வெள்ளி, 8 ஜூன், 2012

சிக்கலில் சிதம்பரம்??? தேர்தல் வழக்கு

ப.சிதம்பரம்: “புரியாம பேசாதிங்க.. கண்ணப்பனுக்கே கதை கந்தல்!”

Viruvirupu
உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தலில் வெற்றி பெற்றது தொடர்பாக அவர் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, தேசிய அளவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
“இதற்கெல்லாம் போய் நான் ராஜினாமா செய்ய முடியாது” என்று அறிவித்துள்ளார் அமைச்சர் ப.சிதம்பரம்.
சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த வழக்கு தான் இந்த சர்ச்சைகள் அனைத்துக்கும் தொடக்கப் புள்ளி. கண்ணப்பன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தள்ளுபடி செய்யச் சொல்லி சிதம்பரம் தாக்கல் செய்த மனுதான் தள்ளுபடியாகி விட்டது.
சிதம்பரத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்திவரும் எதிர்க் கட்சிகளுக்கு இந்த தீர்ப்பு அல்லா கிடைத்தது போலாகிவிட்டது. டெல்லியில் பேட்டியளித்த பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரி, ‘‘அமைச்சர் பதவியில் நீடிக்க சிதம்பரத்துக்கு தார்மீக உரிமை இல்லை. அவரை பதவி நீக்கம் செய்ய பிரதமருக்கு இதை விட என்ன ஆதாரம் தேவை?’’ என்று கேட்டார்.
ஆனால், காங்கிரஸ் கட்சி, ப.சிதம்பரத்தை கைவிடுவதாக இல்லை. அக் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், ‘‘சிதம்பரத்தின் மனுதான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே தவிர, அவருக்கு எதிராக தீர்ப்பு வரவில்லை. ஜெயலலிதா இதை அரசியல் பிரச்னையாக கருதுகிறார். தேர்தலில் சிதம்பரம் வெற்றி பெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அவர் ராஜினாமா செய்ய அவசியமில்லை’’ என்றார்.
இது தொடர்பாக சிதம்பரம் அளித்த பேட்டியில், ‘‘எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ராஜினாமா செய்ய தேவையில்லை. எனது கோரிக்கையை ஏற்று, எனக்கு எதிரான மனுவில் கூறப்பட்டுள்ள இரண்டு பத்திகளை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இது எனக்கு பின்னடைவு அல்ல. அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ கண்ணப்பனுக்குதான் பின்னடைவு’’ என்று கூறியிருக்கிறார்.
யாருக்கு பின்னடைவு என்பது, ராஜ கண்ணப்பன் தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்படும் போதுதான் தெரியவரும்.  சிக்கலில்  சிதம்பரம் தேர்தல்  வழக்கு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக