2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருந்த ராசா ஒன்றரை ஆண்டுகள் கழித்து இன்று கோவைக்கு வந்தார். அங்கு அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு கோவையில் இருந்து நீலகிரிக்கு காரில் சென்றார். அன்னூர் அருகே உள்ள கணசேபுரத்தில் ராசாவை வரவேற்க ஏராளமான திமுகவினர் திரண்டிருந்தனர். அவர்கள் ராசாவைப் பார்த்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா கூறுகையில்,
அவினாசி-அத்திக்கடவு திட்டம் திமுக ஆட்சியிலே அறிமுகப்படுத்தப்பட்டது. செயல்படுத்திவிட முடியுமா என்ற நிலையில் இருந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினோம். ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் அத்திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். எனவே மக்களின் குறை தீர்க்க அந்த திட்டத்தை தமிழக முதல்வரும், இந்த தொகுதி எம்.எல்.ஏ.வும் சேர்ந்து நிறைவேற்ற முன்வர வேண்டும். அதற்கு நாங்கள் எந்த வகையிலும் உதவ தயாராக உள்ளோம்.
நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மக்கள் நலனுக்காக பாடுபடுகிறோம். நீலகிரியில் போட்டியிடுமாறு கலைஞர் என்னிடம் கூறியபோது நான் யோசித்தேன். காரணம் நான் பள்ளி, கல்லூரி நாட்களில் நீலகிரிக்கு சுற்றுலா சென்றதோடு சரி. அதை பற்றி வேறு எதுவும் தெரியாதே என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர் கொங்கு மக்களும், நீலகிரி மக்களும் அன்பானவர்கள். அதனால் நீ நிச்சயம் நீலகிரியில் போட்டியிட வேண்டும் என்றார். அவர் கூறியவாறே நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள்.
நான் மத்திய அமைச்சராக இருந்தபோது கூட எனக்கு இந்த அளவுக்கு வரவேற்பில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து வந்துள்ள எனக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு உற்சாகமளிக்கிறது. அதற்காக உங்கள் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்.
நீலகிரி மக்களின் குறைகளை தீர்க்காமல் இங்கிருந்து போகமாட்டேன். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது 30 கோடி தொலை தொடர்பு இணைப்புகள் இருந்தது. தற்போது அது 100 கோடியாக அதிகரித்திருப்பதற்கு நான் தான் காரணம். 100 கோடி இணைப்புகள் மூலம் நான் தினமும் உங்களுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக