செவ்வாய், 22 மே, 2012

ஜெயாவின் இமேஜுக்கு 25 கோடி வெட்டி செலவு!

நிலைக் கண்ணாடியில் முகம் பார்த்து மணிக்கணக்கில் இன்பம் காணுவது விடலைப்பருவத்தின் உளவியில். ற்று வயதானதும் இது நமக்கே தெரியாமல் மாறிவிடுகிறது. ஆனால் பாசிஸ்டுகள் மட்டும் எத்தனை வயதானாலும் தங்களது முகத்தை கட்டவுட்டிலோ, ஹோர்டிங்கிலோ, ஊடகங்களிலோ எப்போதும் பார்த்து மகிழ்வார்கள். இதில் உலக அளவில் சாதனை படைத்தவர் ஜெயலலிதா.
90களின் ஆரம்பத்தில் இவர் ஆட்சியைப் படித்ததும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஓவியர்கள் காட்டிலும் மழை! அம்மா வீட்டை விட்டு இறங்கினாலும், கோட்டைக்கு வந்தாலும், கோவிலுக்கு சென்றாலும், மழைக்கு ஒதுங்கினாலும் எங்கெங்கு காணினும் கட்டவுட்தான். மேள தாள வரவேற்பு, பழங்கள்-காய்கறிகள் வரவேற்பு வளைவுகள், சிவப்பு கார்ப்பட் வரவேற்பு என்று அ.தி.மு.க அடிமைகள் புதுசு புதுசாக வெளுத்து வாங்கினார்கள். இதன் நீட்சியாகத்தான் காலில் விழுவதிலும் சாதனை படைத்தார்கள்.
இத்தகைய மரபின் சொந்தக்காரி இன்றும் அடங்கி விடவில்லை. கடந்த மே 16 ( 16.5.12) அன்று ஜெயாவின் ஓராண்டு ஆட்சி நிறைவை ஒட்டி ” நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை” என்று ஒரு விளம்பர படையெடுப்பு இந்தியா முழுவதும் நடைபெற்றது. டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், எகனாமிக் டைம்ஸ், ஏசியன் ஏஜ், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து பிசினெஸ் லைன், மின்ட், பிசினெஸ் ஸ்டாண்டர்டு, தி ஸ்டேட்ஸ்மென், தி டெலிகிராப் மற்றும் தி ஹிந்து, அனைத்து தமிழ் பத்திரிகைகள் என சகல ஊடகங்களிலும் ஆறு பக்க விளம்பரம் பேய்மழை போல வெளிவந்தது. இதில் பல ஆங்கிலத் தினசரிகளுக்கு தமிழ்நாட்டில் பதிப்பே கிடையாது.

இதன் ஒட்டு மொத்த செலவு தோராயமாக 25 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். ஒரு நிறுவனம் ஒரே நாளில் விளம்பரத்திற்க்காக அதிக பட்சம் செலவழித்திருப்பதில் இதுதான் சாதனை என்கிறார்கள். இதற்கு முன்னர் வோடோஃபோன் நிறுவனம் தனது சாம்ராஜ்ஜியத்தை துவக்கிய தினத்தன்று அதிக பட்சம் பத்து கோடி ரூபாயை ஒரே நாளில் செலவழித்ததுதான் ரிக்கார்டாம். அந்த வகையில் இது ஒரு ரிக்கார்டு பிரேக்! அம்மாவின் ஆட்சி மட்டுமல்ல விளம்பரமும் சாதனைதான் என்று ஒரு விளம்பரம் கொடுத்து விட்டால் போயிற்று! இந்த விளம்பர யுத்தம் ஒரு நாளோடு முடிந்துவிடவில்லை. அதன் பிறகும் எல்லா தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரங்கள் இதுவரை வந்தபடிதான் இருக்கின்றன. இதன் கணக்கு தனி! எப்படியும் பல கோடிகள் இரைக்கப்பட்டிருக்கும்.

தங்கம், ஆடு-மாடு, லேப்டாப், சைக்கிள், காப்பீடு, அரிசி என்று அம்மாவின் கருணை உள்ளத்தால் நடத்தப்படும் பொருட்களின் சாதனைகளை விளம்பரங்கள் பேசின. ஆனால் இந்த திட்டங்களினால் ஆதாயம் அடையும் மக்கள் எவரும் இத்தகைய ஆங்கில விளம்பரங்களை பார்க்கப் போவதில்லை. தமிழிலும் கூட இத்தகைய அரசு விளம்பரங்களை யாரும் படிக்கப் போவதில்லை. ஆனாலும் ஆங்கிலம் படித்த இந்திய நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்திடம் தனது இமேஜ் செல்வாக்கோடு இருக்க வேண்டும் என்று  ஜெயலலிதா கருதுகிறார். இனம் இனத்தோடுதான் சேருமென்றாலும் ஆங்கில தினசரிகளில் வரும் அரசு விளம்பரங்களைக் கூட யாரும் சீண்டுவதில்லை என்று விளம்பர நிறுவன ஆட்கள் கூறுகின்றனர்.
ஒருவேளை ஜெயலலிதா தன்னைப்பற்றி ஊடகங்களில் பெரிய அளவில் அடிபட வேண்டுமென்று நினைத்தால் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்காலமென்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழக நிருபர்கள் போல பயந்து பணிந்து நடக்கும் கூட்டங்களையே அம்மா அடிக்கடி நடத்துவதில்லை. இந்திய நிருபர்கள் என்றால் அவர்கள் பில்கேட்ஸ் முன்னாடிதான் பணிவோடு பேசுவார்களே அன்றி லல்லு, முலாயம் என்றால் குதறி விடுவார்கள். அந்த அளவு அமெரிக்க அடிமைகள் என்றாலும் கான்வென்டு கல்வி புகழ் ஜெயலலிதா ஆங்கிலம் நன்கு பேசினாலும் ஓரிரு நிருபர்கள் எடக்கு மடக்காக கேட்டு விட்டால் என்ன செய்வது? இதற்காக அவர்கள் ஓ. பன்னீர் செல்வத்த்திடமா பயிற்சி எடுக்க அனுப்ப முடியும்?
கரண் தபாருடனான விவாத நிகழ்ச்சியில் மோடி, ஜெயா எனும் இரண்டு பாசிஸ்ட்டுகள் மட்டும் வெளிநடப்பு செய்ததையும், கோபத்தில் பொங்கியதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தற்போது அப்பாதையில் மம்தா பானர்ஜியும் சிஎன்என் ஐபிஎன்னின் நிகழ்ச்சி ஒன்றில் வெளிநடப்பு செய்திருக்கிறார். கேள்வி கேட்ட மாணவியையும் மாவோயிஸ்டு என்று முத்திரை குத்தியிருக்கிறார். மம்தாவுக்கே இவ்வளவு அகந்தை இருக்குமென்றால் அது ஜெயாவிடம் எத்தனை மடங்கு அதிகமிருக்கும்? அந்த வகையில் ஜெயா இப்படி இந்திய அளவு செய்தியாளர் கூட்டத்தை நடத்தி செய்தில் அடிபடுவது எல்லாம் சாத்தியமில்லை. பாசிசக் கடவுள்கள் எவரும் அடிமைகள் அல்லாத கூட்டத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. தங்கள் நிழலைக்கூட கண்டு அஞ்சும் இவர்கள் எந்த வகையிலும் வரும் மயிலிறகு எதிர்ப்பைக் கூட விரும்புவதில்லை.
2014 இல் நடைபெற வேண்டிய பாராளுமன்றத் தேர்தல்களில் ஒரு குயின் மேக்கராக இருந்து முடிந்தால் பிரதமர் பதவியையும் அடைய வேண்டும் என்ற இலட்சிய தாகத்தில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு குட்டியூண்டு தமிழ்நாடு எல்லாம் போதாது. இடையில் சொத்து குவிப்பு வழக்கு வேறு முடியாத கெட்ட கனவாய் நீண்டு கொண்டே போகிறது. இருந்தும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு சங்மாவை ஆதரிக்க வேண்டுமென்று அவர் ஒரு அதிரடியை துவங்கியிருக்கிறார்.  ஆகவேதான் இப்படியாவது ஒரு விளம்பர யுத்தத்தை நடத்தி தனது இமேஜை வென்றெடுக்க அவர் நினைத்திருக்கலாம்.
மக்களைப் பொறுத்தவரை மின்வெட்டு-மின்கட்டண உயர்வு தொடங்கி, விலைவாசி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சமச்சீர் கல்வியை ஒத்துக் கொள்ளாத திமிர், தலைமைச் செயலக மாற்றம், நூலக மாற்றம், மக்கள் நலப்பணியாளர் நீக்கம் என்று பாசிச ஜெயாவின் அடக்குமுறை ஆட்சியை அல்லும் பகலும் அனுபவித்தே வருகின்றனர். அவர்களையெல்லாம் இந்த விளம்பர பந்தாக்கள் ஒன்றும் செய்து விடாது.
எனினும் தொடர்ந்து தனது முகத்தை காண்பித்தால் பயந்து கொண்டாவது மக்கள் தன்னை ஆதரிப்பார்கள், தமிழ் நாளேடுகள் போன்று ஆங்கில நாளேடுகளும் பணிவார்கள் என்று அவர் கருதக்கூடும். இப்படித்தான் பாசிஸ்டுகளான இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியின் பிறந்த, இறந்த தினத்தென்று இந்திய அரசு தோராயமாக 30 கோடி ரூபாயை  விளம்பரத்திற்கென்று செலவழிக்கிறதாம். அப்படிப் பார்த்தால் இதுதான் ரிக்கார்டு.
ஆக மொத்தம் பாசிஸ்டுகளின் இமேஜ் கூட இப்படி மக்களின் வரிப்பணத்தில்தான் வம்படியாக கட்டியமைக்கப்படுகிறது. ஆனாலும் பாசிஸ்டுகள் தங்கள் முகத்தை வெளியில் காண்பித்தால் ஆபத்து என்று ஒரு காலம் வரும். அது வரை மக்கள் இத்தகைய பிடாரிகளின் முகத்தை சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக