சனி, 19 மே, 2012

நித்திக்கு ஆதரவாக வரும் ‘முற்போக்காளர்கள்

நித்தியானந்தாவிற்கு அச்சுறுத்தும் தொண்டை முள்ளாக பாலியல் குற்றச்சாட்டு பூதாகரமாக எழுந்து நிற்பதை யாரும் மறுக்க முடியாது. தாராளமய சிந்தனை கொண்ட ‘முற்போக்காளர்கள்’ பலரும் இதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும். நித்தியானந்தாவின் துறவறமும், பாலியல் வேட்கையும் அவரது தனிப்பட்ட விசயம், அவரது படுக்கை அறையை எட்டிப்பார்ப்பது அநாகரீகம் என்கிறார்கள் அந்த ‘முற்போக்காளர்கள்’. ஒருவேளை அது தவறு என்றாலும் அதை கேட்க்க அருகதை உள்ளவர்கள் அவரது பக்தர்கள்தானே அன்றி மற்றவர்கள் அல்ல என்றும் கூறுகிறார்கள்.
இதை நித்தியானந்தாவும் பலமுறை விளக்கமாகக் கூறியிருக்கிறார்.
லிபரல் சிந்தனையும் பார்ப்பனிய ஆன்மீகமும் இப்படி ஒத்துப் போவது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இந்த வாதத்தை குற்றவாளிகள் பலரும் அவ்வப்போது எழுப்புவது வாடிக்கையானதுதான். பேருந்தில் பிக்பாக்கட் அடிக்கும் ஒருவன் கூட தன்னை அடிப்பதற்கு பணத்தை இழந்தவனுக்குத்தான் உரிமை உண்டெனக் கூறுவான். சட்டமும் கூட பாதிக்கப்பட்டவன் புகார் அளித்தால்தான் வழக்கையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். அப்பட்டமான பாலியல் வன்முறை நடந்தாலும் கூட பாதிக்கப்பட்டவள் புகார் தர தயாரில்லை எனும் போது குற்றம் இழைத்தவரை சட்டப்படியே தண்டிக்க முடியாது.
இதை வைத்து குற்றவாளிகள் யோக்கியமானவர்கள் என்று ஆகிவிட முடியுமா? பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக புகார் தெரிவிப்பதன் மூலம் தனது சமூக பாதுகாப்பை இழந்து விடுவார்கள் என்ற யதார்த்தமே அவர்களது சரணாகதி அணுகுமுறையை தீர்மானிக்கிறது. இது குறிப்பிட்ட சமூகத்தின் குற்றமே அன்றி பாதிக்கப்பட்டவரின் கோழைத்தனம் அல்ல.
நித்தியானந்தாவின் ஊடக உலக கொ.ப.செவாக செயல்பட்ட சாரு நிவேதிதாவின் சாட் வக்கிரத்தையே எடுத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்ட பெண் பொது வெளியில் புகாராக்கி வழக்கு தொடுக்க முன்வராத நிலையில் சாரு மீண்டும் சகஜமாக தனது பணிகளைத் தொடருகிறார். சட்டத்தின் மொழியில் அவர் குற்றவாளி இல்லை. ஆனால் அவர் வக்கிரத்திற்கு மறுக்க முடியாத சான்று இருந்தும் லீகலாக பதியப்படவில்லை என்று கிழக்குப் பதிப்பகம் பத்ரியோ, பத்திரிகையாளர் ஞாநியோ சகஜமாக அவரோடு பேசுகிறார்கள், புத்தகத்தை போடுகிறார்கள், அறிமுகம் செய்கிறார்கள்.
பொதுவில் பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் வக்கிரங்களை நாள்பட நாள்பட சமூகம் ஒரு பாரதூரமான அநீதியாக பார்ப்பதில்லை. இதைத்தான் இதெல்லாம் ஒரு விசயமா என்று அருணகிரி கேட்கிறார். கூடவே ஒரு படுக்கையறைக்குள் நடக்கும் விசயத்தை வைத்தெல்லாம் ஒருவனை தண்டிக்க முடியாது என்றும் இந்த சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள்.
நல்லது, விவசாயியின் வயலுக்குள்ளேயும், ஏழையின் குடிசைக்குள்ளேயும் அரசும், முதலாளிகளும் அநீதியாக தலையிடுகின்றனர். மின்வெட்டை ஏற்க வேண்டுமென உத்தரவு போடுகின்றனர். சமையலறைக்குள் புகுந்து விலைவாசி ஏற்றத்தை ஏற்றே ஆகவேண்டும் என கட்டளையிடுகின்றனர். மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்தே வேலை செய்ய வேண்டும் என்று அலைய விடுகின்றனர்.
இவையெல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது ஆகாதா? கேட்டால் நாட்டின் நலனுக்காக தலையிடலாம் என்பார்கள். உண்மையில் இந்த நலன் முதலாளிகளின் நலனுக்காகத்தான் தலையீடு செய்கிறது. எனில் மக்களின் நலனுக்காக ஒரு முதலாளி, சாமியாரின் படுக்கையறைக்குள் ஏன் தலையிடக்கூடாது? முகேஷ் அம்பானி கட்டியிருக்கும் ஆன்டிலியா மாளிகையை பணக் காரர்களின் வக்கிரம் என்று சொல்வது அவரது தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவது ஆகிவிடுமா? ரஜினியின் வருமானம் பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டின் மூலம் வருகிறது என்று சொல்வது அவரது தனிப்பட்ட தொழிலில் தலையிடுவது ஆகுமா?
ஆம். நித்தியானந்தாவின் மாளிகை மடமும், வசதிகளும், ஏவல் வேலைகளுக்கு காத்திருக்கும் சேவிகைகளும் மக்கள் பணத்தை ஏமாற்றி பெறப்பட்ட ஒன்று. இதை பக்தன் மட்டும்தான் கேட்க முடியுமென்றால் இந்த உலகில் எல்லா அநீதிகளையும் யாரும் எதிர்த்து கேட்க முடியாது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை ஈராக் மக்கள்தான் எதிர்க்க வேண்டும், ஆதிக்க சாதியின் திமிரை தலித் மக்கள்தான் எதிர்க்க வேண்டும், கோவிலில் தமிழ் நுழைவதற்கு பக்தன்தான் போராட வேண்டும், பாலியல் வன்முறையை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்தான் போராட வேண்டும் என்று பேசினால் அந்த தாராளமய சிந்தனையாளர்கள் ஒத்துக் கொள்வார்களா?
நித்தி : வாங்கடா வாங்க ஆதினம் வண்டிக்கு பின்னால - சாரு : வட போச்சே :-(

நித்தி விளிம்பு நிலை கலகக்காராரா?

இவர்களோடு ஒத்துப் போகும் பின்நவீனத்துவ அறிவாளிகளும் கூட நித்தியானந்தாவின் கலகத்தை வரவேற்று வாழ்த்துப்பா பாட வாய்ப்பிருக்கிறது.
தற்போது மதுரை ஆதீனத்தில் திருநங்கைகள் முக்கிய பொறுப்பில் வைக்கப்படுவார்கள் என்று நித்தியானந்தா அறிவித்திருப்பதை அவர்கள் வரவேற்கவே செய்வார்கள். மேலும் தான் ஆண்மை, பெண்மை கடந்தவர் என்று நித்தியானந்தா அறிவித்திருப்பதை திருநங்கை போல இருப்பவர் ஆதீனமாக முடியாது என்று அர்ஜூன் சம்பத் கோஷ்டி தெரிவித்திருக்கிறது. இதுவும் திருநங்கைகளை இழிவுபடுத்தும் ஒன்றுதான். இவற்றை வைத்தெல்லாம் நித்தியானந்தாவை நாம் பெண்ணுரிமை போராளியாகவோ, ‘விளிம்பு நிலை’ கலகக் காரனாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. கொண்டால் சங்கர மட, மதுரை ஆதீன அந்தப்புறங்களில் பெண்கள் வந்திருப்பதால் மடத் தலைவர்களை பெண்ணுரிமைப் போராளிகளாவும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
பின்னாளில் தனது பாலியல் அத்து மீறல்கள் நீதிமன்றத்தில் கேட்கப்பட்டால் தான் மன ரீதியாக திருநங்கை மாதிரியானவர் என்று தப்பித்துக் கொள்ளலாமென நித்தி யோசித்திருக்கலாம். சட்டத்திற்கு இந்த மொழி என்றால் சமூகத்திற்கு அப்படி சொல்ல முடியாது. அதனால்தான் தான் ஒரு அர்த்தநாரீஸ்வரர் என்று ஒரே போடாக போட்டுவிட்டார் நித்தி.
மாமூல் வாங்கியே வயிற்றையும், பாங்க பாலன்சையும் வளர்க்கும் ஒரு ரவுடி ஊரின் கோவிலுக்கு கொடை என்றதும் வாரி வழங்குவதில்லையா? மக்களும் அவனது தயாளா குணத்தை போற்றுவதில்லையா? அது போலவே தனது பொறுக்கித்தனத்தை மறைப்பதற்கும் மடை மாற்றுவதற்கும் நித்தி இந்த கலகக்கார வேடத்தை கையிலெடுக்கிறார். இதிலெல்லாம் பின் நவீனத்துவ அறிவாளிகள் விழுந்து விடுவார்கள் என்றால் அவர்களை ஆண்டவன் தெரிதாவால் கூட காப்பாற்ற முடியாது.
சங்கர மடத்திலோ, மதுரை ஆதீனத்திலோ பெண்கள் பெண்ணுரிமையின் பாற்பட்டு வரவில்லை. அந்தப்புறத்து நாயகிகளாகத்தான் மறைமுகமாக கொண்டு வரப்படுகிறார்கள். ஆதலால் இது நாம் பெருமைப்படத்தக்க ஒன்றல்ல. சபரிமலையில் பெண்கள் வழிபடவேண்டும், கருவறைக்குள் பெண்கள் பூஜை செய்ய உரிமை வேண்டும், ஆதீன, மடங்களின் தலைவர்களாகவும் பெண்கள் வருவதற்கு உரிமை வேண்டும் என்று கோரினால்தான் அது பெண்ணுரிமையின் பாற்பட்டது.
‘கற்பை’ப் போற்றும் இந்துமதம்தான் தேவதாசிகளையும் கொண்டு வந்திருக்கிறது. ‘தாய்மையை’க் கொண்டாடும் இந்து மதம்தான் தாய்மார்களை உடன்கட்டை ஏற்றிக் கொன்றது. ஆறுகளுக்கு பெண்களது பெயரை வைத்ததாகப் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனியம்தான் விதவைப் பட்டத்தையும் திணித்தது. ‘குழந்தைகள் தெய்வங்கள்’ என்று பார்த்த பார்ப்பனியம்தான் பால்ய விவாகத்தையும் பேணி வளர்த்தது. எனவே பார்ப்பனியத்தின் ஒழுக்கமும், ஒழுக்கமின்மையும் என்பது ஒரு அடக்குமுறையின் மறுபாதி நாணயம்.
இதற்கு மேலும் நித்தியானந்தாவின் தனிப்பட்ட உரிமைகள் குறித்து கவலைப்படுவர்களை நாம் ஒன்றும் செய்ய இயலாது. என்றாலும் இதை வைத்து நித்தியானந்தா ஆதீனமாவதற்கு உரிமை இல்லை என்று நாம் கூறவில்லை. உரிமை உண்டு என்று ‘ஆதரிக்கவே’ செய்கிறோம்.
அதற்கு போலி சாமியார், நல்ல சாமியார் என்ற பொருட்பிழை கொண்ட வழக்கை பரிசீலிக்க வேண்டும்.
- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக