சட்டமன்ற விடுதியில், “அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி!”
Viruvirupu
சட்டமன்ற
விடுதிக்கு இப்போது இரவு நேரங்களில் நீங்கள் போனால், உங்களை ஒரு விநோதமான
சத்தம் வரவேற்கும். ஏதோ ஒரு நாடகக் குழுவின் ஒத்திகை அறைக்குள்
வந்துவிட்டோமோ என்றுகூட நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள்.
எம்.ஜி.ஆர் படங்களில் அந்தநாளைய வில்லன் பி.எஸ்.வீரப்பா, “அடைந்தால்
மகாதேவி, இல்லையேல் மரணதேவி” என்று டயலாக் பேசுவதுபோல, கட்டைக் குரல்களில்,
ஏற்ற இறக்கங்களுடன் சிலர் பேசும் டயலாக்குகள் உங்கள் காதுகளில் விழும்.நம்ம சட்டமன்ற உறுப்பினர்களை மகிழ்விக்க விடுதிக்கு அழைத்து வரப்பட்ட நாடகக் குழுவல்ல, சாட்சாத் சட்டமன்ற உறுப்பினர்களே, வீர வசனம் பேசிப் பழகிக் கொண்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
எல்லாம் நம்ம அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள்தான்!
இது என்ன விபரீதம் என்று திகைக்காதீர்கள். சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோதே ஆரம்பித்த பழக்கம் இது. சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்து சில நாட்கள் வசனப் பயிற்சிக்கு ஓய்வு கொடுத்திருந்தார்கள். இப்போது மீண்டும் துவங்கி விட்டார்கள்.
சட்டசபையில் சில அமைச்சர்கள் சாமர்த்தியமான வார்த்தைகளில் விஜயகாந்த் பற்றி பேசி வம்புக்கு இழுத்ததையும், அடுக்கு மொழியில் ‘அம்மாவை’, அமாவாசை தவிர்ந்த அனைத்துடனும் ஒப்பிட்டுப் பேசியதையும் கேட்டிருப்பீர்கள்.
மளிகைக் கடையில் மல்லிகா சோப் கேட்டு வாங்குவதற்குகூட, வாய் குளறும் சில எம்.எல்.ஏ.க்கள், நேர்த்தியாக ஏற்ற இறக்கங்களுடன் பேசியதைக் கண்டு வியந்திருப்பீர்கள்.
அந்தப் பேச்சு எல்லாம், இங்கிருந்து வந்தவைதான். சில அமைச்சர்கள் பத்திரிகையாளர்களை பயிற்சியாளர்களாக வைத்திருக்கின்றனர். ஓரிருவர், கட்சிப் பேச்சாளர்களை அழைத்து பயிற்சி பெற்றனர். சில அமைச்சர்களின் சட்டசபை பேச்சை எழுதிக் கொடுக்கவும், பைசா கொடுக்கப்பட்டது.
சட்டசபையில் பேச்சைக் கேட்டு அம்மா பாராட்டினாலோ, குலுங்கிக் குலுங்கி சிரித்தாலோ, எழுதிக் கொடுத்தவருக்கு போனஸ் கிடைக்கும். ஒருவேளை அம்மா பேச்சைக் கேட்டு, கைதட்டி விட்டால்? எமக்கு தெரிந்த பத்திரிகையாளருக்கு சுளையாக 10,000 ரூபா கிடைத்தது!
கவர்னர் உரைக்கான தொடர், மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர், மொத்தம் 38 நாட்கள் நடந்தன. இந்த 38 நாட்களும், பாவம் எத்தனை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மனப்பாடம் செய்து கஷ்டப் பட்டார்கள் என்று தெரிந்தால் ரத்தக் கண்ணீர் வடிப்பீர்கள்.
உலகிலேயே அமைச்சராக நீடிப்பதற்கு அதி சிரமான இடம், அ.தி,மு.க.-தான்! ரிட்டர்ன் டிக்கெட் எந்த நேரமும் பாக்கெட்டில் தயாராக இருக்க வேண்டும்.
அதுதான், சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்து விட்டதே. இப்போது மீண்டும் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?
புதுக்கோட்டை இடைத்தேர்தல் மேடைகளில் பேசி அம்மாவை இம்பிரஸ் பண்ணவாம்! நமக்கு அறிமுகமான எம்.எல்.ஏ. ஒருவர், “என்னங்க பண்றது? ஸ்கூல்ல படிக்கிறப்பகூட நான் மனப்பாடம் பண்ணியது கிடையாது. இப்ப நாலு பக்க டயலாக்கை மனப்பாடம் பண்ணி பேச வேண்டியிருக்கு” என்று வருத்தப்பட்டார்.
“அட, நீங்க ஸ்கூலுக்கெல்லாம் போனதுண்டா… அண்ணாச்சி?”
குமரிகோட்ட மலைகளும் சட்டமன்றமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக