செவ்வாய், 29 மே, 2012

மியன்மாரில் பிரதமர் சிங்: புதிய area சாப்.. கவனமாக நடங்க ஜி!


Viruvirupu,
கையில் 500 மில்லியன் டாலரை வைத்துக் கொண்டு, மியன்மார் நாட்டுடன் இருந்த பழைய தொடர்புகளை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். மியன்மாருக்கு 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமரின் முயற்சி, வெற்றி என்கின்றன ராஜதந்திர வட்டாரங்கள்.
கடந்த 20 ஆண்டுகளாக, ‘வெளியே சொல்லப்படாத’ சில காரியங்களை புதுடில்லி மியன்மாருக்குள் செய்துகொண்டு இருந்தது. குறிப்பிட்ட ஒரு விடுதலை அமைப்புக்கு மறைமுக உதவிகள் (பணம், ஆயுதங்கள்) செய்ததும் அதில் அடங்கும்.
தற்போது, ஜனநாயகப் பாதையில் திரும்பியுள்ள (அல்லது, திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள) அந்த நாட்டுடன், 20 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய உறவுகளை புதுப்பிப்பதே, புதுடில்லியின் வெளியுறவுக் கொள்கை.

மியன்மாருக்கு புதுடில்லி காட்டியுள்ள கேரட், 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள். பிரதமர் சிங்கின் மூன்று நாள் விஜயத்தின்போது, ‘புதுடில்லியின் அன்பை வெளிக்காட்டும்’ நடவடிக்கையாக இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பல வர்த்தக, மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ராணுவ ஒப்பந்தங்கள் ஏதும் செய்யப்பட்டதாக பிரஸ்தாபம் இல்லை. ஆனால், எல்லைப் பாதுகாப்பு தொடர்பான சில ராணுவ ஒப்பந்தங்களும் மேஜையில் இருந்தன என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வகை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டாலும், கதை வெளியே வராது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா, மியன்மார் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் இரு மடங்காக வேண்டும் என்ற டார்கெட்டுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பஸ் போக்குவரத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும், அந்தத் திட்டம் தாமதமாகியுள்ளது.
இன்டர்-கன்ட்ரி பஸ் போக்குவரத்தை ஆரம்பிப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, இந்தியாவில் இருந்து மியன்மாருக்கு நேரடி ரயில் சேவை ஆரம்பிக்கும் திட்டம் மேஜையில் உள்ளது.
இதற்கான ரயில் பாதைகளை அமைக்கும் செலவுகளை இந்தியா ஏற்றுக் கொள்ளும்.
இந்தியா வழங்கும் 500 மில்லியன் டாலர் கிரெடிட் லைன் தொடர்பாக மியன்மார் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பை உங்களில் எத்தனைபேர் கவனமாகப் படித்தீர்களோ, தெரியாது. மியன்மார் அரசு செய்திக் குறிப்பில், “இந்தியா வழங்கும் 500 மில்லியன் டாலர் உதவி முற்றுமுழுதாக, மியன்மரின் வேளாண்மை மற்றும் நீர் வழங்கல் திட்டங்களில் பயன்படுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் அர்த்தம் என்ன தெரியுமா?
தாம் வழங்கும் நிதியை ராணுவ விவகாரங்களுக்கு பயன்படுத்தப்பட கூடாது என்ற நிபந்தனையுடனே, புதுடில்லி பணம் கொடுத்திருக்கிறது. (இந்திய உளவுத்துறை றோ, மியன்மாருக்குள் ரகசியமாக விநியோகம் செய்த பழைய ஆயுதங்கள் ரீபிளேஸ் செய்யப்பட கூடாது என்றும்,  நீங்கள் விரும்பினால் புரிந்து கொள்ளலாம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக