திங்கள், 11 ஜூன், 2012

உலக நாயகன் நித்தியானந்தா நாளை இங்கே லேன்ட் பண்ணுவா

கர்நாடகாவில் நித்தியானந்தாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல், கொஞ்சம் கடுமையானதாகவே உள்ளது. இக்கட்டான நிலையில் உள்ள அவரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் மதுரை ஆதீனம் அருணகிரி நாத சுவாமிகள் இறங்கியிருப்பதாக தெரியவருகிறது. முதல் கட்டமாக, “நீங்கள் மதுரைக்கு வாருங்கள். இங்கே யாரும் சிக்கல் பண்ண முடியாது” என்று மதுரை ஆதீனத்தின் தகவல் நித்தி சுவாமிக்கு போயிருக்கிறது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த விவகாரத்தால் ஏற்பட்டுள்ள மீடியா சென்சேஷனையும் குறைக்கும் காரியங்களில் மதுரை ஆதீனம் இறங்கியுள்ளார்.
“நித்தியானந்தா எங்கேயும் ஓடிப் போகவில்லை, பெங்களூருவில்தான் இருக்கிறார். இன்று அல்லது நாளை அவர் மதுரை வருவார். அதுவரை தேவையற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்”  என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் மதுரை ஆதீனம், கிட்டத்தட்ட நித்தியானந்தாவின் பிரதிநிதியாகவே குரல் கொடுக்கிறார். நிலைமை அப்படி.
கர்நாடகாவில் ஏற்பட்ட நிலைமை காரணமாக, நித்தியானந்தாவின் மீடியா இணைப்பாளர்களைகூட தொடர்பு கொள்ள முடியவில்லை. வழமையாக நித்தியானந்தா தரப்பு மேட்டர்களை மீடியாக்களுக்கு கொடுக்கும் பணியை இருவர் செய்து வந்தார்கள் (அவர்களில் ஒருவர், ஒரு பத்திரிகையாளர் என்பதுதான் தமாஷ்) அந்த இருவரையும், தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
அவர்களது சர்க்கிளில் விசாரித்தபோது, அவர்கள் இருவருமே பெங்களூருவில் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். நித்தியானந்தாவுடன் இவர்களும் தலைமறைவாகி விட்டதாக வேறு ஒரு சோர்ஸ் சொல்கிறது.
இதனால், தற்போதைக்கு நித்தியானந்தாவின் பப்ளிக் ரிலேஷன்ஸ் அலுவல்களை கவனிக்கும் நபராக செயல்படுகிறார் மதுரை ஆதீனம். பாவம் அவர், இன்றைய தேதியில் ஆண்டவன் நாமத்தை உச்சரிப்பதைவிட, நித்தியானந்தாவின் பெயர்தான் அவரது வாயில் இருந்து அதிகம் வருகிறது.
இன்னமும் ஓரிரு தினங்களுக்குள் நித்தியானந்தா மதுரைக்கு வந்துவிடுவார் என்று இன்று காலையில் இருந்து சீரியசாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் மதுரை ஆதீனம். “நித்தியானந்தாவின் தியான பீடங்கள் அவரது சொந்த உழைப்பில் உருவாக்கப்பட்ட தனிப்பட்ட சொத்துக்கள். கர்நாடக அரசு அதில் கை வைக்க முடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லை.
கர்நாடகாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் அவருக்கு (நித்தியானந்தாவுக்கு) தியான பீடங்கள் உள்ளன. கர்நாடகா மாநில அரசு அவற்றை என்ன செய்ய முடியும்? நித்தியானந்தா ஒரு உலக நாயகன். அவர் இந்த நிமிடத்தில் பெங்களூருவில்தான் இருக்கிறார்” என்றும் கூறுகிறார் மதுரை ஆதீனம்.
உலக நாயகன் பெங்களூருவில் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு மதுரை ஆதீன மூத்த சுவாமிகளிடம் பதில் கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக