திங்கள், 25 ஜூன், 2012

அண்ணா ஹசாரே ஆட்டம் குளோசானது ஏன்?

உங்கள் நினைவுகளை ஓராண்டுகளுக்கு முன் இட்டுச் செல்லுங்கள். அன்றைக்கு தேசத்தின் அரசியல் அரங்கில் விவாதப் பொருட்களாக இருந்ததென்ன?  ஊடகங்கள் எதைப் பேசிக் கொண்டிருந்தன? அது ஊழல் ஒழிப்பின் காலமாய் இருந்தது. தேசத்தின் அரசியல் அரங்கில் அப்போது தான் ஒரு அவதாரம் பிறந்திருந்தது. அந்த அவதாரம் தான் நடுத்தர வர்க்கத்தினரின் கனவு நாயகனாய் வலம் வந்தார். அவரது குரலுக்கு தேசமெங்கும் பல்வேறு நகரங்களில் சில நூற்றுக்கணக்கான இளைஞர் பட்டாளம் திரண்டு வந்தது – அதை பல ஆயிரங்கள் என்று சிலர் கள்ளக் கணக்குக் காட்டியது தனிக்கதை. ஆனாலும்,  அவர் உறக்கத்திலிருந்த தேசத்தின் ஆன்மாவைப் பிடித்து உலுக்கி எழுப்பி விட்டதாக ஊடகங்கள் ஆரவாரத்துடன் அறிவித்தன.
அவர் தான் அண்ணா ஹசாரே.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் அவரது புகழ்பெற்ற ஆகஸ்டு புரட்சிக்கான முன் தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்தன. ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் ‘இதோ அடுத்த இரண்டு மாதங்களில் ஊழல் பூதம் புட்டிக்குள் அடைக்கப்பட்டு விடும்’ என்று தீர்க்கதரிசனங்களை உரைத்து வந்தன. இணையத்தின் சமூக வலைத்தளங்களில் ஐ.டி துறையைச் சேர்ந்த இளைஞர்கள் இருபத்தோராம் நூற்றாண்டின் காந்தியைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளில் சொக்கிப் போய்க் கிடந்தனர். ‘நானும் அண்ணா தான்’ குல்லாய் எங்கே கிடைக்கும் என்கிற விசாரிப்புகளாலும் பதில்களாலும் மின்னஞ்சல் பெட்டிகள் நிரம்பி வழிந்தன.

ஒரு தேவதூதனின் வருகையைப் போல் நிகழ்ந்தது அண்ணாவின் பிரவேசம். ஓரு தீர்க்கதரிசியின் காலடியில் அமர்ந்திருப்பதைப் போல் அவரது வார்த்தைகளுக்காக நடுத்தரவர்க்கத்தின் ஒரு பிரிவினர் காத்துக் கிடந்தனர். இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளத்தக்க கூட்டம் அல்ல என்றாலும், இவர்கள் தேசத்தின் கவனத்தை ஈர்த்தனர். மெழுகுவர்த்தி ஊர்வலங்களால் கடற்கரைகளையும் பூங்காக்களையும் வார இறுதிகளில் இவர்கள் மொய்த்தனர். இந்த வர்க்கத்தின் அபிலாஷைகளை பிரதிபலித்த ஊடகங்கள் – இது தான் மொத்த இந்தியாவின் உள்ளக்கிடக்கை என்று அறிவித்தன.
இதோ, ஒருவருடம் ஓடி விட்டது. இப்போது என்னவானார் அண்ணா ஹசாரே? அவரது கோரிக்கைகள் என்னவானது? அவருக்குக் கூடிய கூட்டம் என்ன செய்து கொண்டிருக்கிறது? ஊழலுக்கு எதிரான இந்தியா என்னவானது?  அதற்கு முன், அண்ணாவின் திக் விஜயம் நிகழ்ந்த சூழலைப் புரிந்து கொள்வோம்.
அது, உலகமெங்கும் பொருளாதார வீழ்ச்சியின் வலி பரவிக் கொண்டிருந்த நேரம். பல்வேறு நாடுகளின் அரசுகளும் பொருளாதாரப் புதைகுழியில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தன. மக்கள் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை வெட்டுவது, சமூகக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்த மக்களின் சேமிப்பைத் திருடி நிதிச்சந்தையில் இறக்குவது, பொதுத்துறைகள் தனியார்மயமாக்கலின் விளைவாய் வேலையிழப்புகள் என்று வரிசையாக எடுக்கப்பட்ட ‘சீர்திருத்த’ நடவடிக்கைகளின் விளைவாய் மக்களின் ஆத்திரத்தை அரசாங்கங்கள் சம்பாதித்துக் கொண்டன. அதன் விளைவாய் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு வகைப்பட்ட போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின.
அமெரிக்காவில் வால் வீதி ஆக்கிரமிப்புப் போராட்டம், லண்டனில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள், கிரீஸ் மக்களின் போர்குணமிக்க போராட்டம், மத்திய கிழக்கு நாடுகளில் வண்ணப் புரட்சிகள் என்று உலகமே மக்கள் போராட்டங்களால் கொதிநிலையில் நின்றது. அதே நேரத்தில் தான் இந்தியாவில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் அம்பலமாகத் துவங்கியிருந்தன. 2ஜி அலைக்கற்றை ஊழலின் பிரம்மாண்டம் மக்களைத் திகைக்க வைத்திருந்தது. ஆங்கிலம் அறிந்த நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் புழங்கும் தேசிய ஊடகங்களின் ப்ரைம் டைம் ஸ்லாட்டுகளில் ஊழல் முறைகேடுகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் கதைகளே நிறைத்திருந்தன.
பிற நாடுகளில் மக்களின் ஆத்திரம் அமைப்பாக்கப்படாமலும், தெளிவான அரசியல் புரிதல் இல்லாத தலைமைகளாலும் வழிகாட்டப்பட்டு அமைப்பு மாற்றம் என்பதை விடுத்து ஆட்சி மாற்றம் என்பதாக சுருங்கிக் கொண்டது. இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் இந்த அதிருப்தியுற்ற நிலையை ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்பவராக ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டவர் தான் அண்ணா ஹசாரே. அண்ணாவின் ‘ஆகஸ்டு புரட்சி’ மக்களை நம்பி நடத்தப்பட்டதோ இல்லையோ ஊடகங்களைப் பெரியளவில் சார்ந்திருந்தது. இப்படி ஒரு ‘இயக்கம்’ ஊடகங்களுக்கும் தேவைப்பட்டது. ஆளும் வர்க்கத்துக்கும் தேவையாய் இருந்தது.
ஊடகங்களைப் பொருத்தளவில், ஏற்கனவே போரடிக்கும் அளவுக்கு ஊழல் கதைகளைப் பேசியாகி விட்ட நிலையில் அதற்கு மேலும் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திச் செல்வதற்கு வெறும் முறைகேட்டுக் கதைகள் மட்டுமே போதுமானதாக இல்லை. திரைக்கதையில் வில்லனைப் பற்றிய இமேஜ் பில்டப் அளவுக்கு அதிகமாகி விட்ட நிலையில், கிளைமேக்ஸில் வில்லனைப் புரட்டியெடுக்கப் போகும் நாயகனை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டத்தில் இருந்தன.
ஆளும் வர்க்கத்துக்கோ, மக்களின் ஆத்திரமும் அதிருப்தியும் ஒட்டுமொத்த கட்டமைப்பையே குலைக்கும் விதமான அமைப்புகளின் வழிகாட்டுதலின் கீழ் செல்வதை விட, இருக்கும் சட்டகத்துக்குள்ளேயே அதற்கு ஒரு வடிகால் அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. இந்த இரண்டு தேவையையும் ஒரே நேரத்தில் கச்சிதமாகப் பூர்த்தி செய்தார் அண்ணா ஹசாரே.
அண்ணா முன்வைத்த ஊழல் ஒழிப்பு வழிமுறைகளின் அரைவேக்காட்டுத் தனம் பற்றி வினவில் ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. சுருக்கமாகச் சொன்னால், ஊழல் என்பதன் அடிப்படையைப் பற்றியோ, அதன் ஊற்றுமூலம் என்னவென்பதைப் பற்றியோ பேசாமல் ‘எல்லாத்துக்கும் காரணம் இந்தப் பாழாப் போன அரசியல்வாதிகள் தான்’ என்கிற எளிமையான, அபத்தமான பொதுமைப்படுத்தல்களும், அதற்குத் தீர்வாக கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்கும் ஒரு வழிமுறையும் தான் அண்ணா ஹசாரேவிடம் இருந்தது. இதில் லஞ்சத்தையும் ஊழலையும் போட்டுக் குழப்பிக் கொண்டு பிரம்மாண்டமான ஊழல்களையும் சில்லறை லஞ்சத்தையும் ஒரே தராசில் நிறுத்தி பார்த்தார். வேறு வகையில் சொன்னால் ஜன்லோக்பால் என்பது போகாத ஊருக்கான வழி.
அதைக் கூட அரசு ஏற்றுக் கொள்ளாது என்கிற நிலை வந்த போது, “ஏதோ கொஞ்சம் மீட்டருக்கு மேல போட்டுக் குடுங்க பாஸு” என்கிற அளவுக்கு இறங்கி வந்தனர். ஜன்லோக்பாலின் கேந்திரமான கோரிக்கைகள் எனப்பட்டவைகளை மாற்றிக் கொள்ளவும் கூட முன்வந்தனர். கடைசியில் எதையாவது நிறைவேற்றுங்கள் ஆனால், அதற்கு ஜன்லோக்பால் என்று பெயர் வையுங்கள் என்கிற அளவுக்கு இறங்கி வந்தும் அரசு இன்று வரை பிடி கொடுக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க, இந்த குத்துப்பிடி சண்டையின் பக்கவிளைவாக நடந்தவைகள் சுவாரசியமானது.
அண்ணா குழுவினர் ஒருபக்கம் அரசை எதிர்த்து சண்டமாருதம் செய்து கொண்டிருக்கும் போதே அவர்கள் செய்த முறைகேடுகளை அரசு அம்பலப்படுத்தத் துவங்கியது. முதலில் மாட்டியவர் கிரண் பேடி.
நாடெங்கும் விமானத்தில் பறந்து கல்லூரி மாணவர்களிடையேயும் ஐ.டி துறை இளைஞர்களிடையேயும் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தின் மகோன்னதம் பற்றி பல அரங்கக் கூட்டங்களை நடத்தி வந்த கிரண் பேடி அந்தப் பயணங்களுக்காக ஏற்பாட்டாளர்களிடம் எக்ஸ்கியூட்டிவ் வகுப்புக்கான முழுத் தொகையையும் வசூலித்துக் கொண்டு சாதா வகுப்புச் சலுகைக் கட்டணத்தில் பயணித்துள்ளார் என்பது முதலில் வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் நடத்தும், என்.ஜி.ஓ அமைப்பிற்கு பல்வேறு பல்வேறு பன்னாட்டுக் கம்பெனிகள் நிதியுதவி செய்திருப்பதும் அம்பலமானது.
கிரண் பேடியைத் தொடர்ந்து, முகமூடியைத் தொலைத்தவர் அரவிந்த் கேஜ்ரிவால். அண்ணாவின் அழைப்பைத் தொடர்ந்து ஊழல் ஒழிப்பு இயக்கத்திற்குக் குவிந்த நிதியைப் பெருமளவில் தனது சொந்த என்.ஜி.ஓவின் கணக்கில் அரவிந்த் வரவு வைத்தது அம்பலமானது. அதைத் தொடர்ந்து, அவரது என்.ஜி.ஓ சில நிதி முறைகேடுகள் ஈடுபட்டிருக்கும் விவகாரமும் அம்பலமாகத் துவங்கியது. இவைகளின் உச்சகட்டமாக, அண்ணா ஹசாரேவின் மீது முன்பே இருந்த நிதி முறைகேட்டுப் புகார்களெல்லாம் ஆளும் வர்க்கத்தால் செல்ல மிரட்டலுக்காக தோண்டியெடுக்கப்பட்டு வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது.
என்ன தான் மக்கள் எதிர்ப்புகளுக்கான ஒரு ஆபத்தில்லாத வடிகாலை ஆளும் வர்க்கம் அடையாளம் கண்டிருந்தாலும், இந்த ஆட்டத்திற்கென்றே உள்ள விதிகளையும் எல்லைகளையும் இவர்கள் கடந்து விடக்கூடாது என்பதில் ஆளும் வர்க்கம் உஷாராகவே நடந்து கொண்டது.
அண்ணாவின் ஆகஸ்டு போராட்டத்தை அடுத்து அவரது எந்தக் கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளாமல் “ஆகட்டும் பார்க்கலாம்” பாணியில் அரசு கொடுத்த பதிலையே தமது வெற்றியாக அறிவித்துக் கொள்ளும் அவல நிலைக்கு அண்ணா குழுவினரும் அவர்களை ஊதிப் பெருக்கிக் காட்டிய ஊடகங்களும் தள்ளப்பட்டன.
அதைத் தொடர்ந்து ஜன்லோக்பால் மசோதாவை உலகிலேயே ஆழமான கிணறான இந்திய பாராளுமன்றத்துக்குள் தூக்கிப் போட்டு விட்டதால், வேறு வழியின்றி மீண்டும் ஒரு அறப்போராட்டத்தை டிசம்பர் மாதம் நடத்துவதாக அண்ணா அறிவித்தார். தில்லி ஜந்தர் மந்தரில் நடந்த முதல் அறப்போராட்டத்தைக் காட்டிலும் அதிகளவிலான கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதன் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர்கள் அதற்குப் பொருத்தமாக அண்ணா ஹசாரேவின் சொந்த மாநிலத்தையே போராட்டக் களமாக தேர்ந்தெடுத்தனர்.
சுமார் 50,000 பேரில் இருந்து ஒருலட்சம் பேர் வரை வரப்போகிறார்களென்றும் மும்பை நகரமே குலுங்கப் போவதாகவும் ஏகத்துக்கும் பில்டப் ஏற்றினர். அதிகளவிலான கூட்டத்தை ஏற்பாடு செய்ய அர்விந்த் கேஜ்ரிவாலின் பின்னே இருந்த சகல விதமான என்.ஜி.ஒ வலைப்பின்னலையும் களமிறக்கி விட்டனர். மும்பை உண்ணாவிரதம் துவங்குவதற்கு சுமார் ஒருமாதம் முன்பிருந்தே ஊடகங்களிலும் இந்தத் தலைப்பு விவாதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. ஒருலட்சம் பேர் வரையிலான கூட்டத்தை எதிர்பார்த்து, அத்தனை பேருக்குமான விரிவான மைதான ஏற்பாடுகளையும் செய்து வைத்து விட்டுக் காத்திருந்தனர்.
உடல் நிலை சரியில்லை, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்ற சிலபல சில்லறை சீன்களைத் தொடர்ந்து கடைசியில் உண்ணாவிரதத்திற்கு அண்ணா வந்தார் – ஆனால், மக்கள் வரவில்லை. வெறும் ஒரு சில நூறு பேர் மட்டுமே வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். அதிலும் பெரும்பான்மையாக ரிடையர்டு ஆன சீனியர் சிட்டிசன்கள் தான் இருந்தனர். முகத்தில் அப்பிய கரியைத் துடைத்துக் கொண்டே மும்பை மைதானத்திலிருந்து கூடாரத்தைக் கலைத்தனர் அண்ணாவின் சீடர்கள்.
பாபா-ராம்தேவ்இதற்கிடையே அண்ணாவின் இயக்கத்துக்கு இணையாக சீன் காட்டிக் கொண்டிருந்தார் பாபா ராம்தேவ். ஏழு மலை ஏழு கடல் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஒரு குகைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் கருப்புப் பணத்தை அப்படியே லபக்கென்று கைப்பற்றி வந்து விட்டால் போதும் – நாடே சுபிக்ஷமாகி விடும் என்று அறிவித்து, அதற்கு ஒரு இயக்கமும் எடுத்தார். ஊழல் பிரச்சினையா, கருப்புப் பணம் பிரச்சினையா என்பதே விவாதம் என்று இவர்கள் வெளியே சொல்லிக் கொண்டாலும் ஊடக வெளிச்சத்தைக் கைப்பற்றுவது யார் என்பதே அதன் அடிநாதமாய் இருந்தது.
அண்ணா ஹசாரேவின் பின்னால் இருந்த என்.ஜி.ஓக்கள் அவருக்கு ஒருவிதமான அரசியலற்ற முகமூடியைக் கொடுத்திருந்தது – பாபா ராம்தேவோ வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் டவுசரை மாட்டிக் கொண்டு திரிந்தார். இன்றைய சூழலில் நவீன வலதுசாரி அரசியல் என்பதன் நேரடி வடிவம் அரசியலற்ற வாதமாக இருப்பதாலும், அதுவே நடுத்தர வர்க்கத்தைக் கவர்வதாக இருப்பதாலும் ஊடகங்களின் ஆதரவு பாபா ராம்தேவுக்குக் கிடைக்கவில்லை. இறுதியில் சுடிதார் மாட்டிக் கொண்டு எஸ்கேப்பானவர் அவ்வப்போது பாதுகாப்பான தொலைவில் நின்று கொண்டு குரைக்கும் பங்களா நாயாக மாறிப் போனார்.
இன்றோ முற்றிலும் அம்மணக்கட்டையாக அம்பலப்பட்டுப் போன பாபா ராம்தேவ், கருப்புப் பணத்தைக் இந்தியாவுக்குக் கொண்டு வர சரத்பவாரையும் முலாயம் சிங்கையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் ஜெயலலிதாவைக் கூட சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஊழலை ஒழிக்க அண்ணாவுக்கு திருட்டுக் கனெக்சன் புகழ் ரிலையன்ஸும் பெய்டு நுயூஸ் புகழ் டைம்ஸ் நவ்வும் துணையென்றால் கருப்புப் பணத்தை ஒழிக்க பாபா ராம்தேவுக்கு சரத்பவாரும் புரட்சித் தலைவியும் துணை.
இந்த கேலிக் கூத்துகளுக்கு இடையே அண்ணா ஹசாரே அறிவித்திருந்த நாடு தழுவிய எழுச்சி, நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டம், தில்லி ராம்லீலா மைதானத்தில் தர்ணா என்று எதுவுமே எதிர்பார்த்த அளவுக்கு செல்ப் எடுக்கவில்லை. இறுதியாக கடந்த மாத இறுதியில் தில்லி ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் ஒன்றை நடத்திப் பார்த்தார். அதுவும் கூட பெரியளவிலான தாக்கம் எதையும் உண்டாக்கவில்லை. ஏறக்குறைய ஜன்லோக்பால் செத்து பால் ஊற்றி புதைத்த இடத்தில் புல்முளைக்கவும் தொடங்கி விட்டது. இந்த முறை ஊடகங்கள் எழவு விசாரிக்கக் கூட வரவில்லை.
ஏன் இந்த வீழ்ச்சி? ஒரே வருடத்தில் அண்ணா ஹசாரே மலை உச்சியில் இருந்து படுபாதாளத்தில் வந்து விழுந்திருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது? அதற்கு முன் அண்ணாவின் தமிழக ‘ஜாக்கி’ ஜெயமோகன் என்ன சொல்கிறார்? – “அண்ணா ஹசாரேவை மக்கள் கைவிட்டு விட்டார்கள்” என்று பாதி உண்மையைச் சொல்கிறார். ஆனால், அதற்கு அறம் சார்ந்த போராட்டத்தை மக்கள் ஐயத்துடன் பார்ப்பது என்பதோடு அந்த ஐயத்துக்கு அறிவுஜீவிகளும் ஊடகங்களும் தான் காரணம் என்கிறார். இந்த விளக்கம் மட்டும் அர்னாப் கோஸ்வாமிக்குத் தெரிந்தால் நெஞ்சு வெடித்தே செத்துப் போவார்.
உண்மையில் ஊர் உலகத்துக்கு யார் என்றே தெரியாமல் மஹாராஷ்டிராவின் ஒரு கிராமத்தின் ஆலமரத்தடியில் சிவனேயென்று கிடந்த முகவரியில்லாத ஒரு பெரிசை இந்தளவுக்கு ஊதிப் பெருக்கி விட்டதே ஊடகங்கள் தான். அண்ணா ஹசாரேவின் ‘புகழ்’ உச்சியில் இருந்த போது தொலைக்காட்சி விவாத அரங்குகளில் அண்ணா ஹசாரேவின் மேல் சிறிய சந்தேகத்தையாவது யாராவது எழுப்பினால் அவரை “அப்ப நீயும் திருடன் தானே” என்கிற வகையில் தான் அவர்கள் கையாண்டனர்.
மக்கள் கைவிட்டு விட்டனர் என்பது தான் முழு உண்மை. மக்கள் கைவிட்டதன் பின்னால் அண்ணா விலைபோகாத சரக்கான பின் தான் ஊடகங்கள் கைவிட்டன. ஆனால், மக்கள் ஏன் கைவிட்டனர்? யார் இந்த மக்கள்?
இதில் தான் விஷயம் இருக்கிறது. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில் அதிகளவில் பங்கேற்றது மேட்டுக்குடி, நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கப் பிரிவினர் தான். குறிப்பாக உலகமயமாக்கலின் விளைவாய் புதிதாக உருவெடுத்திருந்த நடுத்தர வர்க்கப் பிரிவினர் தான் அண்ணா ஹசாரேவின் போராட்டங்களின் பின்னே அணிவகுத்தனர். ஆரம்ப காலத்தில் ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கு எதிரான குரல்கள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
தங்களது இனிமையான வாழ்வின் இடையே வந்து போகும் வார இறுதிக் கொண்டாட்டங்களாகவே அவர்கள் அண்ணாவின் போராட்டங்களை எதிர் கொண்டார்கள். பெரும்பாலான பங்கேற்பாளர்களும், அலுவலக விடுமுறையின் போது மட்டுமே போராட்ட மைதானத்தில் தலைகாட்டினர். சில தனியார் நிறுவனங்களே அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் தங்கள் ஊழியர்கள் கலந்து கொள்ளும் விதமாக அதிகாரப்பூர்வமற்ற விடுமுறைகளை அளித்தன.
அண்ணா ஹசாரேவின் ஆரம்ப கால வெற்றிக்கும் அதைத் தொடர்ந்த தோல்விக்கும் இந்த பிரிவினரின் வாழ்க்கை குறித்த கண்ணோட்டத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. வாழ்க்கையில் எதையுமே இழக்காமல், கொஞ்சமும் வலியை ஏற்றுக் கொள்ளாமல் ஒரு மாபெரும் சமூக நடவடிக்கையில் ஈடுபடும் போலி இன்பத்தையும் சுயதிருப்தியையும் வழங்கியதாலேயே அண்ணா ஹசாரே ஆரம்பத்தில் வெற்றியடைந்தார். ஆனால், இவர்களது வேகமான வாழ்க்கை முறையின் விதிப்படி ஆரம்பித்த எதுவும் உடனடியாக முடிந்து விடவேண்டும். அப்படி ஒரு முடிவுக்கு வராமல் ஜவ்வாக இழுத்துச் சென்று கொண்டிருந்தாதாலேயே இன்று அண்ணா ஹசாரே மண்ணைக் கவ்வியிருக்கிறார்.
இதைத் தான் நாங்கள் முன்பே சொன்னோம். அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்பது மேட்டுக்குடியினரின் பேஷன் பெரேடு. ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே பல்வேறு ஊழல் முறைகேடுகளுக்குக் காரணமான ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் ஆசீர்வாதத்தோடு நடக்கும் இந்த கேலிக் கூத்துகள் இறுதியில் நகைப்புக்கிடமான முறையில் ஒரு முடிவுக்கு வரும் என்றோம். இன்று அவ்வாறே நடந்தேறியுள்ளது. ஆனால் ஜெயமோகனுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. அகால மரணமடைந்த ஜன்லோக்பாலின் ஆவி சும்மா விடாது என்று பூச்சி காட்டுகிறார். அண்ணாவின் தோல்வி பற்றி குறிப்பிட்ட ஜெயமோகன், அதைத் தொடர்ந்து -
“அண்ணா தோற்றுவிட்டார். ஆனால் ஒரு காந்தியப்போராட்டம் நிகழ்ந்தவரை வெற்றியையே கொடுக்கும். இந்திய சாமானியனின் மனதில் ஊழலுக்கு எதிரான ஒரு எழுச்சியையும் உறுதிப்பாட்டையும் உருவாக்கியவரையில் அது வெற்றியே” என்கிறார்.
ஜெயமோகன் குறிப்பிடும் சாமானியன் வருடம் முழுவதும் பிசா, கென்டகி, எம்.டி.வி, ஐ.பி.எல், என்று வாழும் இந்திய நடுத்தர வர்க்கம் தான். இந்த வாழ்க்கைக்கு இடைஞ்சல் இல்லாத வரை நிகழும் எந்த ‘சமூக நடவடிக்கைக்கும்’ இவர்கள் எப்போதும் தயார் தான். ஆனால், அண்ணா ஹசாரே என்பது இவர்கள் ஏற்கனவே மூன்று நான்கு முறை பார்த்து சலித்து விட்ட பழங்கஞ்சிப் படம். இவர்கள் மனம் கவரும் புத்தம் புதிய மசாலா ரிலீஸ் வரும் வரை காத்திருப்பார்கள்.
மற்றபடி, ஜெயமோகனின் அதே ‘சாமானியன்’ தான் சூதாட்டம் என்று தெரிந்துமே ஐ.பி.எல் போட்டிகளை பீர் வழியும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். மேட்ச் முடிந்த்தும் பேஸ்புக்கில் “Bloody its all fixing dude”  என்று ஸ்டேட்டஸ் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.
எச்சிலூறும் நொறுக்குத் தினியை நேசிக்கும் அளவு இவர்கள் அண்ணா ஹசாரேவையும் நேசிக்கிறார்கள். நொறுக்குத் தினியை முழுங்கிவிட்டு குளிர் பானம் குடித்து வயிறு நிரம்பிய பிறகு இவர்கள் நொறுக்குத் தீனியை மறந்து விடுவார்கள். அடுத்தது ஐஸ் கிரீமாக இருக்கலாம். அதன்படி பார்த்தால் அது அமீர் கானா? தெரியவில்லை. காத்திருப்போம்.
_____________________________________________________
- தமிழரசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக