திங்கள், 28 மே, 2012

கடத்தலின் ‘உள் ரகசியம்’ அவுட்?சினிமாவாக தயாராகும்


Viruvirupu

ஆழ்கடலில் நடந்த சமீபகாலத்திய அதி சாகசச் செயல் என்று வர்ணிக்கப்பட்ட அட்வென்சர் ஒன்று, தற்போது கோர்ட்டுக்கு இழுக்கப்பட்டுள்ளது. மெர்ஸ்க் அலபாமா கப்பல் 3 வருடங்களுக்குமுன் சோமாலியக் கொள்ளையரிடம் சிக்கியதும், அதன்பின் அதிரடியாக மீட்கப்பட்டதும்தான் அந்த அட்வென்சர்.
இந்தக் கடத்தல்-மீட்பு எந்தளவுக்கு பாப்புலர் என்பதற்கு உதாரணம் வேண்டுமா? இதை மையமாக வைத்து ஹாலிவூட் திரைப்படம் ஒன்று உருவாகும் அளவுக்கு பாப்புலர். அதுவும் டாம் ஹான்க்ஸ் ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு, சம்பவம் பிரபல்யம்.

இப்போதெல்லாம், சோமாலியக் கொள்ளையர்கள் விவகாரம் என்றாலே ஹாலிவூட்டில் டபுள்-ஓகே!
தற்போது கோர்ட்டுக்கு போயிருப்பது, ஹாலிவூட் பட விவகாரம் அல்ல. நிஜமான கடத்தலில் சிக்கிக் கொண்ட கப்பல் ஊழியர்கள் ஒரு குழுவாக வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். “கப்பல் நிறுவனமும், அதன் கேப்டனும் எமது உயிர்களை பணயம் வைத்து விளையாடினார்கள்” என்ற குற்றச்சாட்டுடன்!
“2009-ல் நடைபெற்ற கடத்தல் இது. அதன் ஊழியர்கள் சிலர் இப்போது திடீரென கோர்ட்டுக்கு போயிருப்பதன் பின்னணியில் ஏதோ விவகாரம் உள்ளது” என்கிறது ‘வர்ஜினியா பைலட்’ பத்திரிகை. தற்போது மொத்தம் 50 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு பதிவாகியுள்ளது.
சரி. 3 வருடங்களுக்கு முன் நடந்த விவகாரம் என்ன?
மெர்ஸ்க் அலபாமா கப்பல் சோமாலியக் கடல்பகுதியில் சென்றபோது, கொள்ளையரிடம் சிக்கியது. கப்பலையும், மாலுமிகளையும் கடத்தல்காரர்கள் கைப்பற்றி வைத்துக் கொண்டு பணயத் தொகைக்காக பேரம் பேச தயாரானார்கள். அந்த நேரத்தில் கப்பல் கேப்டன், அதிரடியான காரியம் ஒன்றைச் செய்தார். கப்பலில் இருந்த மற்றைய மாலுமிகளை விட்டுவிட்டு, தம்மை பணயக் கைதியாக வைத்துக்கொண்டு பேரம் பேசும்படி கொள்ளையரிடம் நெகோஷியேட் பண்ணினார்.
ஆச்சரியகரமாக கொள்ளையரும் அதை ஏற்றுக் கொண்டனர். கப்பலில் இருந்த 20 மாலுமிகளையும் விடுவித்துவிட்டு, கேப்டன் ரிச்சார்ட் பிலிப்ஸை மட்டும் பணயக் கைதியாக வைத்திருக்க சம்மதித்தனர். ஆனால், அமெரிக்க கடற்படை, தமது சீல் சினைப்பர் அதிரடிப் படை ஒன்றை களத்தில் இறக்கியது.

மெர்ஸ்க் அலபாமா கப்பலின் மாலுமிகள்
கேப்டன் ஒத்துழைப்பு வழங்கிய காரணத்தால், கொள்ளையர்கள் ரிலாக்ஸ்ட் நிலையில் இருக்க, அமெரிக்க சீல் படைப்பிரிவு அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டது. தாக்குதலில் 3 கொள்ளையர்கள் கப்பல் தளத்தில் கொல்லப்பட்டனர். மற்றைய கொள்ளையர்கள் படுகாயமடைய, கேப்டன் ரிச்சார்ட் பிலிப்ஸை மீட்டது அமெரிக்க அதிரடிப்படை.

கேப்டன் ரிச்சார்ட் பிலிப்ஸ் எழுதிய புத்தகம்
மீட்கப்பட்ட கேப்டன், வெளியே வந்தபின் கடத்தலின்போது நடந்தவற்றை வைத்து ஒரு புத்தகம் எழுதினார். ‘ஒரு கேப்டனின் கடமை’ (A Captain’ Duty) என்ற அந்தப் புத்தகம் விற்பனையில் சக்கை போடு போட்டது. அதை வைத்தே, டாம் ஹான்க்ஸ் ஹீரோவாக நடிக்கும் ஹாலிவூட் படத்தின் திரைக்கதை தயாராகியது.
படத்தை பால் கிரீன்கிராஸ் டைரக்டு செய்யப் போகிறார் என்பதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பால் கிரீன்கிராஸ் இயக்கி, மெகா ஹிட் அடித்த The Bourne Ultimatum படத்தை நீங்கள் அநேகம் பார்த்திருப்பீர்கள். இந்தக் கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து தயாராகும் ‘கேப்டன் பிலிப்ஸ்’ திரைப்படம், அடுத்த ஆண்டு (2013) மார்ச் 22-ல் வெளியாகிறது.
தற்போது திடீரென, கப்பலில் இருந்த 20 மாலுமிகளில் 11 பேர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். “கேப்டனும், கப்பல் நிறுவனமும் அதிகப்படியான ரிஸ்க் எடுத்து எம்மை ஆபத்தில் சிக்க வைத்தனர். சோமாலி கரைக்கு நெருக்கமாக பயணிக்க வேண்டாம் என்று நாம் (மாலுமிகள்) பல தடவைகள் எச்சரித்தும், கேப்டன் கப்பலை கரைக்கு நெருக்கமாக செலுத்திச் சென்றார். அதனால்தான் கொள்ளையர்களிடம் நாம் சிக்கிக் கொண்டோம்” என்பதே குற்றச்சாட்டு.
கேப்டன் ஏன் அப்படிச் செய்தாராம்? வழக்கில் கப்பல் நிறுவனமும் ஏன் இழுக்கப்படுகிறது?
மாலுமிகளின் சார்பில் வாதாடவுள்ள பெண் வக்கீல் டெபோரா வாட்டர்ஸ், “கேப்டனுக்கும், கப்பல் நிறுவனத்துக்கும், கப்பலை சோமாலியக் கரைக்கு நெருக்கமாக செலுத்தில் சென்றதில், ஒரு வகையில் பொருளாதார ஆதாயம் இருந்தது” என்று ‘வர்ஜினியா பைலட்’ பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
“சோமாலியா கரைக்கு நெருக்கமாக செல்வதால், கேப்டனுக்கும், கப்பல் நிறுவனத்துக்கும் என்ன பொருளாதார ஆதாயம் இருந்திருக்க முடியும்?” என்பதை அவர் கூற மறுத்துவிட்டார். “அதை இப்போது வெளிப்படுத்த முடியாது. வழக்கு விசாரணையில் பாருங்கள், அந்த ரகசியத்தை போட்டு உடைக்கிறோம்” என்கிறார் டெபோரா.
இதில் ஏதோ உள் விவகாரம் உள்ளது. அது, டாம் ஹான்க்ஸ் சினிமாவின் திரைக் கதையைவிட சுவாரசியமாக இருக்கும் போலிருக்கே! (ஒருவேளை சினிமாவுக்கு பப்ளிசிட்டியோ… அதற்கு 11 மாலுமிகளை தேடிப்பிடித்து, வழக்கு போட வைத்து.. ம்… பெரிய ப்ராஜெக்ட்தான்!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக