வெள்ளி, 22 ஜூன், 2012

ராமஜெயம் கொலை இதுவரை கண்டுபிடிக்கவில்லை! தமாஷான போலீஸ்!!

ராமஜெயம் கொலை வழக்கு: திருச்சி போலீஸ் பீமநகரில் ‘பிசைந்தது’ யாரை?

Viruvirupu
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில், திருச்சி போலீஸால் சிறிய அளவில்கூட முன்னேற முடியாத நிலையில், புலனாய்வு தற்போது சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர்தான், இந்த படுகொலை வழக்கில் குற்றவாளியை திருச்சி போலீஸ் லபக் என்று பிடித்து விட்டதாக சில மீடியாக்கில் பரபரப்பு தகவல் வெளியாகியது.
மீடியாக்களால் ‘லபக்’ செய்யப்பட்ட கொலையாளி, திருச்சி போலீஸின் கண்களில் தட்டுப்படாமல் ‘களுக்’ என்று சிரித்தபடி வெளியே சுற்றிக் கொண்டு இருப்பதால், வழக்கையே ‘லபக்’ என்று அவர்கள் கைகளில் இருந்து பிடுங்கி, சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலை புலனாய்வின் ஆரம்பத்தில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்களும் 007 ஜேம்ஸ் பாண்ட் பாணியில் திருச்சி முழுக்க பறந்து பறந்து விசாரித்தார்கள். ஊரிலுள்ள ரவுடிகளை எல்லாம் ரவுண்டு கட்டி, பொறி பறக்க தகவல் சேகரித்தார்கள்.

திருச்சி தில்லைநகர் பகுதியில் திருட்டுப்போன கோழிகள், ஆடுகள் பற்றிய தகவல் எல்லாம் கிட்டியது. ஆனால், ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளியின் நிழல்கூட தெரியவில்லை.
அடுத்த கட்டமாக, ராமநாதபுரம், ராமேஸ்வரம் என்று வெவ்வேறு இடங்களில் இருந்து ‘வல்லுனர்’ போலீஸ் அதிகாரிகளை விசாரணைக்காக திருச்சிக்கு இறக்குமதி செய்தார்கள். வந்தவர்கள், மலைக்கோட்டையையும், சத்திரம் பஸ் ஸ்டான்டையும் டூரிஸ்ட் போல சுற்றிப் பார்த்து, போட்டோ எடுத்துக் கொண்டதுதான் மிச்சம்.
அதையடுத்து, இறக்குமதி செய்யப்பட்டவர்களை மீண்டும் அவர்களது சொந்த ஊர்களுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனையில் இறங்கினார்கள்.
இதற்கிடையே திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், வெளியூர் அசைன்மென்ட் ஒன்றுக்காக திருச்சியை விட்டு அலக நேர்ந்தது. அப்போதுதான் காவல்துறை தலைமைக்கு ஒரு பொறி தட்டியது. “அடாடா.. இந்த ஆள் தலைமையில் விசாரணை நடைபெற்றதால்தான் கொலையாளியை பிடிக்க முடியவில்லையோ” என்பதே அந்தப் பொறி.
உடனே மின்னல் வேகத்தில் காரியங்கள் நடந்தன.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், திருச்சியை விட்டு இந்தப் பக்கமாக கிளம்ப, அந்தப் பக்கமாக பறந்து வந்து குதித்தார் போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம்.
அவர் செய்த அதிரடி என்ன? சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த விசாரணைகளை கைமாற்றி, திருச்சி நகர கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் அமல்ராஜ் வசம் ஒப்படைத்து விட்டு, “இனி எல்லாம் வெற்றிதான்” என இரண்டு விரல்களைக் காட்டிவிட்டு சென்றார்.
கமிஷனர் அமல்ராஜ், கடகடவென காரியங்களில் இறங்கினார். பழைய ‘தனிப்படை’களை எல்லாம் கலைத்துவிட்டு, இவர் புதிதாக தனிப்படைகளை உருவாக்கினார். இதற்காக ஸ்காட்லன்டு யார்டில் இருந்தா ஆள் கொண்டுவர முடியும்? பாலக்கரை பக்கமாக சுற்றிக் கொண்டிருந்த போலீஸ்காரர்கள் சிலர்தான் இந்த தனிப்படையிலும் இருந்தார்கள்.
விசாரணை கை மாறியதும், “கொலையாளியை இதோ பிடித்துவிட்டார்கள்.. கொலையாளியை பீமநகரில் வைத்து பிசைந்து கொண்டிருக்கிறார்கள்” என மீண்டும் மீடியாக்கள் தலைப்புச் செய்திகளில் அலறின. விசாரித்துப் பார்த்ததில், பீமநகரில் பரோட்டாவுக்கு மாவுதான் பிசைகிறார்கள்.
“கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தை யார் கொலை செய்தது” என்ற கேள்விக்கு பதிலை கண்டுபிடிக்காவிட்டால்கூட மன்னிக்கலாம்; “அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்?” என்ற கேள்விக்கே இதுவரை பதிலை இவர்கள் கண்டுபிடிக்கவில்லை! தமாஷான போலீஸ்!!
திருச்சியில் காவேரித் தண்ணி குடித்து வளர்ந்த காவல்துறையினரின் திறமை மீது சந்தேகம் ஏற்பட்டதில், புலனாய்வு தற்போது சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதே வழக்கு CBI வசம், அல்லது CIA வசம் எப்போது மாற்றப்படும் என்று சரியாக தெரியவில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக