செவ்வாய், 12 ஜூன், 2012

குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி- துணை குடியரசுத் தலைவராக ஜஸ்வந்த்சிங்கை தேர்வு செய்ய முடிவு?

 President Pranab Vice President Jaswant Singh
டெல்லி: நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்ற நிலையில் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் யார் என்பதில் பிரதான கட்சிகள் ஒருமித்த கருத்தை எட்டியிருப்பதாகவே டெல்லியில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.
டெல்லியில் நிகழ்ந்த பரபர சம்பவங்கள்....
- குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற நிலையில் தேர்தல் ஆணையம் படு பிசியாக இருந்து வருகிறது. அனேகமாக இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படக்கூடும் எனத் தெரிகிறது.
- திங்கள்கிழமை இரவு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திடீரென சோனியா காந்தி சந்தித்துப் பேசினார்.
- சோனியாவை சந்தித்துப் பேசிய பின் வரும் வியாழக்கிழமையன்று காபூல் செல்லவிருந்த பயணத்தை பிரணாப் முகர்ஜி ரத்து செய்துவிட்டார்.

- ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கான ஆதரவு என்பது மதவாத சக்திகள் அதிகாரத்துக்கு வராமல் இருக்கத்தான் என்று நேற்றுதான் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென முலாயம்சிங்கை பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான ஜஸ்வந்த்சிங் டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
- குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் நிறுத்துவது என்றும் குடியரசு துணைத் தலைவராக ஜஸ்வந்த்சிங்கை தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்துவது என்றும் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் முலாயம்சிங்- ஜஸ்வந்த்சிங் சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
- பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக்க ஆதரவு தெரிவித்திருந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. தமது மாநிலத்துக்கு சிறப்பு நிதி கோரி பேரம் பேசிவந்தார். இந்த நிலையில் டெல்லி வந்து தம்மை சந்திக்குமாறு மமதாவுக்கு சோனியா அழைப்பு விடுத்திருக்கிறார்.
- குடியரசுத் தலைவராக நிறுத்தப்படுகிற பிரணாப் முகர்ஜியும் மேற்குவங்க மாநிலத்தவர்தான். குடியரசு துணைத் தலைவராக நிறுத்தப்பட உள்ள ஜஸ்வந்த்சிங்கும் மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் தொகுதி எம்பிதான் என்பதும் மமதாவை பணிய வைக்கக் கூடிய அஸ்திரமாக இருக்கக் கூடும்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் நிலையில் குடியரசுத் தலைவர்,துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர்களும் அறிவிக்கப்படக் கூடும் என்றே டெல்லி நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக