செவ்வாய், 15 மே, 2012

ரஞ்சிதாவுக்கு ‘களங்கம்’ ஏற்படுத்திய ஜெயேந்திரர், எழும்பூர் வரக் கடவது!


சமுதாயத்தில் அதி உன்னத நற்பெயருடன் வாழ்ந்துவரும் ரஞ்சிதாவின் பெயருக்கு, ஜெயேந்திரரின் கூற்று தீராத களங்கத்தை ஏற்படுத்தி விட்டது
Viruvirupu
நித்தியானந்தாவுடன் தம்மை தொடர்புபடுத்தி அவதூறு தெரிவித்ததாக நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்குக்காக காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் நாளை (புதன்கிழமை) எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. ஜெயேந்திரரின் கூற்றால், ரஞ்சிதாவுக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக, அவரது புகாரில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், “நடிகை மற்றும் சிஷ்யையான ரஞ்சிதாவை நித்தியானந்தா எப்போதும் அருகிலேயே வைத்துக் கொண்டு சுற்றுகிறார்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
மனுவில் உள்ளவை கோர்ட்டுகளில் உபயோகிக்கப்படும் மொழி நடையில் உள்ளதால், அதன் சாராம்சத்தை மட்டும் எமது தமிழில் அர்த்தம் மாறாமல் இதோ, கொடுக்கிறோம். படித்துப் பாருங்கள்:

ரஞ்சிதா அம்மையார் தாக்கல் செய்த மனுவின்படி, தம்மை நித்தியானந்தா அருகில் வைத்திருப்பது, பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. இதுவரை ரஞ்சிதா அம்மையார் சம்பாதித்து வைத்திருந்த நற்பெயர், ஒரு நொடியில் அதல பாதாளத்தில் சரிந்து வீழ்ந்தது.
சமுதாயத்தில் அதி உன்னத நற்பெயருடன் வாழ்ந்துவரும் ரஞ்சிதாவின் பெயருக்கு, ஜெயேந்திரரின் கூற்று தீராத களங்கத்தை ஏற்படுத்தி விட்டது. வெளியே தலைகாட்ட முடியவில்லை.
நித்யானந்தாவின் மாநாடுகள், விழாக்களில் கலந்து கொண்டுள்ளதை தவிர வேறு ஏதுமறியாத அபலைப் பெண்மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஜெயேந்திரர் பேசியுள்ளார். இந்தப் பேச்சு, ரஞ்சிதா போன்று சமுதாயத்தில் நல்லொழுக்கத்துடன் வாழ்ந்துவரும் ஒருவருக்கு எந்தளவு மனக் கிலேசத்தை ஏற்படுத்தும் என்பதற்கு புறநாநூற்றில்கூட உதாரணம் கிடையாது.
அப்பாவிப் பெண் ஒருவரை, இடியோசை கேட்ட நாகத்தைப் போன்று மிரள வைக்கும் வார்த்தைகளை கூறிய ஜெயேந்திரரின் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதுவே ரஞ்சிதாவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் சாராம்சம்.
அநீதி கண்டு பொங்கியெழும் புதுமைப் பெண் ரஞ்சிதா, புகார் கொடுத்ததுடன் புகுந்த வீட்டில் முடங்கிக் கொள்ளவில்லை. ஜான்சி ராணியின் கம்பீரத்துடன் எழும்பூர் நீதிமன்றத்துக்கு கையில் பைலுடன் வந்தார். கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு ரவீந்திரன் முன்பு தமக்கு ஜெயேந்திரர் ஏற்படுத்தி விட்ட களங்கம் பற்றி எடுத்துரைத்தார்.
இதையடுத்து ஜெயேந்திரர் எழும்பூர் கோர்ட்டில் நாளை ஆஜராகும்படி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தாவின் தற்போதைய குருவான மதுரை மூத்த ஆதீனம், “எந்த வழக்குக்கும் இளைய ஆதீனம் கோர்ட்டுக்கு வர மாட்டார். மதுரை ஆதீனத்தின் இளைய தலைவர் கோர்ட் ஏறும் வழக்கம் கிடையாது” என்று கூறியிருந்தார்.
மதுரை ஆதீனத்துக்கு உள்ள அந்த ப்ரிவிலேஜ், காஞ்சி சங்கரமடத்துக்கு பொருந்தாது போலிருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக