வியாழன், 28 ஜூன், 2012

தமிழர்கள்?இந்திய சிறைகளில் மீனவ தமிழர்கள்

கருணாநிதி – ஜெயலலிதாவுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கும் பாகிஸ்தான் அரசு!

Viruvirupu
இந்தியக் கடல் எல்லையைக் கடந்து தமது எல்லைக்குள் வந்து மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 311 இந்திய மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எங்கே நடந்தது இது? இலங்கையிலா? இல்லை, பாகிஸ்தானில்!
கராச்சியின் மாலிர் மாவட்ட சிறையில் அடைபட்டிருந்த இவர்கள் நேற்று காலை 10.30 மணிக்கு சிறையில் இருந்து பஸ்களில் ஏற்றப்பட்டு, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டது எப்படி தெரியுமா?
நேற்று கராச்சியில் விடுவிக்கப்பட்ட 311 இந்திய மீனவர்கள்
அதே எண்ணிக்கையிலான பாகிஸ்தான் மீனவர்கள், இந்தியச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், பாகிஸ்தான் கடல் எல்லையைக் கடந்து இந்திய எல்லைக்குள் வந்து மீன் பிடித்த குற்றத்துக்காக இந்திய எல்லையோரக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைபட்டிருந்தவர்கள்.
புதுடில்லிக்கும், இஸ்லாமபாத்துக்கும் இடையே சமீபத்தில், எல்லை கடந்து மீன்பிடித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு, அயல் நாட்டு சிறைகளில் உள்ள மீனவர்களை இரு தரப்பும் ஒரே எண்ணிக்கையில் விடுவிப்பது என்று ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டது.
அதையடுத்து, கராச்சி சிறையில் உள்ள 311 மீனவர்களை விடுவிக்க தயார் என பாகிஸ்தான் தெரிவித்தது. இந்தியச் சிறைகளில் உள்ள 311 மீனவர்களை விடுவிக்க புதுடில்லி ஒப்புக் கொண்டது.
இந்திய – பாகிஸ்தான் கடல் எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்த மீனவர் கைதுகள், தமிழக மற்றும் இலங்கை மீனவர் கைதுகளைப் போலத்தான் நடைபெற்றிருந்தது. எல்லை கடந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில்,  இந்திய மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளார்கள். இலங்கை மீனவர்கள் இந்தியச் சிறைகளில் உள்ளார்கள்.
இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது குறித்து, டில்லிக்கு கடிதம் எழுதாத தமிழக அரசியல் தலைவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இவர்கள் எழுதிக் குவித்த கடிதங்கள் எதிலாவது, “இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க, எம்மிடமுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்கலாமே” என யோசனை கூறியதாக தெரியவில்லை.
முன்னாள், இன்னாள், தமிழக முதல்வர்கள் டில்லிக்கு எழுதிய கடிதங்களில், “மாநில அரசு என்ற முறையில், எமது மாநிலத்தில் கைதிகளாக உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க தயாராக உள்ளோம்” என்று குறிப்பிட்டதாகவும் தெரியவில்லை! அதுதான், அரசியல்.
சரி. அதை விடுங்கள். இதிலுள்ள black humor, அல்லது மகத்தான சோகம் என்ன தெரியுமா? இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களில் பெரும்பாலானோர், தமிழர்கள்! எந்த தமிழர்கள்?
கருணாநிதி டெசோ மாநாடு யாருக்காக நடத்தவுள்ளாரோ… ஜெயலலிதா யாருக்காக சட்டசபை தீர்மானம் கொண்டு வந்தாரோ… சாட்சாத் அதே ஈழத் தமிழர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக