புதன், 13 ஜூன், 2012

காங்கிரஸ் கலக்கம் ஆந்திராவில் அமோக ஓட்டுப்பதிவால்

 Sekar Sekaran -

உறுதியிட்டு சொல்லுவேன்..காங்கிரஸ் அனைத்து தொகுதியிலும் நிச்சயம் "டெபாசிட்" காலியாகும் நிலையில் தோல்வியை தழுவும். காங்கிரசை பொறுத்தவரை சிறப்பான ஆலோசனை சொல்லவோ..அல்லது வழிநடத்தவோ எந்த மாநிலத்திலும் "யாருமே" இல்லை என்பதுதான் உண்மையான நிலை. சுயநலகூட்டத்தில் சிக்கி தவிக்கின்றது இன்றைய காங்கிரஸ். இனி பாருங்கள் இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூச்ச நாச்சமின்றி கட்சி தாவுவார்கள்.
ஐதராபாத்: ஆந்திராவில் நேற்று நடந்த இடைத் தேர்தலில் பதிவான ஓட்டுகள், வரும் 15ம் தேதி எண்ணப்படுகின்றன. இதில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் ஆபத்து ஏற்படும் என, தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.,க்கள், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதையடுத்து, சட்டசபை சபாநாயகரால், இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, இந்த 16 தொகுதிகள் உட்பட, மொத்தம் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும், நெல்லூர் லோக்சபா தொகுதிக்கும், நேற்று இடைத் தேர்தல் நடந்தது. இதில், ஜெகன் மோகன் கட்சி சார்பில் 17 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பிலும், பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

அனுதாப அலை: இந்த இடைத்தேர்தல்களுக்கான பிரசாரம் தீவிரமடைந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு ஆதரவாக, இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து தொகுதிகளிலும், மக்களிடையே அனுதாப அலை எழுந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், அனைத்து தொகுதிகளிலும் நேற்று காலை திட்டமிட்டபடி ஓட்டுப்பதிவு துவங்கியது. 138 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

80 சதவீதம்: ஜெகன் மோகன் ரெட்டிக்கு செல்வாக்கு அதிகம் உள்ள கடப்பாவில் சிறிய அளவிலான வன்முறை ஏற்பட்டது. ஓட்டுப் போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், இதய பிரச்னை காரணமாக திடீரென இறந்ததால், தெலுங்கு தேசம், காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் மூன்று பேர் காயமடைந்தனர். ரேய்சாட்டி தொகுதியில், தெலுங்கு தேசம் கட்சியின் உள்ளூர் நிர்வாகி வீட்டின் மீது, சிலர் கல்வீசி தாக்கினர். இதை தவிர, வேறு பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல், ஓட்டுப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 80 சதவீதம் ஒட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், வரும் 15ம் தேதி எண்ணப்படுகின்றன.

காங்., ஆட்சிக்கு ஆபத்து: ஆந்திரா முழுவதும் ஜெகன் மோகனுக்கு ஆதரவான அலை வீசியதாலும், அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளதாலும், ஜெகன் மோகன் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து, ஆந்திர அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: இடைத்தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்தபோது, ஜெகன் மோகனை கைது செய்தது, தேர்தல் முடிவில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இந்த பின்னடைவு, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் சூழ்நிலையை உருவாக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆந்திர சட்டசபை, 294 உறுப்பினர்களைக் கொண்டது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 151 உறுப்பினர்கள் உள்ளனர். சட்டசபையில் பெரும்பான்மைக்கு 148 உறுப்பினர்கள் தேவை. இந்நிலையில், தற்போது இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில், ஜெகன் மோகன் கட்சி, கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஓட்டு போட்டார் தோனி: மேற்கு வங்கத்தின் பன்குரா, தஸ்பூர், மத்திய பிரதேசத்தின் மகேஸ்வர், திரிபுராவின் நல்சார், உ.பி.,யின் மாண்ட், மகாராஷ்டிராவின் கெய்ஜ் மற்றும் ஜார்க்கண்ட்டின் ஹாடியா உள்ளிட்ட சட்டசபைத் தொகுதிகளுக்கும் நேற்று இடைத் தேர்தல் நடந்தது. இங்கு ஓட்டுப் பதிவின்போது, பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, அமைதியாகத் தேர்தல் நடந்தது. ஜார்க்கண்டின் ஹாடியா தொகுதிக்குட்பட்ட பகுதியில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வசித்து வருகிறார். இதையடுத்து, ராஞ்சி, ஷிவானி பகுதியில் ஜவஹர் வித்யா மந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடியில், நேற்று காலை தன் பெற்றோருடன் சென்று, தோனி ஓட்டளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக