திங்கள், 28 மே, 2012

புதுக்கோட்டை தி.மு.க.-வினர் உதடுகளில்(விஜயகாந்த்) “மச்சானை பாத்தீங்களா?”

Viruvirup
விஜயகாந்தின் தே.மு.தி.க. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தமக்கு ஆதரவு தருமாறு தி.மு.க.-வை கேட்கலாம் என்று தெரிகிறது. இதைப் பற்றி தலைமை மட்டத்தில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்ற போதிலும், தே.மு.தி.க. தலைமையால் தட்ட முடியாத குரல் ஒன்று, தி.மு.க.-வின் கதவுகளை தட்டுவோம் என்று கூறியிருக்கிறது.
தே.மு.தி.க. தலைமையால் தட்ட முடியாத குரல் என்றதும் நீங்களும் தட்டுத் தடுமாறாமல் ஊகித்திருப்பீர்களே… ஆம். அக் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் சுதீஷின் குரல்தான் அது.  இன்னமும் நெருக்கமாக சொல்வதானால், விஜயகாந்த் மச்சான்!

தே.மு.தி.க.-வின் புதுக்கோட்டை இடைத் தேர்தல் அலுவலக திறப்புவிழா மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம், இங்கு நடந்தது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், “இம்முறை தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து சந்திக்கிறோம்.
தொகுதியில் உள்ள இளைஞர்கள், தி.மு.க.-வின் ஆதரவைக் கேட்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளார்கள். கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளர் என்ற முறையில் தி.மு.க.-வின் ஆதரவைக் கேட்க வேண்டும் என்பதை நான் கட்சி தலைவர் விஜயகாந்திடம் வலியுறுத்துவேன்” என்றார்.
இவரே கூறிவிட்டதால், தி.மு.க.-விடம் பேசுவார்கள் என்ற உற்சாகத்தில் உள்ளார்கள் லோக்கல் தே.மு.தி.க.-வினர்.
தி.மு.க.-வைப் பொறுத்தவரை, தே.மு.தி.க. தாமாக முன்வந்து ஆதரவு கேட்டால், ஆதரவு கொடுக்கும் நிலையில்தான் கட்சித் தலைமை உள்ளது என்று தி.மு.க. வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. அப்படி ஆதரவு கொடுப்பதால், அவர்களுக்கு இரண்டு விதமான நன்மைகள் உள்ளன.
முதலாவது, தொண்டர்களை சோர்வடைய வைக்காமல், அ.தி.மு.க.-வுக்கு எதிராக போட்டியிடும் பீலிங்கை அவர்களுக்கு கொடுக்க முடியும், தாம் நேரில் போட்டியிடாமலேயே! இரண்டாவது, தே.மு.தி.க. ஜெயிக்காது என்று தெரியும். ஆனால் ஒருவேளை தப்பித் தவறி தே.மு.தி.க. கணிசமான ஓட்டுக்களை பெற்றுவிட்டால், அதில் உரிமை கொண்டாடவும் முடியும்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், “இங்கு (புதுக்கோட்டையில்) ஆளும்கட்சியின் செயல்பாடுகளை சீர்தூக்கி பார்த்துதான் மக்கள் ஓட்டு போடுவார்கள். பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவைதான் அ.தி.மு.க.-வின் சாதனைகளாக உள்ளன.
அதனால்தான், புதுக்கோட்டையில் 32 அமைச்சர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர். சங்கரன்கோவிலில் 22 அமைச்சர்கள் தான் பிரசாரம் செய்ய அனுப்பப்பட்டனர்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க.-வுக்கும், தே.மு.தி.க.-வுக்கும் இடையே போட்டியில்லை. நிஜமான போட்டி, முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழக மக்களுக்கும் இடையேதான்” என்றார். அதாவது அ.தி.மு.க.-வை எதிர்த்து தமிழக மக்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்தான் தமது வேட்பாளர் என்றார்.
கலைஞர் கருணாநிதியைப் போன்ற அகட-விகடத்தில் சாமர்த்தியமுடைய ஒருவர், சுதீஷ் கூறியதை எப்படி திரித்துச் சொல்லலாம் தெரியுமா?
“தமிழக மக்களுக்கு தி.மு.க. ஆதரவு தேவைப்படுகிறது”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக