ட உடனே அவர் பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். தீ விபத்தில் முதல்வர், மற்றும் துணை முதல்வரின் அறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று மதியம் 3 மணியளவில், 4-வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து, கடல் காற்று காரணமாக 6-வது மாடிவரை சுலபமாகப் பரவியது. தீ விபத்து ஏற்பட்ட பகுதி, மாநில அமைச்சர் பாபன்ராவ் பச்புதேவின் அறைக்கு மிக அருகில் இருந்தது.
காவல்துறை இன்று மாலை வெளியிட்ட தகவலின்படி, சுமார் 5,000 பேர், 20 நிமிட நேரத்தில் மந்த்ராலயா பில்டிங்கில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சிலர் மாடிகளில் இருந்து கழிவு பைப்கள் மூலம் கீழே இறங்கித் தப்பியதையும் காணக்கூடியதாக இருந்தது.
தீயை அணைப்பதற்காக மாநில தீயணைப்பு படையுடன், போர்ஸ் ஒன் என்றழைக்கப்படும் மகாராஷ்டிரா எலைட் பாதுகாப்பு படையினர், விரைவுப்படை ஆகிய படைகளும் உதவிக்கு அழைக்கப்பட்டனர். மும்பை நகரம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. தீயைணப்பு வாகனங்கள் மற்றும் ஆக்சிஜன் வாகனங்கள் கொண்டுவரப்பட்டு மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்தது.

பல கி.மீ. தொலைவுக்கு பரவிய புகை
தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.
சதிச் செயலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தாலும், அதற்கான சாத்தியம் மிகக் குறைவானதே என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 4-வது மாடியில் அமைக்கப்பட்டுள்ள ஏசி டிஸ்ட்ரிபியூஷன் பேனலில் இருந்து தீ பரவியிருக்கலாம் என பிலிடிங் மெயின்டெனன்ஸ் ஆட்கள் கூறுகின்றனர்.
தீவிபத்தின் காரணமாக ஏற்பட்ட புகை, அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரை பரவியிருந்தது. மந்த்ராலயா அருகிலுள்ள ஜேஜே பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தீயணைப்பு பணியில் மத்திய கடற்படை ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
மாநில அரசால் மாலை அறிவிக்கப்பட்ட தகவலின்படி, தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டது. 11 பேர் காயமடைந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக