திங்கள், 18 ஜூன், 2012

இதுதாண்டா லீனா..என் காரெக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்களே


லீனா பேசிவிட்டார்.
“With Tejaswini, I did what I felt and I am proud of it.”
இத்தோடு மேட்டர் முடிந்தது என்று யாரேனும் எண்ணியிருந்தால் அவர்கள் மேடத்தை புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம்.
“இதுதாண்டா லீனா” என்று உலகத்துக்கு அவர் உரைக்க விரும்புகிறார். அதே நேரத்தில், “என் காரெக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்களே” என்று உருகவும் செய்கிறார்.
“அப்படித்தான் செய்வேன்” என்று அடித்துப் பேச விரும்புகிறார். “இப்படி செய்வதைத் தவிர எனக்கு வேறு வழி என்ன இருக்கிறது?” என்று முறையிடவும் விரும்புகிறார்.
“ஆம். நான் சந்தர்ப்பவாதிதான்” என்று துணிவுடன் பிரகடனம் செய்கிறார். “தான் தவறேதும் செய்யவில்லை” என்பதைப் பணிவுடன் விளக்கவும் விரும்புகிறார்.
இதைக் கேளுங்கள்:“தேஜஸ்வினி பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பாடு பெற்ற ஆதிவாசிப் பெண்கள், கணவனை இழந்தப் பெண்கள் , கைவிடப்பட்டப் பெண்கள் குறித்த ஆவணப்படத்தை பம்ப்கின் பிக்சர்ஸ்(மும்பை) என்ற தயாரிப்பு நிறுவனத்திற்கும் எடுத்துக் கொடுத்தேன். அதற்கு நிதியுதவி செய்வது டாடா நிறுவனம் தான் என்று தெரிந்து தான் அந்தப் பணியை செய்தேன்..
அந்த ஆவணப்படத்தின் பத்து நிமிட, ஐந்து நிமிட, ஒரு நிமிட பிரதிகளை நிறுவனமே எடிட் செய்து விளம்பர படங்களாக பயன்படுத்திக் கொண்டது. இதில் எந்த உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் நான் படத்தில் சொல்லவில்லை. நேர்மையாகவே, அந்தப் பெண்களின் வாழ்க்கையை விஷுவல் செய்திருந்தேன்.”
என்று கூறியிருக்கிறார் லீனா.
கஞ்சா வியாபாரத்தில் தொடங்கி சிங்குர் வரையில் டாடா குழுமம், நடந்து வந்த பாதையை நாம் இங்கே விளக்கப் போவதில்லை. “டாடா என்றால் உண்மை, நேர்மை” என்று நம்பிக்கொண்டிருந்த பாமர நடுத்தர வர்க்கத்தினர் கூட சிங்குர், கலிங்க நகர், சல்வா ஜுடும் கதைகளையும் ராடியா டேப்பையும் கேட்டபின் தம் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டார்கள். டாடா நிறுவனம் தேஜஸ்வினி போன்ற பித்தலாட்டங்களைக் களம் இறக்குவதற்கான அவசியமும் இந்தப் படத்தின் அவதார ரகசியமும் இதுதான்.
அறிவாளியும் படைப்பாளியுமான போராளியுமான லீனாவுக்கு இது தெரிந்திருக்காதா என்ன, என்று நீங்கள் எண்ணினால், அம்மையார் இப்படி பதில் சொல்கிறார்:
“Yes, I did creatives for Thejaswini Project funded by Tata, Because, I honestly felt, the women’s lives whom I met , need to be shared”
பூ ன்னும் சொல்லலாம், புய்பம்னும் சொல்லலாம், ஐயிரு சொல்றா மாதிரியும் சொல்லலாம். ஐயிரு சொல்றா மாதிரி சொல்றார் லீனா.
அதாவது படைப்பாளியாகிய லீனா, டாடா என்கிற முதலாளி போடுகிற பிச்சைக்காசினால் உந்தப்பட்டு அந்தப் படத்தை எடுக்கவில்லையாம், அந்த புல்டோசரு, இஞ்சினெல்லாம் ஒட்ற பெண்களுடைய வாழ்க்கையைப் பார்த்தவுடனே, உண்மையிலேயே ரொம்ப ஃபீல் ஆயிட்டாராம்.
இதை எப்டியாவது உலகத்தாரோடு பகிர்ந்து கொள்ளணுமேன்னு ஒரு படைப்பு அவஸ்தையில அம்மா தவிச்சுகிட்டு இருக்கும்போது, தற்செயலா குறுக்கே வந்த டாடா, புடிங்க பணத்த-ன்னு கொடுத்திட்டு போயிருக்கிறார். அதாவது இன்ஸ்பிரேசன் வந்த பொறவுதான் அட்வான்ஸ் வாங்கினேனே கண்டி, அட்வான்ஸ் வாங்கினதால இன்ஸ்பிரேசன் வர்ல. இது ஒண்ணும் புய்பம் இல்ல, புஷ்பம் என்கிறார் லீனா.
ரொம்ம்ப முக்கியம்!
மத்தப்படி கொள்கையில அவரு ஸ்டெடியாத்தான் இருக்கிறாராம். “never did I do content against my political will” என்கிறார் லீனா.
“நம்மூர்ல கூடத்தான் பெண்கள் டிரை சைக்கிள் ஒட்றாங்க, தட்டு வண்டி ஓட்றாங்க, மூட்டை தூக்குறாங்க, பொணவண்டி கூட தள்றாங்க, அவுங்களயெல்லாம் பாத்து அம்மா ஃபீல் ஆகலியா” ன்னு நீங்க கேக்கலாம். ஆயிருப்பாங்க. ஆனா அந்த நேரம் யாரும் குறுக்க வல்லியே.
இந்த ஊத்தை நாயத்துக்கு ஒரு “அறிவார்ந்த” வியாக்கியானம் வேற!
“தாடகையிடம் முலைப்பால் குடித்தே அவளைக் கொல்வது மாதிரி. ஒரு பக்கத்தில் உனக்காக வேலை செய்வதன் மூலம் என்னைத் தக்க வைத்துக் கொண்டு வேறுபக்கத்தில் உன்னை எதிர்ப்பதற்காக நேரமும், சக்தியும் செலவிடுவேன் என்பதே இது.  லீனாவின் அதிகார எதிர்ப்பிற்கான பங்களிப்பு அவரது பிரதிகளேயன்றி அவரது வாழ்க்கையாக இருக்க முடியாது”என்று பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் என்னும் பெருமகனார் அம்மாவின் integrity க்கு ஃபேஸ் புக்கில் பொழிப்புரை போடுகிறார்.
“மூலதனம் அனைத்திலும் யார் யார் எப்படி பங்கு பெறுகிறார்கள், அவ்வாறு பங்கு பெறும் போது குறிப்பட்ட நபர் அதை எப்படி பயன்படுத்துகிறார் என்கிற அறிவார்ந்த பார்வையைக் கைவிட்டுவிட்டு, வெறும் முதலாளித்துவ குற்றத்தினை சுமத்துவத்தின் மூலம், அவரை வர்க்கத்திற்கு காட்டிக் குடுப்பதாக “ஒழுக்க சீலர்கள்” நினைத்துக் கொண்டிருக்கலாம்” என்று பொறிந்து தள்ளுகிறார் லீனா.
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் இந்த ரெண்டு பீஸையும் படித்தவுடனே வெலவலத்துவிட்டது. நமக்கோ சினிமா மொழியும் தெரியாது, இந்தி மொழியும் தெரியாது. தேஜஸ்வினி படத்தின் இந்தி வசனத்தில் உள்ள அதிகார எதிர்ப்பை புரிந்து கொள்ளுகின்ற அறிவார்ந்த பார்வை இல்லாமல் உளறிக் கொண்டிருக்கிறோமோ என்று பீதியாகிவிட்டது. உடனே தோழர்களை மொழிபெயர்க்கச் சொன்னோம்.
“இந்த சீருடை அணிந்ததை நீங்கள் பார்க்கிறீர்களே, அது ஒரு வெளித்தோற்றம்,  நான் உள்ளேயும் மாறியிருக்கிறேன்”
“எல்லோரும் சொல்கிறார்கள், பெண்ணாக பிறக்கக் கூடாது என்று. இன்று நான் பெண்ணாகவே பிறக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஒவ்வொருவரும் தேஜஸ்வனி ஆக வேண்டும்.”
“நான் தேஜஸ்வனி புரோக்ராமில் வந்த பிறகு என்னில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முன்னேறுவதற்கான ஸ்கோப் கிடைத்திருக்கிறது”
-இப்படித்தான் பேசுகிறார்கள் அந்தப்படத்தில் வரும் தேஜஸ்வினிகள்.
டெலி ஷாப்பிங் பிட்னெஸ் எக்விப்மென்ட் விளம்பரத்தில் வரும் டப்பிங் வசனம் மாதிரி இருக்கு. இதுக்கா இவ்வளவு பில்டப்பு என்று தோன்றியது. இருந்தாலும், “பிரதி”க்குள்ளே “சப் டெக்ஸ்டாக” ஏதேனும் அதிகார எதிர்ப்பு ஒளிந்திருந்து, நமக்குத்தான் கண்டுபிடிக்கத் தெரியவில்லையோ என்று உள்ளூர ஒரு பயம்.
ஏற்கெனவே லீனாவின் கவிதையை, “கவுஜை” என்று வாசித்து, அதன் விளைவாக கருத்துரிமை ஜென்டார்மேர்களின் (Gendarmerie ) கோபத்துக்கு ஆளான அனுபவம் இருந்ததால், தொழில்முறை கட்டுடைப்பு நிபுணர்கள் சிலரை வைத்து உடைத்தும், முன் பின்னாகப் போட்டு மறுவாசிப்பு செய்தும் பார்த்து விட்டோம்.
எனினும் எத்தனை முறை ரீவைண்டு செய்து போட்டாலும், “தேஜஸ்வினிக்கு மாறினப்புறம்தான் எனக்கு தன்னம்பிக்கை வந்தது  …. அப்போ நீங்க?” என்றுதான் கேட்கிறது லீனாவின் படம்.
“What they did with my material, was out of my control and I am also still not that powerful to stop that “ என்று ஃபேஸ் புக்கில் லீனா குமுறியிருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். “அடடே படத்திலிருந்த புரட்சிகளையெல்லாம் ஒக்லிவி நிறுவனம் எடிட் செய்திருக்கும் போலும். அவற்றை அம்மாவின் எழுத்திலிருந்தாவது பொறுக்கிவிடலாம் என்று எண்ணி அதைப் படிப்பதற்கு உள்ளே நுழைந்தால், “புரட்சி” நம் மூஞ்சியிலேயே வெடிக்கிறது.
“About CSR, yes, I know Companies do it to save their exploitation. But I also see it as the only way left to make them give back something to the community”
என்று பொளந்து கட்டுகிறார் லீனா. கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிடி என்பது தமது சுரண்டலைப் பாதுகாத்துக் கொள்ள முதலாளிகள் செய்யும் சதி என்று அவருக்கு தெரியுமாம். ஆனால் அவர்கள் சுரண்டிச் சேர்த்த செல்வத்தில் ஒரு பகுதியை சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்க வைப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லையாம். அதாவது தமிழில் சொல்வதென்றால், “ஒன்றே பாதை ஒன்றே பாதை, சி.எஸ்.ஆர் தான் புரட்சிப் பாதை” என்று முழங்குகிறார் லீனா.
ஆனால், உலகப் பெரும் பணக்காரர் வாரன் பஃப்பே வேறுவிதமாகச் சொல்கிறார். “முதலாளிகள் தங்கள் செல்வத்தில் ஒரு சிறு பகுதியையாவது சமூகத்துக்குத் திருப்பிக் கொடுப்பதன் மூலம்தான் புரட்சி போன்ற விபரீதங்களைத் தடுக்க முடியும்” என்று லண்டன் கலகத்தை ஒட்டி அவர் சக அமெரிக்க முதலாளிகளை எச்சரித்தார். உடனே இந்த தத்துவத்தை  Buffett Rule என்று கொண்டாடினார் ஒபாமா. லீனாவின் புரட்சி முழக்கத்தை, இந்தியத் தரகு முதலாளிகளுக்குப் புரியவைப்பதற்குத்தான் புரட்சியாளர் மன்மோகன் சிங்கும் ரெம்ப நாளாக கஷ்டப்பட்டு வருகிறார்.
என்ன செய்வது, முதலாளிகளுக்கு ஆதரவானதும், அதே நேரத்தில் முதலாளிகளுக்கு எதிரானது என்று முட்டாள் ஜனங்களை ஏமாற்றுவதற்கு உகந்ததும், முதலாளிகள் தம் சொந்தக் கையாலேயே செய்து முடிக்கத்தக்கதுமான ஒரு புரட்சியை முட்டாள் முதலாளிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே!
லீனா சொல்லும் சி.எஸ்.ஆர் புரட்சியின் தத்துவம், முதலில் உங்களுக்குப் புரிகிறதா பாருங்கள். அதாவது, “புரட்சி ஆஃப் த முதலாளி வர்க்கம், பை த முதலாளி வர்க்கம், ஃபார் த முதலாளி வர்க்கம்”.
இந்த புரட்சி முழக்கம் முன்னரே தெரிந்திருந்தால், டாடாவும் ஒடிசாவில் சுமுகமாக தொழில் தொடங்கியிருப்பார். கலிங்க நகரின் முட்டாள் பழங்குடிகளும் லீனாவின் காமெராவில் தேஜஸ்வினிகளாக மின்னியிருப்பார்கள், பிணங்களாக செத்து விழுந்திருக்க மாட்டார்கள்.
அது அந்த பழங்குடி மக்களின் தலையெழுத்து! நாம் அம்மாவின் திரைக்கதைக்கு வருவோம்.
“சி.எஸ்.ஆர் புரட்சியின் கொள்கைப்படி, நீங்கள் சுரண்டிச் சேர்த்த செல்வத்தில் ஒரு பங்கை மரியாதையாக சமூகத்துக்குத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்” என்று டாடாவுக்கு உத்தரவிடுகிறார் லீனா. அந்த அறச்சீற்றத்தை நிமிர்ந்து பார்க்கக் கூடத் துணிவில்லாமல், “காசோலையை யாரிடம் கொடுக்கட்டும் அம்மா?” என்று தலை குனிந்தபடியே நடுங்கும் குரலில் லீனாவிடம் கேட்கிறார் ரத்தன் டாடா.
“பணத்தை என்னிடம் கொடு, ரசீதை சமூகத்திடம் வாங்கிக்கொள்!” என்று உருமிவிட்டு, சி.எஸ்.ஆர் புரட்சியை நிறைவேற்ற வேண்டியிருக்கும் ஒரே நோக்கத்தின் பொருட்டு, வேண்டா வெறுப்பாக டாடாவிடம் கை நீட்டுகிறார் லீனா.
எப்படி இருக்கிறது இந்த சீன்? ஆனால் இதையெல்லாம் மெயின் பிக்சரில் நீங்கள் பார்க்க முடியாது. “தி மேக்கிங் ஆஃப் தேஜஸ்வினி” என்பது தனியொரு குறும்படம் – அது காமெராவுக்குப் பின்னால் இருட்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
எந்தப் புரட்சிகர அம்சமும் அதன் உள்நாட்டு பயன்மதிப்பைப் பயன்படுத்தித்தான் வளர முடியுமாம். அதற்கான உழைப்பையும், அதற்கான கூலியையும் பெற மார்க்சிய வாரிசுகளுக்கு (அதாவது தனக்கு) உரிமை உண்டாம் – சொல்கிறார் லீனா.
“பயன்மதிப்பு, உபரிமதிப்பு” போன்ற சொற்களை லீனா பயன்படுத்தும்போது பழைய கவுஜை நினைவுகள் நம்மை அச்சுறுத்துகின்றன. வாய்க்குள் எதையாவது பிடுங்கிப் போட்டுவிடப் போகிறாரே என்று வாயை மூடிக் கொள்கிறோம். இருப்பினும் பேசாமலும் இருக்க முடியவில்லை!
வாரிசுரிமையாமே!
டாடாவிடம் லீனா வசூலித்திருப்பது கலிங்க நகர் பழங்குடி மக்களின் தியாகத்துக்கான கூலியா? அல்லது கம்யூனிஸ்டுகளின் கடந்த காலத் தியாகங்களை டாடாவிடம் விலைபேசுவதற்கு “தோழர் தா.பா” ஏதேனும் பவர் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கிறாரா?

♦ ♦

“ச்சீ .. நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” – என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் அது போன நூற்றாண்டின் நைந்து போன வசனமாயிற்றே! இது இருபத்தோராம் நூற்றாண்டல்லவா?
“Political correctness காக தன் வாழ்க்கையை பணயம் வைப்பது காந்தியோடும், முதல் தலைமுறை கம்யூனிஸ்களோடும், நக்சல்களோடும் முடிந்துவிட்டது”  என்று கூறுகிறார் பொன்ராஜ்.
“தங்களால் நேர்மையாக இருக்க முடியவில்லை” என்று அவர் கூறவில்லை. “நேர்மையாக இருப்பவன் பழமைவாதி அல்லது முட்டாள்” என்கிறார். பாலஸ்தீனத்திலும், இராக்கிலும், ஈழத்திலும், காஷ்மீரிலும் தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்தவர்களும், வைப்பவர்களும் கடந்த காலத்தின் ஆவிகளாம், பழமை வாதிகளாம்!
நத்திப் பிழைக்கும் இந்த தொண்டைமான் கூட்டம்தான் எதிர்காலத்தின் பிரதிநிதியாம். டாடாவிடமும் அம்பானியிடமும் முலைப்பால் குடிப்பதைத் தவிர்க்க முடியாதாம். மேலும் தீவிரமாக உறிஞ்சிக் குடிப்பதுதான் இந்த நூற்றாண்டின் முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டமாம்!.
எறக்கத்துல பிரேக் அடிச்சா மாதிரி என்னா தத்துவம்டா!
அம்மையாரின் apologist கள் இதற்கு மேலும் போகிறார்கள்.  “நான் அயோக்கியனில்லை” என்று கொஞ்சம் தயக்கத்துடன் தங்கள் வாதத்தைத் தொடங்கும் இவர்கள், “இன்றைய சூழ்நிலையில் அயோக்கியனாக இருப்பதை தவிர்க்க முடியவில்லையே” என்று அங்கலாய்க்கிறார்கள்.
பிறகு, “அயோக்கியத்தனம்தான் இந்த காலத்துக்கு உகந்த புரட்சிகர வழி” என்று நமக்கு புரிய வைக்கிறார்கள். இதற்குப் பின்னரும் நீங்கள் புரிந்து கொள்ள’ மறுத்தால், “எந்தக்காலத்திலும் எவனும் யோக்கியனில்லை தெரியுமா?” என்று நக்கல் பண்ணுகிறார்கள்.
“அந்த காலத்து கவிஞர்கள் கொடுங்கோல் மன்னர்களிடம் பணம் வாங்கவில்லையா, தமிழகத்தின் பல கலைஞர்கள் போர்டு பவுண்டேஷனில் பணம் வாங்கவில்லையா, நானும் கார்ப்பரேட்டுகளிடம் பணம் வாங்கித்தான் கூடங்குளம் அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு படம் எடுத்திருக்கிறேன்” என்று கூறி “ஹஹ்ஹஹா” எனச் சிரிக்கிறார் அமுதன் ராமலிங்கம் புஷ்பம்.
அமுதனைப் போல நிர்வாண நிலையை எய்தாத மற்றவர்கள்  “நீ மட்டும் யோக்கியனா?” என்று நம்மைக் கேட்பதன் மூலம், “இது கோவணம் கட்டாத தேசம்தான், எல்லோரும் கோவணம் கட்டாதவர்களே” என்று தமக்குத் தாமே சொல்லி ஆசுவாசம் கொள்கிறார்கள்.
மா.லெ குழுக்கள் பன்னாட்டு ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் நிதி பெறுவதில்லையா என்கிறார் கீதா நாராயணன். உலகத்தை சுரண்டும் ஏகாதிபத்திய முதலாளிகளின் எச்சில் எலும்புகள் நிரம்பிய குப்பைத் தொட்டியை வலம் வரும் நாய்களும், அந்த நிறுவனத்தால் சுரண்டப்படும் ஊழியனிடம் நன்கொடை பெறும் மா.லெ குழுக்களும் ஒன்றெனச் சித்தரிக்கும் இந்த “அறியாமையை” எந்த ஆசிட் ஊற்றினாலும் கழுவ முடியுமா?
“இந்த புரட்சியாளர்கள் பயன்படுத்தும் பேஸ் புக்கும் இணையதளங்களும் பாட்டாளி வர்க்கத்தால் வடிவமைக்கப்பட்டவையா?” என்று கேட்கிறார் நிர்மலா கொற்றவை. எனில், பில் கேட்ஸ், நாராயணமூர்த்தி, ஆசிம் பிரேம்ஜி போன்றோர்தான் இவற்றையெல்லாம் வடிவமைத்தவர்களோ? ரத்தன் டாடாவுடைய வியர்வையின் உலர்ந்த வடிவம்தான் டாடா உப்போ? டாடா மேஜிக் ஷேர் ஆட்டோவில் போகும் தோழர்களே கவனம். நிர்மலா கொற்றவையின் கண்ணில் பட்டுவிடாதீர்கள்!
“நான் கட்டிய கல்லூரியில் என்னுடைய மொழியான ஆங்கிலத்தைப் படித்து நான் விட்ட ரயிலில் ஊர் ஊராகப் போய் என்னையே வெளியேறச் சொல்லிப் போராடுகிறாயா?” என்று பிரிட்டிஷ் வைஸ்ராய்கள் கூட காந்தியைக் கேட்டதாகத் தெரியவில்லை. நிர்மலா கொற்றவை நம்மைக் கேட்கிறார்.
உலகத்தில் யோக்கியர்கள் என்று யாரும் இல்லை என்பது மட்டுமல்ல, இருக்கவும் முடியாது” என்பதே இவர்களது கருத்து. “மனிதன் எனப்படுபவன் அடிப்படையிலேயே சுயநலவாதி. இது நாய் நாயைத் தின்னும் உலகம்” என்கின்ற சமூக டார்வினியமே இவர்களது கொள்கை.
ஒரு மனிதனுக்கு அறிவு, திறமை ஆகியவற்றுடன் சொத்தும் இருந்தால் அவன் டாடாவாக இருந்து மக்களைச் சுரண்ட வேண்டும்.
அறிவும் திறமையும் மட்டும் இருந்து சொத்து இல்லையென்றால் லீனாக்களைப் போல டாடாவை நத்திப் பிழைக்க வேண்டும்.
இவையே அறிவும் திறமையும் கொண்ட தம்மைப் போன்ற சான்றோர்களின் சிறப்பியல்புகள் என்பது இவர்கள் கொண்டிருக்கும் கருத்து.
மற்றப்படி “நேர்மை, ஒழுக்கம்” என்பதெல்லாம் அறிவு, திறமை, சொத்து என்பன போன்ற சௌபாக்கியங்கள் எதுவும் வாய்க்கப் பெறாத, (அதாவது நத்திப் பிழைப்பதற்கு அவசியமான “தகுதிகள்” இல்லாத) முட்டாள்களுக்குரிய attributes என்பதே இவர்களது மதிப்பீடு. எனவே இவர்களைப் பொருத்தவரை, தரும நியாயத்துக்கு கட்டுப்பட்டு உழைத்து வாழும் ஆகப் பெரும்பான்மையான மக்கள், “வாய்ப்புக் கிடைக்காததால் யோக்கியர்கள்” – அவ்வளவுதான்.
“வழுக்கி விழுவதற்கு” வாய்ப்பிருந்தும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள மறுத்து, நீங்களோ, நானோ “அறம்” பேசினால், “நீ மட்டும் டாடா உப்பைத் தின்னவில்லையா? டாடா டீ குடிக்கவில்லையா” என்ற லெவலுக்கு இறங்கி விடுவார்கள். தற்போது நடந்து கொண்டிருக்கும் வாதப் பிரதிவாதங்களில் பல இந்த ரகத்திலானவையே.
“காலச்சுவடு கண்ணன் மட்டும் பெரிய யோக்கியரா?” என்பதுதான் லீனாவுக்கு ஆதரவாகப் பேசுவோரின் மிக முக்கியமான கேள்வி. எடியூரப்பா, குமாரசாமியைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்டால் “கெக்கெக்கே” என்று சிரித்து, ” எல்லாரும் திருட்டுப்பசங்க” எனக் காறித்துப்பும் இந்த அறிவாளிகள், அதே மொக்கை கேள்வியை தாங்கள் எழுப்பும்போது, தங்களை சாக்ரடீசாக கருதிக் கொள்கிறார்கள்.
எறிவதற்கு எடுத்த கல்லைக் கீழே போட்டுவிடுவதாக ஒரு “அவுட் ஆப் கோர்ட் செட்டில்மென்டுக்கு” கண்ணன் ஒப்புக்கொண்டால், இவர்கள் கண்ணனின் எல்லா பாவங்களையும் பெருந்தன்மையாக மன்னித்துவிடுவார்கள். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
லீனாவுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீல்கள், ஃபீஸ் வாங்காமலேயே எட்டு கட்டையில் கூவுவது ஏனென்றால், குற்றவாளிக் கூண்டில் நிற்பது தாங்களும்தான் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கிறது. “எம்.பி யெல்லாம் திருட்டுப்பயல்கள்” என்று யாராவது சொல்லிவிட்டால், உடனே கட்சி வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகளை மறந்து, “எம்.பி இனத்தின் கவுரவத்தைக் காப்பாற்ற” சர்வகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் களத்தில் குதிப்பதைப் போன்ற சமாச்சாரம் இது.
அம்மா கேசை தங்கள் சொந்தக் கேசாக எடுத்துக் கொண்டு இவர்கள் சூடாக வாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதே, “என்னால் கூண்டில் நிற்க முடியவில்லை. கால் வலிக்கிறது. Yes, I am a bitch, Yes I am a prostitute, Yes I am an opportunist, Yes I am a criminal ” என்று கூறுகிறார் லீனா. இது ஒப்புதல் வாக்குமூலமோ, சுயவிமரிசனமோ அல்ல. “Yes, நான் பாப்பாத்திதான்” என்று விதி எண் 110இன் கீழ் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு.
“I will apologise in public, if you finally say, my docu ..has helped them save their entire empire ” என்று நமக்கு சவால் விட்டிருக்கிறார் லீனா.
கவிதாயினி அம்மையார் வார்த்தை சாமர்த்தியத்தில் அருண் ஜெட்லியை விஞ்சுவதை கவனியுங்கள். அவர் இயக்கிய படம் டாடாவின் “மொத்த” சாம்ராச்சியத்தையும் காப்பாற்ற உதவியது என்று உங்களால் சொல்ல முடிந்தால், அம்மையார் பப்ளிக்காக மன்னிப்பு கேட்பாராம். பாதி சாம்ராச்சியத்தை காப்பாற்ற உதவியது என்று நிரூபித்தால்?
16 ஆண்டுகளுக்கு முன் போயஸ் தோட்டத்திலிருந்து நல்லமநாயுடு கைப்பற்றிக் கொண்டு வந்த ஒட்டியாணத்தையே புரட்சித்தலைவியுடையது என்று இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. இதையெல்லாம் நாம் நிரூபிக்க முடியுமா?

♦ ♦

ற்போது விவாதத்தில் இருக்கும் பிரச்சினையின் தொடக்கம் ஒரு எளிமையான கேள்விதான்.
“பழங்குடி மக்கள் மீது புல்டோசரை ஏற்றும் கொலைகார டாடா நிறுவனம், தன் குற்றத்தை மறைப்பதற்காக, அதே பழங்குடிப் பெண்களை புல்டோசர் ஓட்ட வைக்கிறது. இதைக் கலையழகு மிளிரும் படமாக மாற்றிக் கொடுத்து அதற்காக கூலி வாங்கிக் கொள்வது குற்றமில்லையா?” என்பதுதான் அந்தக் கேள்வி.
ஒரு படைப்பாளி என்ற முறையில் அந்தப் பெண்களைப் பார்த்து ரொம்ப “ஃபீல்” ஆகித்தான் நான் படமெடுத்தேன். காசு இரண்டாம் பட்சம்தான் என்பதுதான் லீனா தரும் விளக்கம்.
தேஜஸ்வினியை எடுப்பதற்கு லீனாவை அமர்த்திக் கொண்டதைப் போலவே, சட்டிஸ்காரில் தம் “படைப்பு” நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக, சில போராளிகளை அமர்த்திக் கொண்டது டாடா நிறுவனம். அவர்கள் “சல்வா ஜுடும்” என்று அழைக்கப்பட்டார்கள்.
அவர்கள் லீனாவைப் போன்ற படைப்பாளிகள் அல்லர். அவர்களுக்கு காசுதான் முதல் பட்சம். சோத்துக்கு வழியில்லாத அந்த ஊரில், மாதம் 1500 சம்பளம் கொடுத்து சோறு போட்டு யூனிபார்ம் மாட்டி விட்டு ஒரு ஏ.கே 47 துப்பாக்கியையும் கொடுத்தார் டாடா.
தங்கள் வயிற்றுப் பசியைத் தவிர வேறு எந்த ஃபீலிங்கின் அடிப்படையிலும்  அந்தப் “போராளிகள்” இந்த புராஜக்டை ஒப்புக் கொள்ளவில்லை. நட்சத்திர விடுதிகளையோ, ஏ.சி பார்களையோ, சர்வதேச விருதுகளையோ, நுனி நாக்கு ஆங்கிலத்தையோ, மார்க்சியத்தையோ அவர்கள் அறிந்ததுமில்லை. மூணு வேளை சோறு, 1500 ரூபாய் என்பதற்கு மேல் வேறு எத்தகைய மேன்மையான படைப்புணர்வாலும் அவர்கள் தூண்டப்படவில்லை.
இருந்த போதிலும், “தான் செய்வது இன்னதென்று அறிந்திராத இந்தப் பாவிகள்”, மனித உரிமை ஆர்வலர்களால் “கூலிப்படை” என்றே குற்றம் சாட்டப்பட்டார்கள். சட்டப்படி அமையாத கூலிப்படை எதையும் அரசியல் சட்டம் அனுமதிப்பதில்லை என்பதால், அந்தக் சல்வா ஜுடுமைக் கலைக்கும்படி உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்து விட்டது.
வயல்வெளிகளை கைப்பற்றித் தருவதற்கு சல்வா ஜுடும். மக்களின் மனவெளியைக் கைப்பற்றித் தருவதற்கு படைப்பாளி – என்றும் நாம் இதை விளங்கிக் கொள்ளலாம். முதல் குற்றத்தை நிரூபிப்பது எளிது. மனித உரிமை ஆர்வலர்கள் நிரூபித்துமிருக்கிறார்கள். இரண்டாவது குற்றத்தை நிரூபிக்க முடியாது. நிரூபித்தாலும், கருத்துரிமை ஜென்டார்மேர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
நாம் புரிந்து கொள்வோம். டாடாவுக்கு ஒரு தேஜஸ்வினி என்றால் மோடிக்கு ஒரு சத்பவன யாத்ரா.
பழங்குடிப் பெண்களை டாடா கைதூக்கி விட்டதைப் போல, இஸ்திரிப் பெட்டியும் தையல் மிசினும் கொடுத்து குஜராத் முஸ்லிம் பெண்களை நரேந்திர மோடி கைதூக்கி விடவில்லையா? முஸ்லீம் மதகுருமார்கள் சிலரே மோடியைப் பாராட்டவில்லையா? அந்த “குஜராத் தேஜஸ்வினி”களைப் பற்றியும் லீனா படமெடுப்பாரா?
இப்படிக் கேட்பது விதண்டாவாதம் என்று பலர் இரகசியமாக குமுறலாம். தன்னால் பதிலிருக்க முடியாத வாதங்களை, முத்திரை குத்தி ஒதுக்கத்தான் விதண்டாவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தினான் ஆதிசங்கரன் என்பார் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.
சங்கரனையே சைடு வாங்கி முந்துகிறார் ஷோபாசக்தி. தேஜஸ்வினி விவகாரம் பற்றி கேட்டதற்கு, “கார்ப்பரேட் நிறுவனங்களை நியாயப்படுத்தும் எந்தச் செயலும் எனக்கு ஏற்புடையதல்ல” என்று தனது கருத்தை தெளிவாகச் சொல்லியிருக்கிறாராம்.
இராக்கின் மீது அமெரிக்க இராணுவம் குண்டுமாரி பொழிந்து கொண்டிருந்தபோது, “அந்நியத் தலையீடு எந்த வடிவத்தில் எங்கே நடந்தாலும் அதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது” என்று வாஜ்பாயி சொன்னதைப் போலல்லவா இருக்கிறது!
இந்தப் பச்சோந்திகளுக்குப் பெயர் படைப்பாளிகளாம்! கருத்துரிமைப் போராளிகளாம்! இவர்கள்தான் அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசுபவர்களாம்!

♦ ♦

“நான் உண்மைக்குப் புறம்பான எந்த செய்தியையும் அந்தப்படத்தில் சொல்லவில்லை” என்கிறார் லீனா.
நாங்கள் லீனாவின் கூற்றை நம்புகிறோம்.
கலிங்க நகரில் பழங்குடிகளை டாடா கொன்றதும் உண்மை, தேஜஸ்வினிகளுக்கு வாழ்வளித்ததும் உண்மை. இரண்டாவது உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் லீனா. உலகமே கலிங்கநகர் பற்றிப் பேசினால் என்ன? “மற்றதுபற்றிப் பேசுவதல்லவோ பின் நவீனத்துவம்! அதைத்தானே பேசுகிறார் லீனா- இல்லையா?
“டாடா கொலைகாரனா, கருணாமூர்த்தியா?” என்று கேட்கிறார்கள்.
அதுவா இதுவா என்ற கேள்விக்கு அதுவும் இதுவும்தான் என்பதல்லவோ பின் நவீனத்துவத்தின் பதில். இருமை எதிர்வுகளுக்குள் (binaries) உண்மைகளை அடைக்கும் இந்த மடமை, நிறப்பிரிகையின் ஒளி பரவிய தமிழ் மண்ணில் இன்னுமா மிச்சமிருக்கிறது?
உண்மையின் பன்மைத் தன்மையை நிராகரிக்கும் சாராம்சவாதத்துக்கும், பகுத்தறிவின் பயங்கரவாதத்துக்கும் சவக்குழி தோண்டிய நிறப்பிரிகை குருகுலத்தின் கடப்பாரைகள் எங்கே? அவை அனைத்தின் மீதுமா புல் முளைத்துவிட்டது?
நேர்மை, அறம் என்ற துருப்பிடித்த பெருங்கதையாடல் வாட்களால் குத்திக் கிழிக்கப்படும் இந்தப் போராளியைக் காப்பாற்ற அசடுகளும், அரை வேக்காடுகளும் தவிர ஒரு அறிஞன் கூடவா தமிழகத்தில் மிச்சமில்லை?
சட்டமன்றங்கள், என்.ஜி.ஓக்கள், கார்ப்பரேட்டுகள் போன்ற கலர் கலரான அதிகாரத் தாடகைகளின் மார்பில் முலைப்பால் பருகிக் கொண்டிருக்கும் பின் நவீனத்துவக் கலகக்காரர்கள், “பிழைப்புவாதமே இந்த நூற்றாண்டின் புரட்சி” என்று ஒரே ஒருமுறை முழங்குவதற்காகவாவது, வாய்திறக்க மாட்டார்களா?
தான் எடுத்தது ஒரு ஆவணப்படமென்றும், அந்த வகையில் தானும் ஒரு படைப்பாளிதான் என்றும் ஊருக்கே அறிவித்து விட்டு லீனா ஜீப்பில் ஏறிய பின்னரும், “எலேய் நீ என்ன படைப்பாளியா விளம்பரப் படம்னு சொல்லிட்டுப் போ ” என்று அவரை காப்பாற்றி விடுவதும், அவரது படைப்புக்கு அவரிடமே பொருள் விளக்கம் கோருவதும் அடாவடித்தனமில்லையா? பிரதிக்கு ஆசிரியனைப் பொறுப்பாக்குவது அநீதியில்லையா? 
கொலைகாரன் டாடாவை எப்படி கருணாமூர்த்தியாக சித்தரிக்கலாம் என்று ஒரு படைப்பாளியைக் கேட்பதும், என் கவிதையை நீ ஏன் எழுதவில்லை என்று ஒரு கவுஜாயினியை கேட்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதானே! இது பாசிசமில்லையா?
மெய்நிகர் உலகில் வினவு நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் பாசிச வெறியாட்டத்திலிருந்தும், “கரசேவை”யிலிருந்தும் கவுஜாயினியின் படைப்புரிமையையும் அதன் வழி கார்ப்பரேட்டுகளின் கருத்துரிமையையும் காப்பாற்றுவதற்கு கருத்துரிமைக்  காவலர் வருவாரா?
லீனா மணிமேகலை பேசிவிட்டார். அவரது நண்பர்கள் எதிரிகள் அனைவரும் அவரவர் கருத்தைப் பேசுகிறார்கள்.
கருத்துரிமையின் காவலர்தான் மவுனம் சாதிக்கிறார். கருத்து சொல்லாமலிருப்பதற்கான உரிமை கூட ஒரு வகையில் கருத்துரிமைதான். நாம் மறுக்கவில்லை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 20(3) பிரிவு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மவுனம் சாதிக்கும் உரிமையை வழங்குகிறது. Right to Silence!
சை..லேன்ஸ்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக