வெள்ளி, 29 ஜூன், 2012

தி.மு.க.,வினரை அடைக்க வெளிமாநில சிறைகள் !

தமிழகத்தில் தி.மு.க.,வினர் நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தை சமாளிக்க, போலீசார் முழு வீச்சில் தயாராகி விட்டனர். தமிழக சிறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், வெளிமாநில சிறைகளில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை, போலீசார் முழு வீச்சில் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், தி.மு.க., நிர்வாகிகள் மீது நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வழக்கில் சிக்கிய தி.மு.க., நிர்வாகிகள், சிறைக்குச் செல்வதும் வருவதுமாக உள்ளனர்.சிறையில் இருந்து வெளியே வந்த தி.மு.க.,வினர் சிலர், போலீசாரின் கண்ணில் படாமல் அடக்கி வாசிக்கின்றனர். மாஜிக்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மாவட்டம், வட்டம், ஒன்றிய செயலர்களுக்கும், அவர்கள் பங்கிற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளனர்.

டி.ஜி.பி.,யிடம் புகார்: இந்நிலையில், தி.மு.க., தலைமை சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்து, வரும் ஜூலை 4ம் தேதி நாள் குறித்து விட்டது. இதற்கு முன், நாளை சென்னை வரும் பிரணாபை வரவேற்க, தி.மு.க., முழு அளவில் தயாராகி வருகிறது. இது முடிந்ததும், சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தொண்டர்களை திரட்டும் வேலையில் முக்கிய தலைவர்கள் ஈடுபட உள்ளனர். இருப்பினும், இந்த போராட்டத்தை முடக்க, போலீசார் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் தி.மு.க.,வினரை கைது செய்யக்கூடாது என, கடந்த புதன் கிழமை டி.ஜி.பி.,யிடம் மனு கொடுத்தனர்.

பட்டியல் தயார்: மாவட்டச் செயலர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலானோர், வழக்கில் சிக்கி சிறைக்குள் சென்று திரும்பியுள்ளனர். ஒரு சில மாஜிக்கள் மீது போலீஸ் நிலையத்தில் சில புகார்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. அப்புகார்களை மாவட்ட வாரியாக உள்ள போலீஸ் நிலையத்தில் தூசி தட்டி எடுத்து, சட்ட ஆலோசனை கேட்டு வழக்கு பதிவு செய்யும் நிலையில், போலீசார் தயாராக வைத்துள்ளனர்.

பக்கத்து மாநிலம்: இவ்வளவு சிக்கல்களைத் தாண்டி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடும் தி.மு.க.,வினரை, அன்றைய தினம் கைது செய்ய போலீசார் தயாராகி வருகின்றனர். தி.மு.க., போராட்டத்தில் முன்பெல்லாம் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்பர். ஆனால், சமீபகாலமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் பலர் தங்களது தொழில் மற்றும் வர்த்தகப் பணிகளில் மும்முரமாக இருப்பதால், பொதுக்கூட்டம், ஊர்வலம் அந்தளவில் மட்டும் அப்போதைக்கு தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், நீண்ட நாட்களுக்கு பிறகு சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிகளவில் தொண்டர்கள் வருவது சந்தேகம் என, போலீசார் கணக்கிட்டுள்ளனர். இருப்பினும் அதிகளவில் தொண்டர்கள் பங்கேற்று, தமிழக சிறைகளில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டால், கைது செய்தவர்களை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பக்கத்து மாநிலத்தில் உள்ள சிறையில் அடைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. இதில், அதிக சட்ட நடைமுறைகள் உள்ளதால், மாற்று வழிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இது தவிர, பெரிய பெரிய கல்யாண மண்டபங்கள், உள்விளையாட்டு அரங்கங்கள் ஆகியவற்றையும் கணக்கெடுக்கும் வேலை நடந்து வருகிறது. ஆந்திரா, மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள சிறைகளில் இடவசதி பற்றி விசாரித்து, அதற்கான ஏற்பாட்டையும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நில மோசடி உட்பட வழக்குகளில் சிக்கிய தி.மு.க., நிர்வாகிகள் சிலர் தலைமறைவாக உள்ளனர். கட்சிப் பொறுப்பில் உள்ள அவர்கள், சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் செல்வர். சிறையில் உள்ள அவர்களை பிடிவாரன்டில் கைது செய்து, சிறையிலேயே வைக்க திட்டமிட்டுள்ளோம். தமிழக சிறைகளில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டால், பக்கத்து மாநில சிறைகளில் அடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

ஒதுங்கும் தலைகள்: தொண்டர்கள் பாவம்: தி.மு.க., தலைவர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் வயதை காரணம் காட்டி சிறைக்கு செல்லப்போவதில்லை என, தொண்டர்கள் வட்டாரத்தில் பலமான பேச்சு உள்ளது. அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள பொருளாளர் ஸ்டாலின், சில நாட்களுக்கு முன், நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனையில் கண் புரைக்கான அறுவை சிகிச்சை செய்துள்ளார். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மத்திய அமைச்சர் என்பதாலும், உள்கட்சி பூசலாலும் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். தலைவரின் மகள் கனிமொழி, ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆஜராக டில்லி செல்லவிருக்கிறார். இப்படி பெருந்தலைகள் ஆளுக்கொரு வேலையை காரணம் காட்டி, ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக