ஞாயிறு, 20 மே, 2012

TV நேரடி ஒளிபரப்பில் மம்தா ஆவேசம்: பாதியில் வெளியேறினார்

கோல்கட்டா: கார்ட்டூன் வரைந்த பேராசிரியரை கைது செய்தது, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வருவது ஆகியவை குறித்து, மாணவர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால், ஆவேசமடைந்த மம்தா பானர்ஜி, "டிவி' நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும், மாவோயிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்டுகள். அதனால் தான், இப்படி கேள்வி கேட்கின்றனர்' என, மம்தா ஆவேசமாக குற்றம் சாட்டினார்.
தனியார் ஆங்கில "டிவி' சேனல் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு, விவாத நிகழ்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேற்கு வங்க முதல்வராக மம்தா பொறுப்பேற்று, ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது குறித்து, இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, தொகுப்பாளரும், மாணவர்களும் கேட்ட கேள்விகளுக்கு, துவக்கத்தில் பொறுமையாகவும், விரிவாகவும் பதில் அளித்தார் மம்தா. சிறிது நேரத்துக்கு பின், மம்தா குறித்து கார்ட்டூன் வரைந்த ஜாதவ்பூர் பல்கலை பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா கைது செய்யப்பட்டது குறித்தும், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்தும், மாணவர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால், மம்தா கடும் ஆத்திரம் அடைந்தார்.

கார்ட்டூன் சர்ச்சை: மம்தா பேசுகையில், "கார்ட்டூனை வெறுப்பவள் அல்ல நான். அதை அதிகமாக விரும்புவேன். ஆனால், பேராசிரியர் அம்பிகேஷ் வரைந்தது கார்ட்டூன் அல்ல. அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். என்னைப் பற்றி கிண்டலாக கார்ட்டூன் வரைந்து, அவற்றை, 60 பேருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். சம்பந்தப்பட்டவர்களிடம், இதற்கு ஒப்புதல் பெறவில்லை. இவரை கைது செய்தது எப்படி தவறாகும்' என, கேள்வி எழுப்பினார். கார்ட்டூன் விவகாரத்தை பற்றி, மாணவி ஒருவர் கேட்ட கேள்வி, மம்தாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. வேகமாக, மேடையில் இருந்து எழுந்து, அந்த மாணவியை நோக்கி, "நீயும் மாவோயிஸ்ட் தான். ஜாதவ்பூர் பல்கலையை சேர்ந்த மாணவர்களை மட்டும், இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தது ஏன்? வேறு மாணவர்களை ஏன் அழைக்கவில்லை?' என, ஆத்திரத்துடன் பேசினார்.

வெளியேறினார்: இதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது குறித்து, மாணவர் ஒருவர் கேட்ட கேள்வியால், கோபத்தின் உச்சிக்கே சென்றார் மம்தா. "பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து விட்டதாக, பொய் பிரசாரம் செய்கின்றனர். மாவோயிஸ்டுகளுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் தான், இந்த பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரும், மாவோயிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் தான். அதனால் தான், மாவோயிஸ்ட் பற்றியே கேள்வி எழுப்புகின்றனர்' என, கடுமையாக குற்றம் சாட்டிவிட்டு, "டிவி' நிகழ்ச்சியில் இருந்து, பாதியிலேயே வெளியேறினார் மம்தா. இந்த சம்பவம், டில்லி மற்றும் மேற்கு வங்க அரசியலில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக