ஞாயிறு, 6 மே, 2012

Jeyalalitha: பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக என்று கூறிக் கொண்டு

"ராணுவ உளவுப்பிரிவு, மாநில உளவுப்பிரிவு மற்றும் "ரா' போன்றவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மத்திய அரசின் உளவுப்பிரிவுக்கு மட்டும் தான் திறமை இருப்பதுபோல முன்னிலைப்படுத்துவது தவறு. பயங்கரவாத தடுப்பு மையம், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது. இம்மையம் அமைப்பது குறித்து, மாநில முதல்வர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்து, விரிவாக ஆராய வேண்டும். அதுவரைக்கும் இந்த மையம் அமைப்பதை, மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார். பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக, டில்லியில் உள்துறை அமைச்சகம் நேற்று ஏற்பாடு செய்திருந்த, அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: ஏற்கத்தக்கதல்ல: பயங்கரவாதத்தை ஒழிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். ஆனால், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக என்று கூறிக் கொண்டு, மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடுவதும், அவற்றின் அதிகாரங்களை பறிக்க நினைப்பதும், ஏற்கத்தக்கது அல்ல.
பயங்கரவாத தடுப்பு மையத்தை அமைப்பது என்ற மத்திய அரசின் நடவடிக்கை, மாநில அரசுகளின் நலன்களுக்கு முற்றிலும் விரோதமானது. பலவீனமானது மும்பை தாக்குதல் மற்றும் கார்கில் போருக்கு பிறகே, பயங்கரவாத செயல்கள் என்பது, எத்தனை கொடுமையானது என்பதை, இந்தியா புரிந்து கொண்டது. அதைவிட, இந்த இரண்டு சம்பவங்களுக்கு பிறகு தான், மத்திய அரசின் உளவுப்பிரிவு, எவ்வளவு பலவீனமானது என்பதையும், நாடு புரிந்து கொண்டது. ஆனால், அதே பலவீனமான மத்திய அரசின் உளவுப்பிரிவை மையமாக கொண்டும், அதை முன்னிலைப் படுத்தும் விதமாகவும்,தேசிய பயங்கரவாததடுப்பு மையம் அமைக்கப்படுகிறது. நிறுத்தி வைக்க வேண்டும்: முற்றிலும் பலவீனமான தோற்றுப்போய் கிடக்கும், மத்திய அரசின் உளவுப்பிரிவை அடிப்படையாக கொண்டு, இந்த மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம் அமைப்பதை பல்வேறு மாநில அரசுகள் எதிர்க்கின்றன. காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளே கூட, சில குறைகள், குற்றங்களை குறிப்பிடுகின்றன. பயங்கரவாத தடுப்பு மையம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது. இம்மையம் அமைப்பது குறித்து, மாநில முதல்வர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்து, விரிவாக ஆராய வேண்டும். அதுவரைக்கும், இந்த மையம் அமைப்பதை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.
நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக, வீரப்பமொய்லி குழு அளித்த பரிந்துரைகளின்படி, இந்த மையம் அமைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அந்த அறிக்கையில் தான், மத்திய அரசின் உளவுப்பிரிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உளவுப்பிரிவை மட்டுமே கொள்ளாமல், நாட்டிலுள்ள பல்வேறு உளவுப்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, அதன் அடிப்படையில் தான் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று, அந்த குழு பரிந்துரை செய்தது. ஆனால், இம்மையமோ மத்திய உளவுப்பிரிவை மட்டுமே முன்னிறுத்தி அமைக்கப்படுகிறது.
சன்மானம் தரவேண்டும்: கடற்கரையோரங்கள், நாட்டின் எல்லைப் பகுதிகள் ஆகியவற்றின் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். உளவுத் தகவல்கள் பெறப்படுவதில் தீவிரம் காட்டப்பட வேண்டும். உளவுத் தகவல்கள் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்பட வேண்டும். மாநில அரசுகள் கேட்கும் பாதுகாப்பு கண்காணிப்பு கட்டமைப்பு வசதிகளை, மத்திய அரசு ஏற்படுத்தி தரவேண்டும். அதை விடுத்து, மாநில அரசுகளை, வெறுமனே உள்துறை அமைச்சகமும், மத்திய உளவுப்பிரிவும் குறை கூறிக் கொண்டே இருக்க கூடாது. இந்தியாவின் நிதிநிலைமை மோசமாக உள்ளது என்றும், நாட்டின் வர்த்தகம் தொடர்பாக சமநிலை காணப்படவில்லை, என அமெரிக்காவில் உள்ள சர்வதேச நிதி நிலைமை ஆய்வு நிறுவனம், மத்திய அரசை குறை சொல்லியுள்ளது.
உங்களை சரிபடுத்துங்க: முதலில், மத்திய அரசு தன்னை சரிபடுத்திக் கொண்டால் பரவாயில்லை. மாநில அரசுகள் சரியாகவே இயங்குகின்றன; ஆளுகின்றன. மாநில அரசுகளை குறை கூறுவதை தவிர்த்துவிட்டு, தனது நடவடிக்கைகளை சீர் செய்து கொள்ள, மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் மாநில முதல்வர்கள் பேசியது என்ன?
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக, டில்லியில் நேற்று நடந்த முதல்வர்கள் மாநாட்டில், பல்வேறு மாநில முதல்வர்கள் பேசியதாவது:

மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்): தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் நடவடிக்கை, நாட்டின் கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல், இந்த மையத்தை அமைப்பது தொடர்பாக, நிர்வாக ரீதியான உத்தரவைப் பிறப்பித்தது, துரதிர்ஷ்டவசமானது. மத்திய அரசின், இதுபோன்ற ஒருதலைப்பட்சமான நடவடிக்கை, மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் செயல்.
நரேந்திர மோடி (குஜராத்): தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் நடவடிக்கையின் மூலம், பண்டைக் காலத்து வைஸ்ராய் போல் செயல்பட வேண்டும் என, மத்திய அரசு நினைக்கிறது. மத்திய அரசு என்பது, சர்வ அதிகாரம் படைத்தது போலவும், மாநில அரசுகளை, அவர்களின் அடிமையைப் போலவும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. பயங்கரவாதம், நக்சலைட் பிரச்னைகளை கட்டுப்படுத்த "பொடா' சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.
நிதிஷ்குமார் (பீகார்): நாட்டின் கூட்டாட்சிக் கொள்கையை மீறும் வகையில், மத்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் விசாரணை அமைப்புக்கு, கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்கு, அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் நடவடிக்கை அதிகரிக்கும். தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, அவசரநிலை காலத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை, மறந்து விட முடியாது.
அகிலேஷ் யாதவ் (உ.பி.,): ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில், அந்த மாநில அரசுக்குத் தகவல் தெரிவிக்காமலேயே, தன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு, தற்போதுள்ள விதிமுறைகள் இடம் அளிக்கின்றன. மாநில அரசின் உரிமையில் தலையிடும், இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து, மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நவீன் பட்நாயக் (ஒடிசா): பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய அளவிலான ஒரு அமைப்பு அவசியம் தான். அதற்காக, தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு, தற்போது அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தையும், விதிமுறைகளையும் ஏற்க முடியாது. நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக