தி.மு.க., தலைவர்கள் மீது வழக்கு போடுவது குறித்து
ஆராய்ச்சி செய்து வருவது தான், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனையாக உள்ளது,''
என, வேலூர் சிறை வாசலில் எம்.பி., கனிமொழி கூறினார்.
சேலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட,
தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், வேலூர் சிறையில்
அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகத்தை,
எம்.பி., கனிமொழி, அவரது தாய் ராசாத்தி ஆகியோர் நேற்று பகல் 12.10 மணிக்கு
சந்தித்து பேசினர். 12. 50க்கு சிறையில் இருந்து இருவரும் வெளியே வந்தனர்.சிறை வாசலில் கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க., தலைவர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்வது தொடர்கிறது. மூன்றாவது முறையாக வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்ட உடன், கருணாநிதி பெரிதும் கவலைப்பட்டார். அவரது உடல் நிலை மோசம் என்று தெரிந்தும் கவலைப்படாமல் மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்து, சேலம், சென்னை என ஒவ்வொரு சிறையாக மாற்றி அலைகழித்து கடைசியில் வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். அவருடைய உடல் நிலையை பற்றி கவலைப்படாமல் மிக மோசமாக நடத்துகின்றனர். இது பற்றி வீரபாண்டி ஆறுமுகம் கவலைப்படவில்லை. அவர் எதற்கும் அஞ்சாதவர். அஞ்சா நெஞ்சத்துடன் தைரியமாக, வீராதி, வீரனாக இருக்கிறார்.
வீரபாண்டி ஆறுமுகம் பதவியில் இருந்த போதும் தற்போது, சிறையில் இருக்கும் போதும் ஒரே மன நிலையில் தான் உள்ளார். வீரபாண்டி ஆறுமுகத்தை தைரியமாக இருக்கும்படி கருணாநிதி கூறினார். தி.மு.க., தலைவர்கள் மீது வழக்கு போடுவது குறித்து, ஆராய்ச்சி செய்து வருவது தான், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனையாக உள்ளது. மக்களை பற்றி சிந்திக்காமல் ஓய்வெடுக்க முதல் அமைச்சர் ஜெயலலிதா கொடநாடு செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
கேள்வி: நாளை தி.மு.க., செயற்குழு கூட்டம் நடக்கிறது. இது குறித்து சிறையில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்திடம் ஆலோசனை நடத்தினீர்களா?
பதில்: செயற் குழு கூட்டம் குறித்து பேசவில்லை. அது குறித்து கருணாநிதி தான் முடிவு செய்வார்.
கேள்வி: வீரபாண்டி ஆறுமுகத்தை கருணாநிதி வந்து பார்ப்பாரா?
பதில்: கருணாநிதி வந்து பார்க்க கூடாது என்பதற்காக தானே அவரை வேலூர் சிறைக்கு மாற்றினர்.
கேள்வி: அ.தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை பற்றி?
பதில்: தி.மு.க., வினரை தொடர்ந்து கைது செய்வது தான் இந்த அரசின் ஓராண்டு சாதனை. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக