வெள்ளி, 29 ஜூன், 2012

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம்-2

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்!! தமிழ்த்-தேசியம்“தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி”யைச் சுட்டி புதிய ஜனநாயகம் (ஏப்ரல், 2012) இதழில் எழுதியுள்ள கருத்துக்கள் சரியானவைதாம் என்பதை மணியரசனின் த.தே.த.க. (மே 115, 2012) ஏடு மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது. 
 மணியரசன் கட்சியினர் நம்பூதிரிபாடின் சீடர்கள்; அதனாலேயே தமது தொப்புள் கொடி உறவைக் கைவிட மறுக்கிறார்கள். நம்பூதிரிபாடு, அவர்களின் பேராசான் என்று பு.ஜ. கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அது சரிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போதும் அவர்கள் வாதம் புரிந்திருகிறார்கள். அரசியல்சித்தாந்த நிலைப்பாடு எடுப்பதிலும் சரி, வாதப் பிரதிவாதம் புரிவதிலும் சரி, எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலும் சரி “நம்பூதிரிபாடு பாணி” என்று ஒன்று உள்ளது. இதையும், மணியரசன் கும்பல் அந்தப் பாணியைத்தான் பின்பற்றுகிறது என்றும் முன்பே நாம் விளக்கிச் சொல்லியிருக்கிறோம். எந்தவொரு அரசியல்சித்தாந்தப் பிரச்சினையானாலும் அதிலுள்ள எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டு, அவ்விரண்டின் குறைகளை விலாவாரியாக அலசி விட்டு, தன்னுடைய நிலை அவ்விரண்டும் அல்லவென்று வாதிடுவது, அதேசமயம் தன்னுடைய நிலைப்பாட்டை முன்வைக்காது அல்லது சந்தர்ப்பவாதமான நிலையெடுத்துக் கொண்டு நழுவிவிடுவது நம்பூதிரிபாடு பாணிகளில் ஒன்று.
எடுத்துக்காட்டாக, காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதாவை எடுத்துக் கொண்டு, மதச்சார்பின்மை, புதிய பொருளாதாரக் கொள்கை போன்றவற்றில் இரண்டு கட்சிகளும் தவறான நிலைகொண்டிருக்கின்றன என்பதற்கான வாதங்களை மிகையாகவும், தன் நிலையைப் பற்றிப் பூசிமெழுகுவது; சந்தர்ப்பவாதமாகப் பேசி நடந்துகெள்வது. மற்றொரு எடுத்துக்காட்டாக, தனது “புரட்சிப் பாதை” ரசியப் பாணியிலானதோ, சீனப் பாணியிலானதோ அல்ல, இந்தியப் பாணியிலானது என்று சொன்னாலும், அது என்ன என்பதைப் பருண்மையாக முன்வைக்காது நழுவிக்கொள்வது; நாடாளுமன்றச் சகதிக்குள் புரண்டுகொண்டே நாடாளுமன்றப் பாதையா, புரட்சிப் பாதையா என்பது குறித்துப் பூசிமெழுகுவது. வாதப் பிரதிவாதங்களில் எதிர்த் தரப்பின் வாதங்கள் நிலைகள் என்னவோ, அவற்றை எடுத்து வைத்து மறுப்பு வாதங்கள் புரியாது, அவற்றுக்குத் தமது சொந்த வியாக்கியானங்கள் கொடுத்து, எதிர்த் தரப்பினரின் வாதங்கள் நிலைப்பாடுகள் அல்லாதவற்றை இட்டுக் கட்டிக் கற்பித்து குறை கூறி வாதங்கள் புரிவது நம்பூதிரிபாடு பாணிகளில் மற்றொன்று. கேட்கப்படும் எழுப்பப்படும் கேள்விக்கு நேரடியான உரிய பதிலளிக்காமல், தன்னிடம் உள்ள தயார்நிலை பதிலுக்கு ஏற்பக் கேள்வியை மாற்றியமைத்துக் கொண்டு விளக்கமளிப்பது நம்பூதிரிபாடு பாணிகளில் இன்னொன்று. இவ்வாறான நம்பூதிரிபாடு பாணிகளைப் பின்பற்றி, அதிமேதாவிகளைப் போலக் காட்டிக் கொண்டு தனது திருத்தல்வாதங்களை மணியரசன் கும்பல் நியாயப்படுத்துவதைத்தான் ஏப்ரல், 2012 புதிய ஜனநாயகம் கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தோம். ஆனால், அக்கட்டுரை விமர்சனங்களுக்கு நம்பூதிரிபாடு பாணியிலேயே தமது சொந்த வியாக்கியானங்கள் அடிப்படையில், நம்முடையதல்லாத நிலைப்பாடுகளை இட்டுக்கட்டி வாதங்கள் புரிந்து, தமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்தியிருக்கிறது, மணியரசன் கும்பல். “நம்பூதிரிபாடின் தொப்புள் கொடி உறவினர்” என்றும் “நம்பூதிரியின் போலி மார்க்சிஸ்ட் கட்சியில் குப்பை கொட்டியவர்கள்” என்றும் பு.ஜ. (ஏப்ரல் 2012) ஏட்டில் குறிப்பிட்டிருந்ததை, தனியே பிரித்து எடுத்து சொந்த வியாக்கியானம் கொடுத்து,நம்பூதிரிபாணியில் இட்டுக் கட்டி, இவை “பார்ப்பன உளவியல்” காரணமாக எழுதியவை என்று சாடியிருக்கிறது, என வாதம் புரிகிறது மணியரசன் கும்பல். “அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது தர்க்கத்திற்குரிய பொருளோடு விவாதத்தை நிறுத்திக் கொள்ளாமல், விமர்சித்தவர்களின் பூர்வோத்தரம் பற்றிப் பேசுவது ம.க.இ.க.வின் வாடிக்கையாகி விட்டது. இது ஒருவகை உளவியலிலிருந்து வருகிறது. அது என்ன உளவியல்? பார்ப்பன உளவியல்! அரசியல் பிறப்பு, மனிதப்பிறப்பு போன்றவற்றை சுட்டிக் காட்டாமல் ம.க.இ.க.வால் விமர்சிக்க முடியாது” மணியரசனின் த.தே.த.க. (மே 115, 2012) ஏடு. ஆனால், மணியரசன் கும்பல் வாதிடுவதைப்போல அதன் பூர்வேத்திரம் பற்றிப் பேசுவதற்காக “நம்பூதிரிபாடின் சீடர்கள்” என்றும் அவர்களின் “பேராசான் நம்பூதிரிபாடு” என்றும் புதிய ஜனநாயகம் ஏடு குறிப்பிடவில்லை. “பாட்டாளி வர்க்க அரசியல் சித்தாந்தத்துக்கு மாறாக, எதிராக, இணையாக, தொழிற்சங்கப் பிழைப்பு வாதத்தைத் தனது சித்தாந்தமாகக் கொண்டிருந்த நம்பூதிரிபாடின் சீடர்கள் அல்லவா, இவர்கள்! அதனாலேயே தமது தொப்புள் கொடி உறவைக் கைவிட மறுக்கிறார்கள்! தாங்களே அறிவித்துக் கொண்ட இலட்சியத்தையும் கொள்கையையும் மட்டுமல்ல; சொந்த அறிவையும் புதைகுழியில் போட்டுவிட்டு, அவற்றுக்கு எதிரான நிலைக்கு வலிந்து வாதம் புரிகிறார்கள்” என்றும், “நேர்மையிருந்தால், இங்கே நாங்கள் எழுப்பும் சில கேள்விகளுக்கு உங்கள் பேராசான் நம்பூதிரிபாடு பாணியில் சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பதில் சொல்லுங்கள்”(பு. ஜ., ஏப்ரல் 2012) என்றும் எழுதியிருந்தோம். இங்கே நம்பூதிரிபாட்டைக் குறித்து எழுதிய வாசகங்கள் அரசியல்ரீதியிலான கருத்துக்களைக் கொண்டவை தாமே தவிர, மணியரசன் கும்பலின் பூர்வோத்தரம் பற்றியது எதுவும் இல்லை. இதைப் போலவே, “நம்பூதிரியின் போலி மார்க்சிஸ்ட் கட்சியில் குப்பை கொட்டியவர்கள்” என்ற சொற்றொடரும் அதன் பூர்வோத்தரம் பற்றியது அல்ல. மேலும், போலி மார்க்சிஸ்டு கட்சியில் இருந்தபோது மணியரசனின் செயல்பாடுகள் பொதுவாக எவ்வாறு இருந்தன என்பதாகவும் பு.ஜ. கட்டுரை எழுதவில்லை. குறிப்பாக, தேசிய இனப் பிரச்சினையில் நக்சல்பாரிப் புரட்சிக் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது; அதற்கு மாறாக, தேசிய இன விடுதலைக்கு எதிரானதாகப் போலி மார்க்சிஸ்டுக் கட்சியின் நிலைப்பாடு இருந்தபோதும், அப்போது அக்கட்சியிலிருந்த மணியரசன் கும்பல் அந்தத் திருத்தல்வாத நிலையை எதிர்க்கவில்லை; பின்னர் சொந்த வளர்ச்சிக்கான குறுக்குவழி என்ற முறையில் தெரிந்தெடுத்துக் கொண்ட அடையாள அரசியல்தான் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை என்றுதான் பு.ஜ. கட்டுரை கூறுகிறது. “நக்சல்பாரிப் புரட்சிக் கட்சியின் தோற்ற காலத்திலிருந்தே இந்திய தேசியத்துக்கு எதிராகத் தேசிய இனங்களின் விடுதலையை உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது. அதனாலேயே தேசிய இனப் பிரச்சினை என்பது இனிமேலும் கிடையாது, முடிவுக்கு வந்துவிட்டது என்று தனது கட்சிப் பேராயத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நம்பூதிரியின் போலி மார்க்சிஸ்ட் கட்சி. அப்போதும் அந்தக் கட்சியில்தான் இன்றைய த.தே.பொ.க. தøலமை குப்பை கொட்டிக் கொண்டிருந்தது. அதன்பிறகு வெவ்வேறு அவதாரமெடுத்து, தனது விரைவான சொந்த வளர்ச்சிக்கான குறுக்குவழி ‘அடையாள அரசியல்’ என்ற முறையில் த.தே.பொ.க. தலைமை தெரிந்தெடுத்துக் கொண்டதுதான், தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை. மற்றபடி தமிழ்த் தேசிய இனத்தின் மீது அதற்குள்ள பற்றினால் அல்ல.” இவ்வாறு குறிப்பிட்ட அரசியல் நோக்கில் சொல்லப்பட்டதை நம்பூதிரி பாணியில் மணியரசனின் “பூர்வோத்தரம்” குறித்துக் கூறப்பட்டதாகத் திரித்துப் புரட்டி, பொதுவாக்கி போலி மார்க்சிஸ்ட் கட்சியில் குப்பை கொட்டிக் கொண்டிருந்ததையே வீரதீரச் சாதனையாகக் காட்டிச் சுயபுராணம் பாடியிருக்கிறது, மணியரசன் கும்பல். திருத்தல்வாதப் போலி மார்க்சிஸ்ட் கட்சியில் மணியரசன் போன்றவர்கள் மட்டும் புரட்சிப் போராளியாக விளங்கியதாகப் படம் காட்டுகிறது. சிங்கூர், நந்திகிராமில்கூட போலி மார்க்சிஸ்ட கட்சிக்காரர்கள் தாக்கப்பட்டார்கள்; ஓட்டுக்கட்சி அரசியல் காரணமாக மமதா கட்சியினரோடு மோதிக் கொல்லப்படுகிறார்கள்; வன்முறையில் ஈடுபடுவது, வன்முறைக்குப் பலியாவது, காயமுறுவது, கொல்லப்படுவது, கைது சிறை இவையெல்லாம் எந்த அரசியலுக்காக என்பதுதான் முக்கியம். திருத்தல்வாத, பிழைப்புவாத அரசியலுக்காகப் போராடி பலியானவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் மீண்டும் ஓட்டுக்கட்சி ஆதாயத்துக்காக அவர்கள் வேண்டுமானால் போற்றிக் கொள்ளலாம்; புரட்சி அரசியல்காரர்கள் அப்படிச் செய்வதில்லை. தமிழ்த்-தேசியம் பு.ஜ. கட்டுரை முன்வைக்கும் விமர்சனங்களில் உள்ள அரசியலை மூடிமறைத்து விட்டு, மணியரசன் மீதான விமர்சனங்களை மணியரசனின் “பூர்வோத்தரம்” குறித்துக் கூறப்பட்டதாகவும் தனிப்பட்ட தாக்குதலாகவும் வியாக்கியானம் செய்து, சுயபுராணம் பாடுவதோடு , விமர்சனங்களின் சாரத்தை முன்வைத்து வாதங்கள் புரிவதற்குப் பதில், “ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா?” என்ற பாணியில் ம.க.இ.க.வில் உள்ள இரு தோழர்களின் பிறப்பை அடிப்படையாக வைத்து அடுக்கடுக்கான அவதூறுகளை எழுதுகிறது, மணியரசன் கும்பல். மக்கள் திரள் அமைப்பாகட்டும், கட்சியாகட்டும் போராட்டக் களத்தில் யார் யார் என்ன பாத்திரம் வகிப்பது என்பதைத் தலைமையும் அணிகளும்தான் தீர்மானிக்கிறார்கள்; மணியரசன் கும்பலைப் போன்ற பெயர் பலகை அமைப்புகளில் வேண்டுமானால் தனிநபர் தீர்மானிக்கலாம். மேலும் ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் எதிலும் தனிநபர் அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ தலைமை எதுவுமில்லை. இதை அறிந்திருந்தும் பு.ஜ. கட்டுரையின் விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியிலான பதிலளிக்க வக்கற்ற மணியரசன் கும்பல் நம்பூதிரிபாடு பாணியில் சொந்த வியாக்கியானம் செய்து, தனிநபர் தாக்குதலில் இறங்கி, வாதப் பிரதிவாதத்திற்காகத் திசை திருப்ப எத்தணிக்கிறது. “பாசிசக் கழிசடை அரசியல் மணியரசன்களே!” என்றும் “….. அலசி ஆராய்ந்து கரை கண்ட மேதையாகிய, சிந்தனைச் சிற்பியாகிய மணியரசனே” என்றும் பு.ஜ. கட்டுரையில் மணியரசனை விளித்திருப்பதாக மேற்கோள்களைக் “காட்டி” இவை பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உயர்வுதாழ்வு கற்பிப்பது; வர்ணாசிரம வழக்கப்படி யாரையும் பிறப்பிலிருந்து ஆராய்வது; பார்ப்பனப் பார்வை, பார்ப்பனக் குணம் என்று வாதங்கள் புரிகிறது, மணியரசன் கும்பல். முதலில் இந்த மேற்கோள்களை என்ன பொருளில் பு.ஜ. கட்டுரை எழுதியுள்ளது என்பதை மூடிமறைத்து, வெட்டிச் சுருக்கிக் காட்டப்பட்டுள்ளன. “இன முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் வெறும் வர்க்கச் சிக்கலாகவும் அரசியல் கட்சிகளின் குறைபாடுகளாகவும் திரித்துக் காட்டி இரசவாதம் செய்வார்கள் இந்திய தேசிய இடதுசாரிகள்” (த.தே.த.க. மார்ச் 115, 2012) என்ற மணியரசன் கும்பலின் “சண்டப் பிரசண்ட ஆராய்ச்சி முடிவுகளை” எள்ளி நகையாடித்தான் “இன முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் அலசி ஆராய்ந்து கரை கண்ட மேதையாகிய சிந்தனைச் சிற்பியாகிய மணியரசனே!” என்று பு.ஜ. கட்டுரை அவரை விளித்துள்ளது. “இன முரண்பாட்டையும் இனச் சிக்கலையும்” அலசி ஆராய்ந்து முடிவுகள் கண்டதைப்போல நடிக்கும் மணியரசனுக்குள்ள குறுகிய இனவெறிப் பார்வையை விமர்சித்து விளிக்கும் பு.ஜ.வின் சொற்றொடரில் இருந்து முதல் பகுதியை வெட்டிவிட்டு மேற்கோள் காட்டி, சூத்திர வர்ணத்தில் பிறந்த மணியரசன் சிந்திக்கத் தகுதியற்ற நபர் என்று ஏளனம் செய்வதாகத் திரித்துக் கூப்பாடு போடுகிறது மணியரசன் கும்பல். இதிலிருந்து, “தமிழினம் உலகச் சிந்தனைகளின் ஊற்று என்பது பார்ப்பனத் திரிபுவாதிகளின் அறிவுக்கு எட்டாத ஒன்றுதான்” என்று பிரகடனம் செய்கிறது, மணியரசன் கும்பல். இதன் பொருள் என்ன? மணியரசன் குறித்துச் சொன்ன ஒரு விடயம் ஒட்டுமொத்த தமிழினத்தையே குறித்துச் சொன்னதாக அல்லது மணியரசனே ஒட்டுமொத்த தமிழினமாகவும் உலகச் சிந்தனையின் ஊற்றாகவும் கருதும் ஆணவமும் தற்பெருமையும் தலைக்கனமும் தெரிகிறது. “தமிழினம் உலகச் சிந்தனைகளின் ஊற்று” என்ற மணியரசன் கும்பலின் கூற்று “பார்ப்பனத் திரிபுவாதிகளின் அறிவுக்கு எட்டாத ஒன்றாக” இருக்கட்டும்; ஆனால், பார்ப்பனர்களையும், பார்ப்பனியத்தையும் தம் வாழ்நாளெல்லாம் எதிர்த்துப் போராடிய பகுத்தறிவுச் சிந்தனையாளர் பெரியாருக்கு ஏற்புடையதுதானா, இல்லை, அவருக்குப் புரியாததனால்தான் அக்கருத்தை ஏற்கவில்லையா? எதிர்த்து நிராகரித்தாரா? பகுத்தறிவுக்கு மாறான, எதிரான இத்தகைய கூற்றுக்களை வைத்து மேதையாகவும் சிந்தனைச் சிற்பியாகவும் வேடம் போடும் காரணத்தால் மணியரசன் சிந்திக்கத் தகுதியற்றவராகிறார்; சூத்திர வர்ணத்தில் பிறந்தவர் என்பதற்காக அல்ல. “பாசிசக் கழிசடை அரசியல் மணியரசன்களே” என்று விளித்து பு.ஜ. கட்டுரையில் எழுதியதும் கூட அவரது பிறப்பு குறித்து எழுதியது அல்ல. அரசியல் ரீதியில் எழுதப்பட்டதுதான் என்பதைப் பின்வரும் அந்தப் பகுதி முழுமை தெளிவுபடுத்தும்.” “பாசிசக் கழிசடை அரசியல் மணியரசன்களே! ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவியில் வாழும் ஐந்து இலட்சம் உழைக்கும் தமிழ் மக்களைத் தாக்கும் சிவசேனா இனவெறியர்களுக்கும், உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைத் தாக்கும் அந்தந்த நாட்டு நிறவெறி பாசிஸ்டுகளுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?” தமிழ்த்-தேசியம்இங்கே மணியரசன் கும்பலை, மராட்டிய சிவசேனா இனவெறியர்களோடும், மேலை நாடுகளின் நிறவெறி பாசிஸ்டுகளோடும் ஒப்பிட்டு எழுதப்பட்டதுதான் “பாசிசக் கழிசடை அரசியல் மணியரசன்களே!” என்று விளிக்கும் சொற்றொடர். ஆனால், “பாசிசக் கழிசடை அரசியல்” என்பது அவரது “கடைநிலைக் கழிசடைப் பிறப்பை ”சூத்திர வர்ணத்தைக் குறிக்கும் சொற்றொடர் என்று இட்டுக்கட்டி, திரித்துப் புரட்டி, தந்திரமாக வாதம் புரிகிறது, மணியரசன் கும்பல். இவ்வாறான வாதம் ஒன்றும் புதிதில்லை; தம் மீதான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் வரும்போதெல்லாம் அவற்றுக்குத் தக்க பதில் சொல்ல முடியாமல் நழுவிக் கொள்வதற்கு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் கைக்கொள்ளும் தந்திரம் தான். தலித் என்பதால் ராஜாவும், பெண் என்பதால் ஜெயலலிதாவும், சாமானியன் என்பதால் கருணாநிதியும் தம்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக வாதங்கள் புரிவதில்லையா? அவ்வாறுதான் மணியரசன் கும்பலும் நடந்து கொள்கிறது. இந்த வகை அனுதாப அரசியலில் தஞ்சம் புகுந்து கொண்டு, இதன் மூலம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான அவர்களது நிலைப்பாடுகள் மீதும், இவர்களுக்கும் சிவசேனா இனவெறியர்களுக்கும் மேலைநாடுகளின் நிறவெறி பாசிஸ்டுகளுக்கும் என்ன வேறுபாடு என்றும், தேசிய இனப் பிரச்சினை உலக அளவில் முடிவுக்கு வந்துவிட்டதாக போலி மார்க்சிஸ்டு முடிவு செய்தபோது அதை எதிர்க்காது அக்கட்சியில் குப்பை கொட்டிக் கொண்டிருந்ததாகவும் பு.ஜ. கட்டுரை மணியரசன் கும்பலுக்கு எதிராக முன்வைத்த விமர்சனங்கள், கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நழுவிக் கொள்கிறது. அதேசமயம், “அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது தர்க்கத்திற்குரிய பொருளோடு விவாதத்தை நிறுத்திக் கொள்ளாமல், விமர்சித்தவர்களின் பூர்வோத்தரம் பற்றிப் பேசுவது ம.க.இ.க.வின் வாடிக்கையாகி விட்டது. இது ஒருவகை உளவியலிலிருந்து வருகிறது. அது என்ன உளவியல்? பார்ப்பன உளவியல்!” என்கிறது, மணியரசன் கும்பல். ஆனால், விமர்சித்தவர்களின் பூர்வோத்தரத்தை தேடும் பார்ப்பன உளவியல், பார்ப்பனக் குணம், பார்ப்பனப் பார்வை மணியரசன் கும்பலிடம் தான் உள்ளது என்பதை அவர்களின் வாதங்களே காட்டுகின்றன. பிறப்பால் பிராமண வகுப்பினர் என்று இரு ம.க.இ.க. தோழர்களின் பூர்வோத்தரம் பற்றிப் பேசி, “இவர்கள் விரும்பியிருந்தால், தங்களின் பார்ப்பனக் குணத்தைக் கைவிட்டிருக்க முடியும். பார்ப்பனியத்தை எதிர்த்துப் பகட்டாகப் பேசி அந்தரங்கத்தில் பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் உத்தி கொண்டவர்களே மேற்படியாளர்கள்” என்று கூறுகிறது, மணியரசன் கும்பல். மேலும், மக்களுக்கான அமைப்பில் பார்ப்பனர்கள் தலைமைப் பொறுப்பிலோ உறுப்பினர்களாகவோ இருப்பதற்கு மணியரசன் கும்பல் பின்வரும் ஒரு நிபந்தனை போடுவதாகக் கூறிக் கொள்கிறது: “பிறப்பின் வழியாகத் தங்களைத் தொடர்ந்து வரும் பார்ப்பனியத்தை நூற்றுக்கு நூறு கைவிட்டு விட்டதாக, அதை நடைமுறையில் மெய்ப்பித்துக் காட்டவேண்டும்” இதுவும் நம்பூதிரிபாடு பாணியில் மணியரசன் கும்பல் செய்யும் அரசியல் பித்தலாட்டம்தான். திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், “திருவையாறு தியாக பிரம்ம உற்சவம்” என்ற பெயரிலான தமிழ்த் தீண்டாமையை எதிர்த்த போராட்டம், தில்லையில் தமிழ்த் திருமுறைக்கான போராட்டம், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காஞ்சி சங்கராச்சாரியின் சீடர்களுடனான மோதல், தஞ்சையில் நடந்த பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, விழுப்புரம் சாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு மாநாடு என்று ம.க.இ.க.வின் மக்கள் பெருந்திரள் நடவடிக்கைகள் எல்லாம் வெறுமனே பார்ப்பனியத்தை எதிர்த்துப் பகட்டாகப் பேசியவைகளா? அல்லது அந்தரங்கத்தில் பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் உத்தி என்று எதையாவது சான்று காட்ட முடியுமா? இதற்கு மாறாக, மணியரசன் கும்பல் தொடர்ந்து பார்ப்பனிய இந்துத்துவ நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதற்கு பல சான்றுகளை பு.ஜ.வின் ஏப்ரல் 2012 இதழில் எடுத்துக் காட்டியிருந்தோம். அவை எதையும் மணியரசன் கும்பல் மறுக்கவில்லை. அவை பற்றி வாய் திறக்காது நழுவிக் கொள்வதன் மூலம் பார்ப்பனியத்தை எதிர்த்துப் பகட்டாகப் பேசி அந்தரங்கத்தில் பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் உத்தி கொண்டவர்கள் மணியரசன் கும்பல்தான் என்பதை ஒப்புக் கொள்கிறதா? அல்லது மணியரசன் கும்பலின் தலைமையில் உள்ள யாரேனும் பிறப்பால் பார்ப்பனராக இருந்து பார்ப்பனியத்தைக் கைவிடவில்லை என்பதாலா? அல்லது பிறப்பால் பார்ப்பனரல்லாதோராக இருந்தும் மணியரசன் போன்றவர்கள் பார்ப்பனியத்தை வரித்துக் கொண்டு பார்ப்பனியமயமாகி விட்டதாலா? மக்களுக்கான அமைப்புகளில் பங்கேற்கும் பார்ப்பனர்கள் பார்ப்பனியத்தை நூற்றுக்கு நூறு கைவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் மணியரசன், உண்மையில் விஜயகாந்தைக் கறுப்பு எம்.ஜி.ஆர். என்கிறார்களே, அதைப்போல இந்துத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ள கறுப்புப் பார்ப்பனர். பார்ப்பனியத்தைத் தமதாக வரித்துக் கொண்டதோடு, நம்பூதிரியின் போலி மார்க்சிஸ்டு கட்சியின் திருத்தல்வாதத்தையும் கைவிடாதவர். இந்தியாவை வேதங்களின் நாடு என்று கண்டு பிடிப்பு செய்த நம்பூதிரிபாடைத் தமது சித்தாந்த மூலவராகக் கொண்ட போலி மார்க்சிஸ்டு கட்சி ஒரு பார்ப்பனியக் கட்சி என்பதை உண்மையான மார்க்சியர்கள் லெனினியர்கள், பகுத்தறிவாளர்கள் அறிவர். அந்தப் பார்ப்பனியக் கட்சியைத் தமது அரசியல் பிறப்பாகக் கொண்ட மணியரசன் கும்பல், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தவிர அந்தக் கட்சியின் அடிப்படை நிலைப்பாடுகள் எதையாவது கைவிட்டுள்ளதா? மார்க்சிசம் லெனினிசத்தின் உயிராதாரமான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கைவிடுவது; சீனா, சோவியத் ஒன்றியம் போன்ற முன்னாள் சோசலிச நாடுகள் பற்றிய மதிப்பீடு, இந்திய சமூகப் பொருளாதார அரசியல் அமைப்பு ஆளும் வர்க்கங்களின் பற்றிய கணிப்பு ஆகிய அடிப்படை நிலைப்பாடுகளில் எல்லாம் அக்கட்சியுடன் உடன்பட்டுத் தானே நிற்கிறது! தமிழ்த்-தேசியம் இந்துமதம் என்பது உண்மையில் பார்ப்பன வர்ணாசிரம சனாதன மதம்; அதை ஒழிக்காமல் சாதியத்தை ஒழிக்கமுடியாது என்பதுதான் பெரியார், அம்பேத்கரின் நிலை. ஆனால், இந்துமதம் என்பது வெறும் கடவுள் நம்பிக்கை, புரட்சிக்குப் பின்னும் அது நீடிக்கும் என்கிறது மணியரசன் கும்பல். அதாவது தமது தாய்க் கட்சியான போலி மார்க்சிஸ்ட் கட்சியின் மிதவாத இந்துத்துவக் கொள்கையையே மணியரசன் கும்பல் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரே சமயத்தில், இந்துத்துவம் அதன் மூலம் இந்திய தேசியம், கூடவே குறுகிய தேசிய இனவெறி பாசிசம் இரண்டும் இணைந்த தமிழக சிவசேனாவாக உருவெடுத்துள்ளது, மணியரசன் கும்பல். இவ்வாறு தானே பார்ப்பன சனாதன இந்துத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள மணியரசன் கும்பல், நாம் பார்ப்பனியத்தைக் கொண்டுள்ளதற்குச் சான்றாக நாம் சமூகநீதியின் உயிர்மூச்சான இடஒதுக்கீட்டையும் மண்டல் குழு அமலாக்கத்தையும் எதிர்ப்பதாக மணியரசன் கும்பல் புளுகுகிறது. சமூகநீதி, இடஒதுக்கீடு பிரச்சினைகளில் நமது நிலைப்பாடுகள் என்ன? பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனரல்லாதோர் இயக்கம் என்று சொல்லிக் கொண்ட நீதிக் கட்சி காலத்தில் என்ன நடந்தது? இந்தியாவில் பிரித்தானியக் கிழக்கிந்திய ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, பிரித்தானிய அரசியின் நேரடி ஆட்சியில் அது பார்ப்பனருக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதைப் பார்த்த இங்கிருந்த வேளாள, முதலியார், நாயுடு, ரெட்டி, வொக்கிலிகா, கவுடா, நாயர் முதலிய ஆதிக்க சாதியினர் தாமும் வேதங்கள், வடமொழி, பரதம், கர்நாடக இசை கற்பது, பார்ப்பன சடங்கு சாத்திரங்களைப் பின்பற்றுவது என்று பார்ப்பனியமயமானார்கள். சைவ, வைணவ மடங்கள் கூட முழுமையாக பார்ப்பனமயமாகின. மேற்படி ஆதிக்க சாதிகளின் ஜமீன், மிட்டாமிராசு அதிகாரங்கள் “பிடுங்கப்பட்டு” முதலாளிய முறையிலான மையப்படுத்தப்பட்ட பிரித்தானிய காலனிய அரசு அமைப்புகளிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டு, இந்தியர்களுக்கும் அவற்றின் பங்களிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேற்படி ஆதிக்க சாதிகள் ஒரு தந்திரத்தை மேற்கொண்டார்கள். தாங்கள் சமூகரீதியிலும் கல்வி ரீதியில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சூத்திர வர்ணத்தினர் என்று கூறிக் கொண்டு, உண்மையைப் புரட்டி கல்வியிலும் அரசு வேலைகளிலும் தமக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்பட்ட நீதிக் கட்சியைத் தோற்றுவித்தனர். பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்பதைப் போல, தானே ஒடுக்கும் பிற சாதிகளுக்கும் இடஒதுக்கீடு கோரிக்கையைச் சேர்த்துக் கொண்டனர். நீதிக் கட்சி அமைச்சராக இருந்த முத்துசாமி கொண்டு வந்த “வகுப்புவாரி ஆணை” எனப்பட்ட “சமூக நீதிச் சட்டம்” மேற்படி ஆதிக்க சாதிகளுக்கான இடஒதுக்கீட்டையும் உள்ளடக்கியது. 1950களுக்குப் பிறகுதான் மேற்படி ஆதிக்க சாதிகளில் சில இடஒதுக்கீடு பெறுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டன. சமூகத்தில், தமிழ்ச் சமூகத்தில்தான் சொல்கிறோம், ஒருபுறம் தாம் ஆண்ட பரம்பரை சத்திரிய, வைசிய குலத்தவர் என்று உரிமைப் பாராட்டிக் கொண்டு, சாதிசமூக ஆதிக்கம் வகித்துப் பிற சாதியினரை அடக்கி ஒடுக்குவது; மறுபுறம் அரசு பதவிகளில் இடம் பிடிப்பதற்கான இடஒதுக்கீடு என்று வரும்போது தாமும் பின்தங்கிய, அடக்கி ஒடுக்கப்பட்ட சூத்திர வர்ணத்தினர் என்று கூறிக் கொண்டு இரட்டை வேடம் போடுவது நடக்கின்றது. ஆதிக்க சாதியினர் இந்த இரட்டைவேடத்தை மூடிமறைத்துத் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மை மக்களது ஆதரவைத் தம் சொந்த ஆதாயத்துக்குத் திரட்டிக் கொள்வதற்காக பார்ப்பனரல்லாதோர் என்று தம்மையும் உள்ளடக்கிய ஒரு பெரிய வளையத்தைப் போட்டு உள்ளே புகுந்து கொள்கின்றனர். இதற்கான ஆதாரமாக 1944 திராவிடர் கழகப் பிறப்பு மாநாட்டில் அண்ணாதுரை ஆற்றிய உரையைக் காண்க. (டி.எம்.பார்த்தசாரதியின் “தி.மு.க. வரலாறு” நூல்) மண்டல் கமிசன் அறிக்கைகூட இந்த சாதிகள்தாம் சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியவை, ஒடுக்கப்பட்டவை என்று எந்த ஆதார அடிப்படையிலும் பரிந்துரை வழங்கவில்லை; ஓட்டுக் கட்சிகள் தமது சமூக அடிப்படையாக, ஓட்டு வங்கியாக உள்ள சாதிகளைப் பரிந்துரை செய்ததை வைத்துத்தான் பல ஆதிக்க சாதிகளையும் உள்ளடக்கிப் பட்டியல் போட்டு இடஒதுக்கீடுக்கு தகுதியானவை என்று கூறுகிறது. இக்கருத்துக்களின் அடிப்படையில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் மாற்றங்கள் வேண்டும் என்கிறோம். இது, தற்போதுள்ள இடஒதுக்கீடு ஆதரவாளர்கள்/எதிர்ப்பாளர்களது நிலைப்பாடுகளில் இருந்து மாறானதாக இருக்கிறது. ஆனால், இடஒதுக்கீட்டின் குருட்டுத்தனமான ஆதரவாளர்கள் நாம் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் என்று அவதூறு செய்கிறார்கள். தமிழ்த்-தேசியம்மேற்கண்ட நமது கருத்துக்களின் அடிப்படையில் நாட்டியிலேயே வேறு எந்த அமைப்பாலும் தனிநபராலும் முன்வைக்கப்படாத கருத்துக்களைக் கொண்ட ஆவணமாகிய நமது அமைப்பின் இடஒதுக்கீடு குறித்த நூலுக்கு சமூகநீதிப் போராளிகள், சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் யாரும் இன்றுவரை மறுமொழி கூறவே இல்லை. ஆனால், உலக சிந்தனைகளின் ஊற்றாகவுள்ள தமிழின மணியரசன், சமூகநிதியின் உயிர் மூச்சாக உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கையை ம.க.இ.க. எதிர்ப்பதாகத் தொடர்ந்து புளுகி வருகிறார். பெரியார் ஈ.வெ.ரா. “யார் சூத்திரன்?” என்ற ஒரு சிறுநூல் வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டுள்ள வரையறைகளின்படி இடஒதுக்கீட்டுத் தகுதியான பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலுள்ள தற்போதுள்ள சாதிகள் அனைத்திற்கும் பொருந்துமா? இவற்றில் எந்தெந்த சாதிகள் எப்படி சூத்திர வர்ண வழிவந்த சாதிகள் என்பதற்கான வரலாற்று, நிகழ்கால ஆய்வாதாரங்கள் ஏதாவது பெரியார் உட்பட சமூகபகுத்தறிவு சிந்தனையாளர்களால் எப்போதாவது முன் வைக்கப்பட்டிருக்கின்றனவா? அதைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாததால் சமூகத்தில் ஆதிக்க சாதிகளாக இருந்து கொண்டு, அரசுப் பதவிகளுக்காகத் தாமும் சூத்திர சாதியினர் என்று இடஒதுக்கீடும் அதிகாரமும் பெற்றுக் கொண்டு இரண்டு வகையிலும் சில சாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதைத்தான், இந்த ஆதிக்க சாதிகளுக்குத்தான் இடஒதுக்கீடு கூடாது; ஆதிக்க சாதி உணர்வோடு, பிற சாதிகளை ஒடுக்கும் செயல்களில் ஈடுபடும் சாதிகளுக்கு இடஒதுக்கீடும் கூடாது என்கிறோமே தவிர, உண்மையில் ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட சாதிகளுக்கு இடஒதுக்கீடு கூடாது என்பதல்ல நமது நிலைப்பாடு. இடஒதுக்கீடு பிரச்சினையில் நாம் எழுப்பும் கேள்விகள், பிரச்சினைகளுக்கு நிலைப்பாடுகளுக்குத் தக்க பதிலளிக்கத் திராணியற்ற மணியரசன்களும் வீரமணிகளும் கருணாநிதிகளும் மேற்படி ஆதிக்கசாதிகளுக்கு இடஒதுக்கீடு இல்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் வாதாடுகின்றனர். எதிர்த்தரப்பு நிலைப்பாடுகள் எல்லாவற்றுக்கும் பார்ப்பன முத்திரை குத்தியும், சதிசூழ்ச்சி என்று விளக்கமளித்தும் நழுவிக் கொள்ள எத்தணிக்கின்றனர். (தொடரும்)
______________________________________தமிழ் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி!-பாகம் 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக