செவ்வாய், 15 மே, 2012

போயஸ் கார்டனில் சிரஞ்சீவி மகளின் 40 கோடி ரூபா சிக்கியது எப்படி?

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீடு ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 36 கோடி ரூபாய் ரொக்கம், 4 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
தமிழகத்தில் நடைபெற்ற இந்த ரெயிடு, ஆந்திராவிலும், டில்லியிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளதன் காரணம், ரெயிடு செய்யப்பட்ட வீடு, தெலுங்கு நடிகர்-கம்-அரசியல்வாதி சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா மற்றும் மருமகன் விஷ்ணுபிரசாத்தின் வீடு.
ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி தலைமையில் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரஜாராஜ்யம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. அதையடுத்து இக்கட்சியின் தலைவர் சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சியை உச்சத்துக்கு கொண்டு வருவதே தமது லட்சியம் என்று மூழங்கிக் கொண்டிருந்தார்.
அப்படியிருந்தும், அவரது மகள் வீட்டில் ஏன் வருமானவரி சோதனை நடைபெற்றது?

டில்லி வட்டாரங்களில், இது வேறு ஒரு ரூட்டில் வந்து சேர்ந்த வருமானவரி சோதனை என்கிறார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் கிரானைட் தொழில்களுடன் தொடர்புடைய ஆட்களில், வருமானவரி மோசடி செய்திருக்கக் கூடியவர்களின் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் உள்ள ஆட்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டது.
அதில்தான் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா மற்றும் மருமகன் விஷ்ணுபிரசாத்தின் வீடு சிக்கிக் கொண்டது என்கிறார்கள் டில்லியில்.
சிரஞ்சிவியின் மூத்த மகள் சுஷ்மிதாவலின் படுக்கையறையில் 35.66 கோடி ரூபாய் பணம் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பூமிக்கடியில் பள்ளம்தோண்டி, 500, 1000 ரூபாய் நோட்டு கட்டுகளாக 35 அட்டைப்பெட்டிகளில் பெட்டிக்கு ஒரு கோடி வீதம் அடுக்கி வைத்திருந்தார்கள்.அத்துடன் 4 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களும் இருந்தன.
அந்த ஒரு வீட்டின் படுக்கையறையில் மட்டும் 39.66 கோடி மதிப்புள்ள பணம், பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
அதிகாரிகள் சோதனையிட துவங்கிய பின்னரே, அது சிரஞ்சீவியுடன் தொடர்புடைய வீடு என்பது வருமானவரித்துறை உயரதிகாரி ஒருவருக்கு தெரியவந்தது. அதற்குள் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா வீட்டில் பணக் கட்டுகள் எடுக்கப்பட்டு விட்டன.
அதன்பின் சோதனை வேண்டாம் என்று அதிகாரிகளை திருப்பி அழைப்பது தற்கொலைக்கு சமம்!
நாளைக்கே அரசியலில் காட்சிகள் மாறி, இந்த ரெயிடு விஷயம் மீண்டும் கிளறப்பட்டால், முதல் பலிகடா, ரெயிடு சென்ற அதிகாரிகளும், அவர்களை திரும்ப உத்தரவு கொடுத்த அதிகாரிகளும்தான்! அதனால், முன்வைத்த காலை பின்வைக்க மறுத்து விட்டார்கள் அவர்கள்.
தனது மருமகன் மற்றும் அவரது வீடுகளில் நடந்த வருமான வரித்துறை ரெய்டுகளில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார். “எனது நற்பெயரை கெடுக்க அரசியல் உள்நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகள் வெளியாகின்றன. ஊடகங்கள் சிறந்த நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். நான் நேர்மையாக வரி செலுத்துவதுடன் வருமான வரித்துறையின் பாராட்டையும் விருதையும் பெற்றவன். மருமகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் அவரது தூரத்து உறவினர்களுடையதாக இருக்கலாம்” என்பது அவரது கூற்று.
தற்போதைக்கு இந்த டயலாக்கையே  மெயின்டெயின் பண்ண வேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக