திங்கள், 11 ஜூன், 2012

பாதிக்கப்பட்ட பெண் மறுப்பு நித்யானந்தா குற்றச்சாட்டிற்கு

சென்னை : நித்யானந்தா மீது சமீபத்தில் கர்நாடகா "டிவி'யில் பேட்டியளித்த ஆர்த்தி ராவ் என்ற பெண், நித்யானந்தாவின் குற்றச்சாட்டிற்கு ஆதாரத்துடன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா மீது சமீபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, "சுவர்ணா டிவி'யில், ஆர்த்தி ராவ் என்ற பெண் பேட்டியளித்து இருந்தார். நித்யானந்தாவால் தான் பல முறை பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.இதற்கு மதுரையில் பதிலளித்த நித்யானந்தா, அந்தப் பெண்ணுக்கு எச்சில் மூலம் பரவும் "ஹெர்பிஸ் 2' என்ற பயங்கர நோய் இருந்ததாகவும், அதை குணப்படுத்திக் கொள்ளவே அவர் ஆசிரமம் வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவருடன் தான் பாலியல் உறவு கொண்டிருந்தால் தனக்கும் அந்த நோய் வந்திருக்குமே என, கேள்வி எழுப்பியிருந்தார்.
முற்றுகை:ஆர்த்தி ராவின் குற்றச்சாட்டை அடுத்து, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தை, சில கர்நாடக அமைப்புகள், கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.இதற்கிடையில், பிடதி ஆசிரமத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நித்யானந்தா சீடர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர். நித்யானந்தா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், நித்யானந்தாவின் குற்றச்சாட்டிற்கு, ஆர்த்தி ராவ் ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.

புகைப்படம் : இது குறித்து, அவர், "தினமலர்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நித்யானந்தா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளபடி, அவரது ஆசிரமத்திற்கு எப்போதாவது வந்து செல்லும் சாதாரண பக்தை அல்ல நான். 2005ல் அவர் முதன் முதலாக ஒரு குழுவுக்கு, "ஆனந்த ஸ்புரணா தியானம்' என்ற முதல் நிலை தியானப் பயிற்சியை தானே நேரடியாகக் கற்றுக் கொடுத்தார்.இந்தக் குழுவினர் தான் ஆசாரியர்கள் என பெயர் சூட்டப்பட்டு, 2005 முதல் இவர்கள், மற்றவர்களுக்கு ஆனந்த ஸ்புரணா தியானத்தை கற்றுக் கொடுக்கத் துவங்கினர். இந்த குழுவில் நானும், என் தந்தையும் இடம் பெற்றிருந்தோம். இந்தக் குழு நித்யானந்தாவுக்கு மிகவும் நெருக்கமானது. இதற்கான ஆதாரமாக என்னிடம் சில புகைப்படங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை, "தினமலருக்கு' அனுப்பியுள்ளேன்.

அதில் கீழே உட்கார்ந்து இருப்பவர்களில் இடமிருந்து மூன்றாவதாக நான் இருக்கிறேன். கடைசியாக என் தந்தை இருக்கிறார்.இதில் இருந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு அவ்வப்போது வந்து செல்லும் சாதாரண பக்தைகள் வரிசையில் நான் இல்லை என்பதையும், அவரது மிக முக்கியமான குழுவில் நான் இடம் பெற்றுள்ளேன் என்பதையும் சாதாரண மனிதர் கூட புரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு ஆர்த்தி ராவ் தெரிவித்துள்ளார்.

காணொளி:ஆர்த்தி ராவ், "சுவர்ணா டிவி'க்கு அளித்த பேட்டியின் காணொளி, "தினமலர்' இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. நித்யானந்தா மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளை, அதில் விரிவாக பார்க்கலாம்.

நித்யானந்தா சேலத்தில் பதுங்கல்? பிடதி ஆசிரமத்தில், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட வழக்கில் தலைமறைவான நித்யானந்தா, சேலத்தில் பதுங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

மதுரை ஆதீன மடத்தில் இளைய ஆதீனமாக நித்யானந்தா பொறுப்பேற்றது முதல், தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது. இதற்கு பதிலளிக்க, அவர் ஒரு மாதமாக மதுரையில் தங்கினார். ஜூன் 2ம் தேதி, கர்நாடகத்தில் இயங்கி வரும், "சுவர்ணா டிவி'யில், ஆர்த்தி ராவ் என்ற பெண், நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி அளித்த பேட்டிக்கு பதில் தெரிவிப்பதற்காக நித்யானந்தா, மதுரை ஆதீனத்துடன் பிடதி ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு, கன்னட அமைப்புகளால் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, நித்யானந்தா இருப்பிடம் குறித்து ரகசியம் காக்கப்பட்டது. ஓய்வு எடுக்க வந்த இடத்தில் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று மாலை, மதுரை ஆதீனம் மட்டும் மதுரை மடத்திற்கு திரும்பி, ஓய்வு எடுத்து வருகிறார்.

மதுரை ஆதீனம் பிடதி ஆசிரமத்தில் இருந்து திரும்பியதாகக் கூறப்பட்டாலும், அவர் நித்யானந்தாவுடன் சேலத்தில் தங்கியிருந்ததாக மற்றொரு தகவல் கிடைத்துள்ளது. நித்யானந்தா, மதுரை ஆதீனம், வைஷ்ணவி, அவரது தங்கை கஸ்தூரி, தாயார் கமலா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, சேலம் ஐந்து ரோட்டில் உள்ள கிருத்திகா பேலஸ் என்ற மூன்று நட்சத்திர ஓட்டலில், வேறொரு பெயரில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் நேற்று காலை 11.30 மணியளவில், அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். மதுரை ஆதீனமும் அங்கிருந்து தான் மதுரைக்கு சென்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக