வியாழன், 7 ஜூன், 2012

அதுக்குள்ளே என்னை ரேப் பண்ணிக்கோ "தடையறத் தாக்க "

விளிம்புநிலை மனிதர்களின் யதார்த்த வாழ்வை பதிவு செய்யும் உலக சினிமாவெல்லாம் இல்லை. ஹாலிவுட்டுக்கோ, பாலிவுட்டுக்கோ இணையாக தமிழ் திரைப்படங்களை தரமுயர்த்தும் முயற்சியும் நிச்சயமாக இல்லை. படம் பார்ப்பவர்கள் அசந்துப்போய் மூக்கின் மேல் விரலை வைக்கும் பிரும்மாண்ட காட்சிகளும் சத்தியமாக இல்லை. ஆனாலும் மிக முக்கியமான சினிமாவாக பரிணமித்திருக்கிறது தடையறத் தாக்க.
கடைசியாக தமிழில் வெளிவந்த ‘டைரக்டர்ஸ் மூவி’ எதுவென்று பெருமூளையையும், சிறுமூளையையும் ஒருங்கே சேர்த்து கசக்கி நினைவுகூர்ந்தாலும் எதுவும் சட்டென்று நினைவுக்கு தோன்றவில்லை. கொஞ்சம் மெனக்கெட்டு யோசித்தால் மெளனகுரு, நாடோடி, சுப்பிரமணியபுரம் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் சில படங்கள் நினைவுக்கு வருகிறது.
தடையறத் தாக்க முழுக்க முழுக்க இயக்குனர் மகிழ் திருமேனியின் ஆளுமையை சார்ந்தே வந்திருக்கிறது. சரசரவென்று காட்சிகளையமைத்து பரபர வேகத்தில் தடதடவென பயணிக்கும் தடாலடி த்ரில்லர் எக்ஸ்பிரஸ்.

‘காக்க காக்க’ படத்தில் கவுதமிடம் உதவியாளராக பணியாற்றிய இப்படத்தின் இயக்குனர், கதையின் முக்கியமான விதையை அங்கிருந்தே எடுத்து, ‘தடையறத் தாக்க’வில் விளைச்சல் செய்திருக்கிறார். காக்க காக்க பாண்டியா-வுக்கும், அவருடைய அண்ணனுக்கும் அப்படியென்ன புனிதமான பாசப்பிணைப்பு என்று ஒரு சிறுகதையை எழுதிப் பார்த்திருப்பார் போல. நாயகனுக்கோ, நாயகிக்கோதான் உருக்கமான ஒரு ‘ஃப்ளாஷ்பேக்’ இருப்பது நம் பண்பாடு. மாறாக வில்லன்களுக்கு அவ்வகையிலான ஓர் ஆச்சரிய ஃப்ளாஷ்பேக்கை முயற்சித்திருக்கிறார். நாயகன் பதினைந்து வயதில் சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு, அப்பாடக்கர் ஆவதையெல்லாம் அசால்ட்டாக வசனத்திலேயே கடந்துவிடுகிறார். நாயகன் – நாயகி சந்திப்பு, அவர்களுக்கிடையேயான ஊடல், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாயகிக்கு நாயகன் மீது ஈர்ப்பு என்றெல்லாம் ’சீன்’ பண்ணாமல், நேரடியாக அவர்கள் காதலர்கள். நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கிறான் நாயகன் என்று படாலென்று படம் ஆரம்பிக்கிறது. கந்து வட்டி கொடுமையை எதிர்த்து மெசேஜ் சொல்கிறோம் என்றெல்லாம் கழுத்தறுக்காமல், தன் கதைக்கு தேவைப்பட்டது பயன்படுத்திக் கொண்டேன் என்கிற இயக்குனரின் நேர்மை பாராட்டத்தக்கது. சமூகத்தின் சகலப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை வெண் திரையில் எதிர்ப்பார்ப்பதைவிட வேறென்ன பெரிய முட்டாள்த்தனம் இருந்துவிடப் போகிறது?

பதினைந்து, பதினாறு ஆண்டுகளாக அருண்விஜய் நடித்துக் கிழித்தவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தூக்கி குப்பையில் போடலாம். அவருடைய நிஜமான இன்னிங்ஸ் இப்போதுதான் துவங்குகிறது. இயக்குனரின் நடிகராக மிகச்சிறப்பான உடல்மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, அடுத்தடுத்து அவர் நடிக்கப்போகும் படங்களின் சப்ஜெக்ட்டை கவனமாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நாளைய திரைவானில் பளிச்சென மின்னும் நட்சத்திரமாகலாம். மாறாக மீண்டும் மசாலா, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என்று இளையதளபதியாகவோ அல்டிமேட் ஸ்டாராகவோ முயற்சித்தாலோ.. தன் தலையில் தானே மண்ணை போட்டுக் கொள்வதாகதான் பொருள்.

முதல் பாதியில் மட்டும் தேவையில்லாமல் இரண்டு பாடல்கள். இன்னமும் பாடல்களின்றி படமெடுக்க நம்மாட்கள் தயங்குவது புரிகிறது. ஒரு சுமாரான டூயட். ஓரளவுக்கு பரவாயில்லை என்கிற அளவில் ஒரு குத்துப்பாட்டு. குத்துப்பாட்டில் ஒன்றுக்கு, ரெண்டாக தலைசிறந்த இரண்டு நாட்டுக்கட்டைகளை உருட்டிவிட்டிருந்தாலும், சீக்கிரமா படத்தை காட்டுங்கப்பா என்கிற டென்ஷன்தான் பார்வையாளனுக்கு இருக்கிறது. ‘பெட்டிகோட்’டோடு நாயகியை பார்த்தும் நார்மலாக இருக்கும் நாயகன், அதனால் டென்ஷன் ஆகும் நாயகி. “அப்போ பார்த்தப்போ ஆண்ட்டி மாதிரி பேண்ட்டி போட்டிருந்தே” என்றுகூறி, ஏழு வண்ணங்களில் மாடர்ன் பட்டர்ஃப்ளை பேண்ட்டீஸ் பரிசாக வாங்கித்தரும் நாயகன். பிற்பாடு அவளுக்கு போன் போடும்போது “இன்னைக்கு என்ன கலர் பட்டர்ஃப்ளை?” என்று விசாரிப்பது. தனியாக பெட்ரூமில் இருவரும் இருக்கும்போது, “பதினைஞ்சு நிமிசத்துக்கு யாரும் வரமாட்டாங்க. உனக்கு வேணும்னா அதுக்குள்ளே என்னை ரேப் பண்ணிக்கோ” என்று நாயகி, நாயகனிடம் சொல்வது. இவ்வாறாக ‘கல்ச்சுரல் ஷாக்’ காட்சிகள் கொஞ்சம் புதுசு. கொஞ்சம் விரசமாகவே தெரிந்தாலும், இவையெல்லாம் சமகாலத்தில் சகஜம் என்கிற யதார்த்தத்தை ஜீரணித்தே ஆகவேண்டியிருக்கிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மம்தா நாயகியாக. புற்றுநோயை வென்று உயிர்பிழைத்து, சிறுவயது காதலனை கைப்பிடித்து, கல்யாணத்துக்குப் பிறகு ‘தில்’லாக செகண்ட் இன்னிங்ஸை துவக்கியிருக்கிறார் என்று அவருடைய பர்சனல் ஸ்டோரியே மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனல் சக்ஸஸ் ஸ்டோரியாக இருக்கிறது. மம்தாவின் ப்ரேவ் ஹார்ட்டுக்கு கிரேட் சல்யூட்.

இண்டர்வெல்லுக்கு பிறகு டைரக்டாக க்ளைமேக்ஸ். ரத்தம் தெறிக்கும் ஓவர் வயலன்ஸ்தான் என்றாலும், கதைக்கு தேவைப்படும் அளவிலேயேதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வில்லன்களையும், அடியாட்களையும் எப்படியெல்லாம் போட்டுப் புரட்டியெடுக்கிறார் என்று விலாவரியாக ‘டைம்பாஸ்’ செய்யாமல் சட்டுபுட்டென்று எடிட்டி இருப்பதில் படக்குழுவின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது. கடைசிக் காட்சியில் அருண்விஜய் சட்டையைக் கிழித்துக் கொண்டு சிக்ஸ்பேக் காட்டுவாரோ என்கிற அச்சப்பந்து வயிற்றில் இருந்து வேகமாக தொண்டையை நோக்கி எழுகிறது. நல்லவேளையாக அப்படியெல்லாம் இல்லை. இயல்பாக படமெடுப்பது என்பதே இப்போதெல்லாம் வித்தியாசமாக தெரிய ஆரம்பித்துவிட்டது நம் தலைவிதி.

தடையறத் தாக்க தவறாமல் பார்க்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக