திங்கள், 11 ஜூன், 2012

மர்ம சந்நியாசி – 3 அந்தரங்கமான விஷயங்கள்கூட விட்டுவைக்கப்படவில்லை.

ஜமீனின் மேலாளர் நீதாம் எழுதிய கடித்தின் ஒரு பிரதி, இறந்த மேஜோ குமாரின் மனைவியான பிபாவதி தேவிக்கு அனுப்பப்பட்டது. சத்திய பாபு உஷாரானான். அவன் சந்நியாசியைச் சந்திக்கவில்லை. மாறாக Secretary, Board of Revenue  - லேத்பிரிஜ் என்பவரைச் சந்தித்து மேஜோ குமார் இறப்பு குறித்த அரசு ஆவணங்களின் நகலைப் பெற்றான். அதை டாக்கா கலெக்டருக்கு அனுப்பிவைத்தான். சத்திய பாபு இவ்விஷயம் குறித்து, வைசிராய் கவுன்சில் உறுப்பினரான திரு. லீ என்பவரைச் சந்தித்தும் பேசினான். பின்னர் டார்ஜிலிங் சென்று, மேஜோ குமார் இறந்து விட்டார் என்பதை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டினான். சத்திய பாபு ஆங்கிலேய அரசாங்கத்தில் உள்ள முக்கியமான அதிகாரிகளை எல்லாம் சந்தித்து, தனக்கு ஆதரவு திரட்டினான். சந்நியாசி ஒரு போலி என்று தான் செல்லும் இடத்திலெல்லாம் பிரசாரம் செய்தான். ஜமீனை நிர்வகித்து வந்த ஆங்கிலேயே மேலாளரான நீதாம், சந்நியாசியை ஜமீனின் ராஜாவாக அங்கீகரிக்கவில்லை.

இதற்கிடையில் ஜமீன் மக்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் ஒன்று திரண்டனர்.  பாவல் தாலுக்தார் பிரஜா ஸமித்தி என்ற சங்கத்தைத் தோற்றுவித்தனர். அந்தச் சங்கத்தின் நோக்கம், சந்நியாசிதான் இரண்டாவது குமார் என்று நிரூபிப்பதாகும். பின்னர் பாவல் ராஜ்ஜியத்தை இணிதணூt Court of Wards-இடமிருந்து மீட்டு, மேஜோ குமாரிடம் ஒப்படைக்கவேண்டும். அதற்குத் தேவையான பணம் திரட்டப்பட்டது. அந்த சங்கத்தின் தலைவராக வசதியும் சத்தியும் மிக்க பாபு டிகேந்திர நாராயண் கோஷ் என்ற ஒரு தாலுக்தார் நியமனம் செய்யப்பட்டார்.
கலெக்டரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. சந்நியாசியின் கூற்று சரிதானா என்று அரசாங்கம் விசாரித்து முடிவெடுக்கவேண்டும் என்று மேஜோ குமாரின் இரு சகோதிரிகளின் பேரில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சந்நியாசியான ராஜ்குமாரைப் புகழ்ந்து நிறைய பாடல்களும் கவிதைகளும் புனையப்பட்டன. கிராமங்களில் சந்நியாசிக்கு ஆதரவு தேடி இந்தப் பாடல்கள் பாடப்பட்டன. ஆங்காங்கே சந்நியாசிக்கு ஆதரவாக கிராமங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.   அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த கிராம மக்கள் மறுத்தனர். அரசாங்கத்தின் அரண்மனை மேலாளர், அரண்மனையில் இருப்பவர்கள் யாரேனும் சந்நியாசிக்கு ஆதரவாக நடந்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மிர்சாபூர் என்ற இடத்தில் கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தின் போது, ஒருவர் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோனார். இம்மாதிரி சம்பவங்கள் பல ஊர்களிலும் நடைபெற்றது.
1921ம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் தேதி, டாக்கா கலெக்டர் லின்ஸ்டே சந்நியாசியிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவை கலெக்டர், ஜூன் மாதம் 7 ஆம் தேதி வெளியிட்டார்.
இரண்டாவது குமார் டார்ஜிலிங்கில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அவர் உடம்பு எரிக்கப்பட்டுவிட்டது. இப்போது, தானே இரண்டாவது குமார் என்று சொல்லிக் கொள்ளும்  சந்நியாசி உண்மையானவர் இல்லை. அவர் ஒரு போலி. அவர் உண்மையான குமார் என்று நினைத்து அவரிடம் வரி செலுத்துபவர்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்கமுடியாது.
இப்படிக்கு, ஜெ.ஹ.லின்ஸ்டே, டாக்கா கலெக்டர்.
0
1924ம் ஆண்டு வரை சந்நியாசி டாக்காவில் தன்னுடைய சகோதரிகளின் வீட்டுக்கு அருகில் தங்கினார். பின்னர் அவர் கல்கத்தா சென்றுவிட்டார். அங்கு அவர் நிறைய பேரைச் சந்தித்தார். வைசிராய் வழங்கிய விருந்து உபசாரங்களில் கலந்துகொண்டார். மேஜோ குமார் ஓட்டுவது போன்று கல்கத்தா வீதிகளில் டாம் டாம் காரில் சுற்றி வந்தார். நில உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பினரானார். கிழக்கு வங்காள ஃப்லோடிலா நிறுவனத்தின் (East Bengal Flotilla Service Ltd) இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிறுவனம் சிறு போர்க் கப்பல்களை தயார் செய்து விற்று வந்தது. இந்நிறுவனத்தின் உரிமையாளர், அப்போது கல்கத்தாவிலேயே பிரபலமான கோடீஸ்வரர் திரு ஹலோதர் ராய்.
சந்நியாசி டாக்கா வந்து சரியாக 9 ஆண்டு காலம் கழித்து, அதாவது மேஜோ குமார் இறந்ததாக சொல்லப்பட்ட பிறகு 21 ஆண்டுகள் கழித்து, டாக்கா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், சந்நியாசியின் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. வாதி, குமார் ராமேந்திர நாராயண் ராய் என்ற பெயரில் சந்நியாசி. பிரதிவாதி, பிபாவதி தேவி குமார் ராமேந்திர நாராயண் ராயின் மனைவி. சந்நியாசியால் வழக்கில் கோரப்பட்ட பரிகாரம், தன்னை ராமேந்திர நாராயண் ராயாக அறிவிக்கவேண்டும். அதாவது நீதிமன்றம், தன்னை பாவல் ஜமீனின் இரண்டாவது குமாராக அங்கீகரிக்கவேண்டும் என்பதே.
இப்படி ஒரு பரிகாரம் கேட்டால், இறந்ததாகக் கருதப்படும் இரண்டாம் குமார் தானே என்று சந்நியாசி நிரூபிக்கவேண்டும். கூடவே இரண்டாவது குமார் இறக்கவில்லை என்றும் நிரூபிக்கவேண்டும். முடியுமா? அரசாங்கமும் ஆவணங்களும் அவருக்கு எதிராகவே இருந்தன.  சந்நியாசி ஒரு போலி என்று நான் நிரூபிப்பேன் என்று சத்தியபாபு உறுதி எடுத்திருந்தான். ஜமீன் மக்கள் அனைவரும் சந்நியாசி பக்கம். அரசாங்கம் சத்திய பாபுவின் பக்கம். மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு போர் நடக்கவிருந்தது. டாக்கா நீதிமன்றம்தான் போர்க்களம்.
0
சுதந்தரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த காலம் அது. இந்த வழக்கு நடப்பதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர்தான், இன்னோரு பிரபல வழக்கு கல்கத்தா அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது – அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு. அந்த வழக்கில் பிரபல சுதந்தரப் போராட்ட வீரர்களான அரவிந்த கோஷ், அவர் தம்பி பரிந்திர குமார் கோஷ், ராஷ்பிகாரி போஸ், பாகா ஜத்தின், குதிராம் போஸ், பரஃபுல்லா சாக்கி போன்றோர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. சுதந்தரப் போராட்ட வீரர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய கல்கத்தா மாஜிஸ்திரே ட் கிங்கிஸ்ஃபோர்டை கொல்லும் நோக்கில் அவர்மீது குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக குண்டு மாஜிஸ்திரேட் வந்த குதிரை வண்டி மீது விழாமல், பக்கத்தில் பயணம் செய்துகொண்டிருந்த இரண்டு ஆங்கிலேயப் பெண்களின் குதிரை வண்டியில் விழுந்தது. இருவரும் பரிதாபமாக இறந்துபோயினர்.
இந்த சம்பவமும், அதன் தொடர்ச்சியாக தொடரப்பட்ட வழக்கும் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பொதுமக்களும் ஆங்கிலேய அரசாங்கமும் சுதந்தரப் போராட்டத்தை எப்படி தங்களுடைய சார்பு நிலையில் பார்த்தார்களோ, அதே சார்பு நிலையில்தான் இந்த வழக்கும் பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு எந்த சார்பு நிலையும் இருக்கக்கூடாது. அவர் நடுநிலையாகத்தான் வழக்கை விசாரிக்க வேண்டும். அவர் நியாயமான முறையிலும், சாட்சிகளின் அடிப்படையிலும், ஆவணங்களின் பரிசீலனையின்படியும் தான் தீர்ப்பு வழங்கவேண்டும். இரண்டு தரப்பிலும் சாட்சிகள் இருந்தபோதும், ஒருவரது அடையாளத்தைத் தீர்மானிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், தீர்மானித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் நீதிபதி பன்னாலால் பாசு.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான, மன்னிக்கவும் கணவன் என்று ஏற்றுக்கொள்ளப்படாதவருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான வழக்கு விசாரணை தொடங்கியது. இரண்டு தரப்பிலும் பிரபல வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். வழக்கு விசாரணை நடந்த நீதிமன்றத்தில், வரலாறு காணாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. மக்கள் ஒருவரையொருவர் முந்தியடித்துக்கொண்டு நீதிமன்றத்தில் இடம்பிடிக்க முனைந்தார்கள். வழக்கை பார்ப்பதற்காக மட்டுமல்ல, வழக்கின் நாயகன், நாயகி என்று வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரையும் பார்க்கும் ஆர்வம் அனைவருக்கும் இருந்தது.
வழக்கு 1930ம் ஆண்டு தொடுக்கப்பட்டாலும், வழக்கு விசாரணை தொடங்கியது என்னவோ 1933ம் ஆண்டு டிசம்பர் வாக்கில்தான்.
சந்நியாசி கூண்டில் ஏறினார். அவரை முதலில் விசாரணை செய்தது, அவருடைய வழக்கறிஞர் திரு. பி.சி. சாட்டர்ஜி. முதல் விசாரணை முடிவதற்கு மூன்று நாள்களானது. அனைவரும் எதிர்பார்த்த அந்த முக்கியமான கேள்வி கேட்கப்பட்டது. இறந்துபோனதாக சொல்லப்படும் மேஜோ குமாரான நீங்கள் எப்படி உயிர் பிழைத்தீர்கள்? எப்படி சந்நியாசி ஆனீர்கள்?
சந்நியாசி பின்வருமாறு பதிலளித்தார்.
“டார்ஜிலிங்கில், இடுகாட்டில் நான் முனங்கிக் கொண்டிருந்தேனாம். அப்போது அருகாமையில் இருந்த நான்கு சாதுக்கள் என்னைக் காப்பாற்றினர். எனக்கு நினைவு திரும்புவதற்கு வெகு நாள்களானது. மீண்டபோது, பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போனது. அந்த சாதுக்களில் தலைமை சாதுவான தரம்தாஸ், என்னை அவருடைய சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார். என்னை சுந்தர்தாஸ் என்று அழைத்தனர். பின்னர் அந்த சாதுக்களுடன் நான் காசிக்குச் சென்றேன். காசியில் – ஆஷிகாட்டில் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்த பின்னர், அங்கிருந்து நாங்கள் இந்தியாவின் வட மாநிலங்கள் அனைத்துக்கும் சென்றோம். சுமார் 2,000 மைல்கள் கடந்திருப்போம். பொதுவாக நாங்கள் அனைத்து இடங்களுக்கும் நடந்தே சென்றோம். காசியிலிருந்து முதலில் நாங்கள் இமய மலைக்குச் சென்றோம். அங்கிருந்து கீழிறங்கி அமர்நாத் குகையில் உள்ள பனி லிங்கத்தைத் தரிசித்தோம். அமர்நாத்தில், என் குருவான தரம்தாஸிடம் நான் தீட்சைப் பெற்றேன். அமர்நாத்திலிருந்து ஸ்ரீநகர் சென்றோம். அங்கு என் குருவின் பெயரைக் கையில் பச்சைக்குத்திக் கொண்டேன். ஸ்ரீநகரில் இருந்து நேபாளம் சென்றோம். காட்மண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயிலுக்குச் சென்றோம். பசுபதிநாத் கோயிலில் ஓராண்டு காலம் தங்கினோம். அங்கிருந்து இன்னும் வடக்கே உள்ள தீபத்துக்குச் சென்றோம். தீபத்தில் உள்ள புத்த கோயிலில் லாமாக்களுடன் ஓராண்டு தங்கினோம். தீபத்திலிருந்து மறுபடியும் நாங்கள் நேபாளத்துக்கு வந்தோம். நேபாளத்தில் பரஹு சத்ரா என்ற ஒரு மலைஸ்தலத்தில், டாக்கா என்ற பெயர் நினைவுக்கு வந்தது. அந்தப் பெயரை நான் உச்சரித்தேன்.
தரம்தாஸ் என்னைப் பார்த்து, “நீ என்ன சொன்னாய்?” என்று கேட்டார். “நீ யார் என்று உனக்கு நினைவுக்கு வந்து விட்டதா? ”
“அது என் வீடு” என்று பதிலளித்தேன்.
“நீ போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. கிளம்பு” என்றார் என்னுடைய குரு.
“நான் உங்களை எப்படி மறுபடியும் சந்திப்பேன்?”
“நான் காசியில் இருப்பேன். நீ மாயையைக் கடந்துவிட்டால், சந்நியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவாய்” என்று பதிலளித்தார்.
இரண்டு நாள்களில் மற்ற சாதுக்களை விட்டுப் பிரிந்தேன். நான் அவர்களுடன் 11 ஆண்டுகள் ஒன்றாகக் கழித்திருக்கிறேன். அவர்களுடன் பல தூர தேசங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்களை விட்டுப் பிரியமுடியாமல் பிரிந்தேன். இறுதியில் டாக்கா ரயில் நிலையத்துக்குகு வந்தேன்.”
முதல் விசாரணையில் சந்நியாசி வெளிப்படுத்திய விஷயங்கள் இவை.
பிபாவதியின் வழக்கறிஞர் தன்னுடைய குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார். சந்நியாசி சொன்னது எதற்கும் ஆதாரம் இல்லை. எனவே அந்த சாட்சியம் உண்மை என்பதை எப்படி எடுத்துக்கொள்ளமுடியும்? அவருடைய வாதங்கள் ஏன் ஜோடனையாக இருக்கக்கூடாது?
இந்த வாதம் ஏற்புடையதாகவே இருந்தது.
தான் சொன்னது உண்மைதான் என்பதை நிரூபிப்பதற்கு, நான்கு சாதுக்களை நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்தினார் சந்நியாசி. அந்த நான்கு சாதுக்களின் பெயர்களும் பின்வருமாறு.  தரம் தாஸ், பீதம்தாஸ், லோக்நாத் தாஸ் மற்றும் தர்ஸன் தாஸ் என்ற நேக்கு. இதில் முதலில் குறிப்பிட்ட மூன்று சாதுக்களும் சந்நியாசம் பெற்றுவிட்டனர். நான்காமவர் சிறு வயதுக்காரர். இன்னும் சன்னியாசம் பெறவில்லை. ஒருவர் பின் ஒருவராக கூண்டில் ஏறி நால்வரும் சாட்சியம் அளித்தனர். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியே சாட்சியம் அளித்தனர். அவர்கள் சொன்னதற்கும், பாவல் சந்நியாசி சொன்ன சாட்சியத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
“நாங்கள் நாக சந்நியாசிகள். நாங்கள் நால்வரும் சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள கோயில்களுக்கும், புனிதத் தலங்களுக்கும் சென்று கொண்டிருந்தோம். அப்படிப் போகும் வழியில், நாங்கள் டார்ஜிலிங்குக்கு வந்தோம். அங்கு ஊருக்கு வெளியில் தங்கியிருந்தோம். நாங்கள் பிச்சை எடுத்து உணவருந்தினோம். நாங்கள் இருந்த பகுதியில் குடியானவர்களும் கூலித் தொழிலாளர்களும் இருந்தனர். அவர்கள் எங்களுக்கு அளித்த உணவை உண்டு வந்தோம்.
மே மாதம் 8ம் தேதி அன்று இரவு நன்கு இடி இடித்துக்கொண்டிருந்தது. இருட்டில் குளிர் காய்ந்துகொண்டிருந்தோம். அப்போது தொலைவில் ஹரிபோல்! ஹரிபோல்! என்று முழக்கம் கேட்டது. இதற்கிடையில் இடி, மின்னலுடன் நன்கு மழை ஆரம்பித்துவிட்டது.  அதனால் அந்த முழக்கம் நின்றுபோனது.  தரம் தாஸ், நேக்குவை வெளியே என்ன நடக்கிறது என்று பார்க்கச் சொன்னார். நேக்கு வெளியே பார்த்துவிட்டு வந்து, வெளியே சில மனிதர்கள் மழையில் கூச்சல் போட்டுக்கொண்டு இங்கேயும் அங்கேயும் ஓடுகின்றனர் என்றான்.
கொஞ்ச நேரம் கழித்து இடி, மின்னல், மழை எல்லாம் ஓய்ந்து போனது. அந்த இடத்தில் பெரும் அமைதி நிலவியது. தரம் தாஸ் மறுபடியும் நேக்குவை அழைத்து, வெளியே என்ன நிலவரம் என்று பார்த்து வரச்சொன்னார். வெளியே சென்ற நேக்கு சிறிது நேரத்திற்கெல்லாம் ஓடிவந்து, பாபாஜி வெளியே வாருங்கள், யாரோ ஒருவர் முனகும் சத்தம் கேட்கிறது என்றான். லோக்நாத், நேக்குவுடன் ஒரு விளக்கை ஏந்திக்கொண்டு விரைந்து சென்றார். இருவரும் பாறையின் அடிவாரத்திலிருந்து சத்தம் வரும் இடத்தை நோக்கிச் சென்றனர். அங்கு வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட ஒரு மனிதன் பாடையில் கிடத்தப்பட்டிருந்தான். துணியை நீக்கிவிட்டு இருவரும் பார்த்தார்கள். வலி தாங்கமுடியாமல், ஒரு மனிதன் தவித்துக்கொண்டிருந்தான். அவனது கால்கள் கட்டப்பட்டிருந்தன. கால்கட்டை அவிழ்த்து விட்டார் லோக்நாத். மூக்கில் கை வைத்துப் பார்த்தார். பின்னர் நேக்குவைப் பார்த்து இந்த மனிதன் உயிருடன்தான் இருக்கிறான், சீக்கிரம் சென்று மற்ற இரண்டு சாதுக்களையும் கூட்டிவா என்று கட்டளையிட்டார். பின்னர் நாங்கள் நால்வரும், அந்த மனிதனை நாங்கள் வசித்த குடிலுக்குத் தூக்கி வந்தோம்.
அந்த மனிதனின் உடல் நனைந்திருந்தது. அவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். நடுங்கிக் கொண்டிருந்த அவன் உடம்பைச் சுற்றிக் கம்பளி போடப்பட்டது. நாங்கள் இருந்த குடிலில் அனைவருக்கும் இடமில்லை என்பதால், அந்த மனிதனை தூக்கிக்கொண்டு, மலையின் அடிவாரத்துக்குச் சென்றோம். அங்கு எங்கள் கண்ணில் ஒரு குடில் தென்பட்டது. ஆனால் அதன் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. தரம்தாஸ் கதவை உடையுங்கள் என்றார். மழைநீரில் கதவு நனைந்து ஈரப் பதத்துடன் இருந்ததால் லோக்நாத்தும், நேக்குவும் கதவில் பூட்டப்பட்டிருந்த சங்கிலியை இழுத்தவுடன் பூட்டு கையோடு உடைத்துக்கொண்டு வந்துவிட்டது. குடிசையின் உள்ளே ஒரு கட்டில் மட்டும் இருந்தது. நாங்கள் தூக்கி வந்த மனிதனை அந்தக் கட்டிலில் கிடத்தினோம். துணியில் நெருப்பை வளர்த்து, கட்டிலுக்கு அருகாமையில் வைத்தோம். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தவனின் உள்ளங்கைகளையும், பாதங்களையும் நாங்கள் நால்வரும் மாறி மாறி தேய்த்துவிட்டோம். ஒரு மணி நேரத்தில் அந்த மனிதனின் நடுக்கம் நின்றது. மூச்சுவிடுவது சீரானது.  ரத்த ஓட்டம் பரவியது.
சுமார் நான்கு நாள்கள் அந்த மனிதன் கோமாவில் இருந்தான். ஒரு நாள் காலையில், தரம்தாஸ் அந்த மனிதனின் மீது சுற்றப்பட்டிருந்த கம்பளியை எடுத்துப் பார்த்து போது, அவனது உடம்பில் கொப்பளங்கள் சீழ் பிடித்திருப்பது தெரியவந்தது. இவனுக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்று தரம்தாஸ் தெரிவித்தார். ஐந்தாவது நாள் அந்த மனிதனுக்கு நினைவு திரும்பியது. அவன் கண்களைத் திறந்து பார்த்தான். ஏதோ உளறினான். எங்களுக்கு அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. அவனது கண்கள், விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு சாது அவனைப் பார்த்து இவன் புத்திசுவாதினம் இல்லாதவன் போல் நடந்து கொள்கிறான் என்றார். மற்றொரு சாது இவன் பிழைத்துவிட்டான், இவனுக்கு நாம் உதவி செய்யவேண்டும் என்றார். நாங்கள் அதற்கு ஒப்புக்கொண்டோம்.
நாங்கள் தங்கியிருந்த குடிசை, கிரிஜா பாபு என்பவனின் கிடங்கு. நாங்கள் ஒரு மனிதனுக்கு உதவி செய்வதைப் பார்த்து, எங்களை அங்குத் தங்க அனுமதித்தான். கிரிஜாபாபு பணம் செலவழித்து சில ஆயுர்வேத மருந்துகளை வாங்கிக்கொடுத்தான். நாங்கள் பிச்சை எடுத்து வந்த உணவை அந்த மனிதனுக்கு கொடுத்தோம். சிறிது சிறிதாக அந்த மனிதன் குணமடைந்தான். ஓரளவுக்கு அவன் குணமடைந்த பிறகு, அவன் யாரென்று கேட்டோம். ஆனால் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவன் பேந்த பேந்த பார்த்துக்கொண்டு, ஏதோ உளறிக் கொண்டிருந்தான்.
தரம்தாஸ் மற்ற சாதுக்களிடம், “நாம் பொறுமையாக இருக்கவேண்டும்;  காலம் வரும்போது எல்லா விஷயமும் விளங்கும்; அது வரைக்கும் நாம் காத்திருக்கவேண்டும்; இவன் இனிமேல் என்னுடைய சிஷ்யன்; இது கர்ம வினை” என்றார்.
இரண்டு வாரத்துக்குப் பிறகு, அந்த மனிதனை அழைத்துக்கொண்டு நால்வரும் டார்ஜிலிங்கை விட்டுச்சென்றோம். தரம்தாஸ் தன்னுடைய புதிய சிஷ்யனுக்கு சுந்தர்தாஸ் என்று பெயரிட்டார். அங்கிருந்து நாங்கள் ஐவரும் பல ஊர்களுக்குச் சென்றோம்.
அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பதைத்தான், பாவல் சன்னியாசி தன்னுடைய சாட்சியத்தில் பதிவு செய்தார்.”

0
சாதுக்கள் அனைவரும் ஹிந்தி பேசியதாலும், அவர்களுடன் 12 ஆண்டுகள் சுந்தர்தாஸ் கழித்ததாலும் அவனும் அரைகுறையாக ஹிந்தி பேசினான். பிபாவதி தேவியின் வழக்கறிஞர் திரு ஏ.என்.சவுத்ரி பாவல் சந்நியாசியை மேற்சொன்ன விவகாரங்களில் குறுக்கு விசாரணை செய்தார். நான்கு சாதுக்களையும் குறுக்கு விசாரணை செய்தார். பாவல் சந்நியாசியை மட்டும் சுமார் ஐந்து நாள்கள் குறுக்கு விசாரணை செய்தார். மேஜோ குமாருடைய குடும்பம், அவருடைய மூதாதையர், அவர் வளர்ந்த சூழ்நிலை, அவரை வளர்த்தவர்கள், அவருடைய சொந்தக்காரர்கள் என்று பலவற்றையும் குறித்து குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
பாவல் சந்நியாசி அனைத்துக்கும் பொறுமையாக பதில் சொன்னார். அந்தரங்கமான விஷயங்கள்கூட விட்டுவைக்கப்படவில்லை. மேஜோ குமார் ஒரு பெண் பித்தன் என்பதிலிருந்து அவன் எந்தெந்த விலைமாதர் வீட்டுக்கெல்லாம் சென்றான் போன்றவை வரை அனைத்தும் விவாதிக்கப்பட்டன.
மேஜோ குமார், அரண்மனையில் வசதியான சூழ்நிலையில் வாழ்ந்தவர். மேற்கத்திய கலாச்சாரமும் பழக்கவழக்கமும் அவருக்கு அதுப்படி என்பதால் அவை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக