செவ்வாய், 22 மே, 2012

கே.என்.நேருவிடம் ஒன்றரை மணி நேரம் துருவித், துருவி விசாரணை

திருச்சி: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவிடம் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் ஒன்றரை மணி நேரம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. அவர் தனது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் திருச்சி தில்லை நகர் 10வது கிராசில் உள்ள கே.என்.நேருவுக்கு சொந்தமான வீடு மற்றும் கானக்கினிய நல்லூர், சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், ராமஜெயம் ஆகியோரது வீடுகள் உள்பட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திருச்சி சுப்பிரமணியபுரம் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகுமாறு கே.என். நேருவுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று காலை 10 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் ஆஜரானார்.
துணை எஸ்.பி. ரங்கராஜ் முன்னிலையில் கே.என்.நேருவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக