செவ்வாய், 29 மே, 2012

திருமண விழாவில் நடனமாடியது தப்பாம்.. 2 பெண்கள், 4 ஆண்களை பட்டினி போட்டு கொல்ல உத்தரவு!

 Deadly Joy Pakistani Villagers Face Death For Wedding
இஸ்லாமாபாத்: திருமண விழாவில் நடனமாடிய 2 பெண்கள், 4 ஆண்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது பாகிஸ்தானின் ஒரு கிராம பஞ்சாயத்து.
இந்த 6 பேரையும் மரத்தில் கட்டிப்போட்டு தண்ணீர் கூட கொடுக்காமல் பட்டினியால் சாக விட வேண்டும் என்று பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நான்கு ஆண்களும் தப்பியோடிவிட்டனர். ஆனால், பெண்கள் இருவரும் பஞ்சாயத்து கும்பலிடம் சிக்கிவிட்டனர். இதனால் அவர்களது கதி என்னாகுமோ என்பது தெரியவில்லை.
இஸ்லாமாபாத்தில் இருந்து 130 கி.மீ. தூரத்தில் உள்ள பந்தோ பைதர் என்ற கிராம பஞ்சாயத்து தான் இந்த கொலைவெறி தீர்ப்பைத் தந்துள்ளது.
திருமணமான இந்த 6 பேரும் தங்களது நண்பரின் திருமண விழாவில் நடனமாடி மகிழ்ந்தது தான் இவர்கள் செய்த குற்றம். இதை யாரோ மொபைல் போனில் படம் பிடித்து அதை இன்டர்நெட்டிலும் அப்லோட் செய்துவிட, தங்களது கிராம கட்டுப்பாடு சிதைந்துவிட்டதாகக் கூறிக் கொண்டு பஞ்சாயத்து தலைவர்கள் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளனர்.

ஆனால், முதலில் ஆண்களை பட்டினி போட்டு கொன்றுவிட்டு பெண்களைக் கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்கள் தப்பியோடிவிட்டதால் பெண்களை இதுவரை கொல்லாமல் விட்டு வைத்துள்ளனர். ஆனாலும் அவர்கள் கட்டிப் போடப்பட்டுள்ளதாகவும் சோறு, தண்ணீர் தரப்படவில்லை என்றும் தகவல்கள் வந்துள்ளன.

இதையடுத்து அவர்களை மீட்க போலீசாருக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களை மீட்பதோடு நின்றுவிடாமல், இந்தத் தீர்ப்பைத் தந்த கிராம பஞ்சாயத்து கும்பலை 4 நாள் போலீசார் மரத்தில் கட்டிப் போட்டால் தான் புத்தி வரும்.

கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் சுமார் 1,000 பெண்களும், சிறுமிகளும் குடும்ப மானத்தைக் காப்பதற்காக என்ற பெயரில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக