வியாழன், 24 மே, 2012

வறுமைக்கோடு வரையறை: ஏழைகளை ஒழித்துக்கட்ட ஓர் எளிய வழி!


கடந்த மார்ச் 19ஆம் தேதியன்று மத்திய அரசின் திட்டக் கமிசன் புதிய வறுமைக்கோடு குறித்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. உணவிற்கான உரிமை குறித்த வழக்கொன்றில் உச்சநீதிமன்றம், வறுமைக்கோட்டை வரையறுக்குமாறு மத்திய அரசைக் கேட்டிருந்தது. மாதமொன்றுக்கு நகர்ப்புறங்களில் ரூ. 4824/க்கும், கிராமப்புறங்களில் ரூ.3905/க்கும் குறைவான வருமானம் கொண்ட 5 பேர் அடங்கிய குடும்பங்களெல்லாம்
வறுமைக்கோட்டுக்குள் வருவனவாகும் என்று  இது தொடர்பாகத் திட்ட கமிசன் தாக்கல் செய்த உறுதியளிப்பு மனு குறிப்பிட்டுள்ளது. அதாவது, ஒரு மனிதன் நாளொன்றுக்கு நகரத்தில் ரூ.32/க்கும், கிராமப்புறத்தில் ரூ.26/க்கும் அதிகமாக சம்பாதித்தால், அவன் வறுமைக்கோட்டுக்கு மேலானவன் என்கிறது, திட்டக்கமிசன்.
“முந்தைய வெள்ளிக்கிழமை மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு, பிறகு இரு நாட்கள் உணவில்லாமல்,  பற்றி எரியும் வயிறுடன் பள்ளிக்கு வரும் சோர்வடைந்த  குழந்தைகளுக்கு எப்படி பாடம் நடத்துவது” என்கிறார்கள் மும்பை மற்றும் தானாவின் புறநகர்ப் பகுதிகளின் பள்ளி ஆசிரியர்கள். திங்கட்கிழமை தரப்படும் மதிய உணவை இரு மடங்காக்கித் தரவேண்டும் என்கிறார்கள், அப்பகுதிகளின் தாய்மார்கள். இப்படி  ஏழைகளும் பசித்த வயிறுகளும் நிறைந்த நாட்டில், நாளொன்றுக்கு ரூ.32/க்கு மேல் சம்பாதிக்கும் ஒருவரை ஏழை அல்ல என்று திட்ட கமிசன் சொல்வது கொடூரமான வக்கிரம்.
திட்ட கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா,  “2004 ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் 37.2 சதவீதம் பேர் வறுமையில் இருந்தார்கள். 200910 இல் இது 30 சதவீதமாகக் குறைந்துவிட்டது. முந்தைய காலத்தைவிட கடந்த ஐந்தாண்டு காலத்தில் 7.3 சதவீத அளவுக்கு  இரட்டிப்பு வேகத்தில் வறுமை குறைந்து வருகிறது” எனக்கூறியிருக்கிறார்.
மேட்டுக்குடி உலகில் வாழும் உலகவங்கியின் வளர்ப்புப் பிராணியான அலுவாலியாவுக்கு மக்களைப் பற்றியோ, வறுமையைப் பற்றியோ, பசியைப் பற்றியோ என்ன தெரியும்? அலுவாலியா  போன்ற மேட்டுக்குடி வர்க்கத்தைப் பொறுத்தவரை மக்கள் என்பவர்கள் அவர்களது புளித்த ஏப்பக் கூட்டம்தான். சாமானியர்களை அவர்கள் மக்களாகவே என்றுமே மதிப்பதில்லை. புழு, பூச்சிகளைப் போலத்தான் பார்க்கிறார்கள். அத்தகைய திமிரும் வக்கிரமும் நிறைந்த கண்ணோட்டம்தான் அலுவாலியா கும்பலின் வறுமை பற்றிய மதிப்பீட்டிலும் வெளிப்படுகிறது.
இன்றைய விலைவாசியில் இந்த ரூ.32/க்குள் ஒரு மனிதன் உயிர்வாழத்தான் முடியுமா? தனது குடும்பத்தைக் காப்பாற்றத்தான் முடியுமா? ஒருக்காலும் சாத்தியமே இல்லாத இந்த வரையறையைக் காட்டி வறுமை குறைந்துவிட்டது என்று புளுகுவதை ஏற்கத்தான் முடியுமா?
இதே காங்கிரசு கூட்டணி அரசின் தேசிய மாதிரிக் கணக்கீடு  துறை ரூ.20/க்கும் கீழாகத் தினசரி வருவாய் பெறுவோர் எண்ணிக்கை மட்டும் மொத்த மக்கள் தொகையில் 45 சதவீதமாகும் என்று புள்ளிவிவரப் பட்டியலிடுகிறது. அமைப்பு சாரா நிறுவனங்களுக்கான தேசிய கமிசனோ  77 % பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாகக் கூறுகிறது. என்.சி.சக்சேனா தலைமையில் அரசு நியமித்த வறுமைக் கோட்டுக்கான நிபுணர் குழுவோ இதனை 50 சதவீதம் என்று சொல்கிறது. ஆனாலும், “வறுமை பற்றிய மதிப்பீட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருந்த போதிலும், வறுமை குறைந்து விட்டது” என்று அடித்துச் சொல்கிறார் அலுவாலியா.
வறுமைக்கோடு குறித்த இந்த அளவுகோல் சரியானதா, ரூ.32/க்குள் ஒருவர் வாழ இயலுமா என்று ஊடகங்கள் காரசாரமான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அற்பத் தொகைக்குள் ஒரு இந்தியக் குடிமகன் வாழ முடியுமா என்பதல்ல, எதற்காக இந்தப் புதிய வரையறை என்பதுதான் மையமான கேள்வி.
வறுமைக்கோடுஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி  நலத் திட்டங்களை ஒழிப்பதுதான், அரசின் திட்டமாக உள்ளது.  குறிப்பாக, உணவு மானியத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டுவது, இறுதியில் ரேசன் முறையை தனியாருக்கும், உணவுக் கொள்முதலை பன்னாட்டு  உள்நாட்டு தரகு முதலாளிகளிடமும் ஒப்படைப்பது எனும் உலக வங்கி செயல்திட்டத்தின் ஒருபகுதிதான் இப்புதிய வறுமைக்கோடு வரையறை. மானியங்களை வெட்ட வேண்டுமானால் வறுமை குறைந்துள்ளதாகவும் வறியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும்  புள்ளிவிவர ஆதாரம் காட்ட வேண்டியிருக்கிறது.  அதற்கேற்ப  புள்ளிவிவரப் புளுகுகளையும் தகிடுதத்தங்களையும் அலுவாலியா கும்பல் செய்து கொண்டிருக்கிறது.
உலகமயம்,தனியார்மயம்,தாராளமயம் கொண்டுவரப்பட்ட 1990களிலிருந்தே ஆட்சியாளர்கள் இதனைத்தான் படிப்படியாக செயல்படுத்தி வருகின்றனர். 199394இல் மன்மோகன்சிங்  நிதி அமைச்சராக இருந்தபோது, ஒரு மனிதன் உண்ணும் உணவின் கலோரி மதிப்பின்படி வறுமைக்கோட்டைக்  கணக்கிடும் முறையைக் கொண்டுவந்து, 198788 இல் 25.5% ஆக இருந்த வறுமை 199394 இல் 19% ஆகக் குறைந்ததாகச் சொன்னார்கள். 2000க்குப் பின் பல வண்ணங்களில் ரேசன் அட்டைகளைப் பிரித்து இதனைச் செயல்படுத்தினர். இந்த கலோரி கணக்கீடே அப்பட்டமான மோசடி வரையறையாகும். கணினிமயமான மேலை நாடுகளில் அலுவலகத்தில் இலகுவான வேலை செய்யத் தனிமனிதனுக்குத் தேவையான சக்தியின் மதிப்பை எடுத்துக்கொண்டு, அதனை அப்படியே இந்தியாவில் பொருத்தி,  நகர்ப்புற ஏழைக்கு 2100 கிலோ கலோரி என்றும் கிராமப்புற ஏழைகளுக்கு 2400 கிலோ கலோரி என்றும் வரையறுத்து, வறுமையை ‘வெளியேற்றி’னார்கள்.
பின்னர், கலோரி மதிப்பீட்டு முறை சரியில்லை என்று கூறி டெண்டுல்கர் கமிட்டியை நிறுவி, சுகாதாரம், கல்வி, உட்கொள்ளும் உணவின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில்  ஏழ்மையைக் கணக்கிடுவதாகக் கூறினர். முடிவாக நாளொன்றுக்கு ரூ. 32/ என வறுமையை வரையறுக்க, 30 ஆயிரம் குடும்பங்களில் சர்வே எடுக்கப்பட்டதாம். 300 கேள்விகள் கேட்கப்பட்டனவாம். வாட்டும் வறுமையை விட 300 கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஏழைகள் களைத்திருப்பார்கள் எனப் பத்திரிகையாளர் சாய்நாத் இக்கேலிக்கூத்தை வேதனையுடன் குறிப்பிடுகிறார். கடுமையான எதிர்ப்புகள் வந்ததால், டெண்டுல்கர் குழுவின் அறிக்கையை ஒதுக்கிவிட்டு இப்போது புதிய அளவுகோலின்படி வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளோரைக் கணக்கிட புதிய ஆய்வுக் குழுவையும் ஏற்படுத்தியுள்ளனர்.
ஈராக் மீதான படையெடுப்பை முன்கூட்டியே முடிவு செய்த ஜார்ஜ் புஷ், அதற்கு முன் பேரழிவு ஆயுதங்களைத் தேடுவதாகச் சொன்னார். தூக்கிலேற்றுவது என்பதை முன்னரே முடிவு செய்துவிட்டுத்தான் சதாம் உசேன் மீதான விசாரணையைத் தொடங்கியது, அமெரிக்கா. அதேபோல மானியங்களைச் சுருக்கி ஏழைகளை ஒழிப்பது என்பதை முடிவு செய்துவிட்டு, அதற்கு முகாந்திரம் தேடிக் கொள்வதற்காகவே வக்கிரமான முறையில் வறுமைக்கோட்டை வரைகிறது, மன்மோகன் சிங்  மாண்டேக்சிங் அலுவாலியா கும்பல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக