வியாழன், 3 மே, 2012

ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு

தான் ஒரு பார்லிமென்ட் எம்.பி., என்று கூறியும் தன்னை குஜராத் போலீசார் கடத்திச் சென்று சித்ரவதை செய்தனர் என்று காங்கிரசைச் சேர்ந்த ஆதிவாசி பெண் எம்.பி., ஒருவர் குற்றம் சாட்டி அழுததால், லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எம்.பி.,க்கள் பலரும் வலியுறுத்தினர்.
எம்.பி.,க்கே இந்த கதியா:லோக்சபாவில் நேற்று ஜீரோ நேரத்தின்போது, காங்கிரஸ் எம்.பி.,யான கிரிஜா வியாஸ் பேசினார். அப்போது, தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் பிரதீபா என்ற பெண் எம்.பி.,யை சுட்டிக்காட்டி பேசினார். குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,யான பிரதீபா, ஆதிவாசி வகுப்பைச் சேர்ந்தவர். பிரதீபாவுக்கு நடந்ததை விளக்கி கிரிஜா வியாஸ் பேசினார்.
அப்போது, குஜராத் மாநிலம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, தனது தொகுதிக்குட்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதீபா கிளம்பினார். ஆனால், குஜராத் போலீசார் அவரை மிரட்டி தங்களது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு கடத்திச் சென்றுள்ளனர். தான் ஒரு எம்.பி., என்றும், பார்லிமென்ட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டும் கூட, போலீசார் அவரை விடாமல் வைத்திருந்து சித்ரவதை செய்துள்ளனர்.

மோடியே காரணம்:பிறகு ஒரு வழியாக, அவரை ரயிலில் ஏற்றிவிட்டுள்ளனர். ரத்லம் என்ற ஊரில் தான் ரயிலில் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால், 200 கி.மீ., தூரத்தில் உள்ள பரோடாவில் இருந்து பிரதீபாவை போலீசார் ரயிலேற்றி விட்டுள்ளனர். இதனால் அவர் அலைக்கழிக்கப்பட்டு, மனம் மற்றும் உடல் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஆதிவாசி எம்.பி.,யான இவருக்கு இந்நிலை ஏற்படுவதற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே காரணம். அவரது உத்தரவின் பேரில் தான் அனைத்துமே நடந்துள்ளன.
இவ்வாறு கிரிஜா வியாஸ் பேசியதும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து, மோடிக்கு எதிராக குரல் கொடுத்தனர். அவையில் அமளி காணப்பட்டது.

இதையடுத்து எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், "இதுகுறித்து குஜராத் மாநில முதல்வரிடம் விளக்கம் கேட்கப்படும். இந்த சம்பவம் குறித்து முழு தகவல்களும் கிடைத்த பிறகு, இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும். இருப்பினும் ஆதிவாசி எம்.பி.,க்கு அது போன்ற அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பிரச்னையை அவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பலாம்' என்றார்.

கண்ணீர் விட்டார்:அ.தி.மு.க ., எம்.பி.,யான தம்பிதுரை எழுந்து, "ஒழுங்கு நடவடிக்கை குழுவால் எந்த பயனும் இல்லை. எம்.பி.,க்களுக்கு அந்த குழுவால் எந்த பாதுகாப்பும் இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்துறை அமைச்சர் சிதம்பரம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றார்.

குருதாஸ் தாஸ் குப்தா பேசும்போது, "ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு இப்பிரச்னையை அனுப்பினால் காலம் கடத்துவர். ஆகவே, இப்பிரச்னை குறித்து அவையே முடிவு எடுக்க வேண்டும்' என்றார்.

பின்னர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து இருந்த பி.சி.சாக்கோ' இப்பிரச்னை குறித்து சபாநாயகர் தான் பரிசீலித்து வருகிறார். எனவே, இத்துடன் இந்த பிரச்னையை முடித்துக் கொள்ள வேண்டும்' எனக் கூறினார்.

முன்னதாக கிரிஜா வியாஸ் பேசும்போது, அருகில் இருந்த பிரதீபா கண்ணீர் விட்டபடி அழுது கொண்டும், தனது கைகளில் ஏற்பட்ட காயங்களை காட்டியபடியும் இருந்தார். இதனால், அவையில் பரபரப்பு காணப்பட்டது. எம்.பி.,க்கள் பலரும் உணர்ச்சிபூர்வமாகக் காணப்பட்டனர்.

-நமது டில்லி நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக