வியாழன், 14 ஜூன், 2012

ஓடிக் கொண்டிருந்த நித்தியானந்தா, சடன் பிரேக் அடித்து, சரணடைந்தார்!

கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருந்த நித்தியானந்தா, இன்றிரவு ஓட வேண்டிய அவசியமி்ல்லை. அவரது பிடதி ஆசிரமம் அமைந்துள்ள ராம்நகர் மாவட்டத்தின் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று அவர் சரணடைந்தார். கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா மதுரைக்கு வந்து சேர்வார் என்று கூறிக்கொண்டிருந்தார் மதுரை ஆதீனம்.
நல்ல வேளையாக அப்படியான கம்ப்ளிகேஷன் எதையும் ஏற்படுத்தாமல், தம்மீது வழக்கு பதிவான மாநிலத்திலேயே சரணடைந்திருக்கிறார் அவர்.
இது ஒரு அடிதடி மிரட்டல் வழக்குதான். நித்யானந்தாவின் அமெரிக்க சிஷ்யை ஆர்த்தி ராவ் என்பவர் கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நித்தியானந்தா தன்னை மயக்கி பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அதில்தான் துவங்கியது பிரச்னை.

ரெஸ்ட் எடுங்க சுவாமி
அந்தப் பேட்டிக்கு பதிலளிக்கிறேன் என்று செய்தியாளர்களை பிடதி ஆச்சிரமத்துக்கு அழைத்த நித்தியானந்தா, பேசாமல் ஒரு அறிக்கையை கொடுத்துவிட்டு கம்மென்று இருந்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை. தாமே பதில் கூறப்போய், சிக்கிக் கொண்டார். செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு கோபம் கொண்டார். அதையடுத்து, ஆன்மீகத்தில் பற்றுள்ள அளவுக்கு அடிதடியிலும் பரிச்சயமுள்ள அவரது சிஷ்யர்கள் சிலர் செய்தியாளரைத் தாக்கத் துவங்கினர்.
நித்தியிடம் கேள்வி கேட்ட, கன்னட சுவர்ணா டிவி செய்தியாளர் அஜீத் என்பவர் தாக்கப்பட்டார்.
கர்நாடகாவில் சும்மா விடுவார்களா? கன்னட செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு பதிலுக்கு பதிலடி கொடுப்பதற்காக கன்னட நவநிர்மான் சேனே என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆச்சிரமத்துக்குள் புகுந்து பதிலுக்கு தாக்கினர். இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இரு தரப்பிலும் பலர் கைதானார்கள்.
அதன்பின் விஷயம் அரசியலாகியது. கர்நாடக மாநில அரசு தலையிட்டது. நித்தியானந்தா தலைமறைவானார். அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
தலைமறைவாக இருந்த நித்தியானந்தா, இடையில் தமிழகத்துக்கு வந்துவிட்டு திரும்பினார். தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை ஏற்க கோர்ட் இன்று மறுத்தது. அதன்பின் அவர் எந்த நிமிடத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான் ராம்நகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நித்தியானந்தா சரணடைந்துள்ளார். அவரை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக