அமெரிக்காவில் உள்ள ஒரு சிறு நகரம், மதிய நேரம். டாப் கன் என்ற திரைப்படம் ஓடும் திரையரங்கின் மக்கள் வெளியேறும் வாசற்படி அருகே அமெரிக்க ராணுவத்தில் சேருவதற்கான விண்ணப்பங்களுடன் ராணுவ அலுவலர்கள் இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள். இந்த ஊரில் மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதும் இந்தத் திரைப்படம் ஓடும் ஊர்களில் ராணுவ அலுவலர்கள் இப்படித்தான் காத்திருக்கிறார்கள். ஏன்?
வியட்நாம் போரில் வாங்கிய அடிக்குப் பிறகு சொந்த நாட்டு மக்களே அமெரிக்க ராணுவத்தை எதிர்த்துப் போர் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்திய போது, அமெரிக்க அரசு ஒன்றை மட்டும் எதிர்பார்க்கவில்லை. அதுதான் ராணுவத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு.
எனவே ராணுவத்தில் போதுமான இளைஞர்கள் சேரவில்லை. என்னதான் ஆக்கிரமிப்புப் போர் என்றாலும் சுவிட்சை போட்டு நிறைவேற்றி விட முடியாதே! சண்டை போடுவதற்கு ஆள் வேண்டுமே!
இந்த நேரத்தில் அமெரிக்க ராணுவத்திற்கு கை கொடுத்த படம் தான் டாப் கன். அந்தப் படத்தின் திரைக்கதையை முதலில் பார்த்த போதே ராணுவத்தினர் முடிவு செய்து விட்டார்கள். இந்தப் படம் இளைஞர்களை அமெரிக்க ராணுவத்தைப் பற்றி பெருமை கொள்ளச் செய்யும் என்று. அதனால்தான் படம் திரையிட்ட அரங்குகளில் எல்லாம் விண்ணப்பத்துடன் ஆள் போட்டார்கள்.
டாப் கன் திரைப்படத்தின் கதை முழுவதும் அமெரிக்க விமானப் படையின் சாகசங்கள் நிறைந்தது. அதனுடன் தேசபக்தி, காதல், காமம் என சகலமும் கலந்து கட்டிய மசாலா படம்தான் அது. இத்தகைய படத்தை செட் போட்டு பிரமாண்டமாக எடுக்க வேண்டுமானால் பட்ஜெட் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டி விடும். படக் குழுவினர் எளிமையான வழியைக் கையாண்டார்கள். தங்கள் படத்தின் திரைக்கதையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்கிறோம் என்று அமெரிக்க ராணுவத்தின் காலில் விழுந்து விட்டார்கள்.
அவ்வளவு தான், அமெரிக்க ராணுவத்திடமிருந்து எல்லாம் கிடைத்தது. எல்லாம் என்றால் ராணுவ ஆயுதங்கள், வண்டிகள், உடைகள், ஏன் ராணுவ வீரர்கள் சிலரே துணை நடிகர்களாக நடித்து அசத்தி விட்டனர். டாப் கன் படத்தின் வெற்றி அமெரிக்க ராணுவம் விரிவாவதற்கு உதவியது. ஆம், ராணுவம் ஆள் பிடிப்பதற்கென்றே இன்னொரு அலுவலகத்தை ஹாலிவுட் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறந்தது.
பல நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தி அங்கிருந்து கொள்ளையடிக்கும் செல்வத்தை வைத்து தான் அமெரிக்கா ஒரு வல்லரசாக நீடிக்க முடியும். அதனால் அமெரிக்கா தான் ஒரு ராணுவ வல்லரசு என்பதை உலக மக்களுக்கு புரிய வைக்க தேர்ந்தெடுத்த சிறந்த வழிகளில் ஒன்று போர், மற்றொன்று சினிமா. சினிமாவை வெறும் பொழுதுபோக்காக அமெரிக்க ராணுவமும், பெண்டகனும் பார்க்கவில்லை. அதனால் தான் ஹாலிவுட்டுடன் அமெரிக்க ராணுவம் ஒரு கள்ள உறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஹாலிவுட்டில் இருந்து சினிமா எடுக்க வருபவர்கள் என்ன உதவி கேட்டாலும் அமெரிக்க ராணுவம் உடனே செய்யும். அத்தகைய உதவி பெறும் திரைப்படங்களில் போர்க் காட்சிகள் முதல் பல காட்சிகள் பிரமாண்டமாகவும், தத்ரூபமாகவும் இருக்க இதுவே முதல் காரணம். படத்தை ராணுவ களத்திலேயே எடுக்கவும் அனுமதி உண்டு. ராணுவத்தின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், வாகனங்கள், தளவாடங்கள், கப்பல்கள் ஏன் தேவைப்படுமென்றால் ராணுவ வீரர்களைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லாம் இலவசம்.
ராணுவம் செய்யும் இந்த உதவிக்கும் ஒரு விலை உண்டு. அவர்களிடம் முதலிலேயே திரைக்கதையைக் கொடுத்து விட வேண்டும். அவர்கள் சொல்லும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அமெரிக்க ராணுவத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். ராணுவத்தின் மீது மக்களுக்கு மதிப்பு வருவது போல் படம் இருக்க வேண்டும். தவறுகளைச் சுட்டிக் காட்டினால் கூட அது ஒரு குறிப்பிட்ட ராணுவ வீரன் அல்லது அதிகாரியின் தவறு மட்டுமே என்றுதான் கதை இருக்க வேண்டும். சுருக்கமாக டாப் கன் திரைப்படம் போல அக்கதை இருக்க வேண்டும். படத்தைப் பார்த்தால் அமெரிக்க ராணுவத்தின் பெருமையை எண்ணி அதில் சேர வேண்டும் என மக்கள் நினைக்க வேண்டும்; பிற நாட்டு மக்களுக்கு அமெரிக்க ராணுவத்தின் பிரமாண்டத்தை பார்த்து பயம் வர வேண்டும்.
இப்படித் தங்களது படைப்புரிமையைப் பலியிட்டுத்தான் போர்ப் படங்கள் நிறைய வருகின்றன. அதே நேரம் அமெரிக்க ராணுவம் தோற்பது போன்ற ஒன்றிரண்டு படம், அதுவும் பிரமாண்டமாக வருகின்றதே என்று உங்களுக்குத் தோன்றலாம்.
ப்ளாக் ஹாக் டவுண் என்ற படம் 1993-ம் ஆண்டு ஆப்பிரிக்க கண்டத்தின் சோமாலிய நாட்டின் மீதான படை எடுப்பைப் பற்றியது. உண்மையில் அங்கு அமெரிக்க ராணுவம் புறமுதுகிட்டு ஓடி வந்தது. அந்தப் படத்தை எடுக்க ராணுவம் உதவி புரிந்தது உண்மைதான். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை விதித்தனர். திரைக்கதை அமெரிக்க ராணுவ வீரர்களின் ’தியாகத்தை’த் தூக்கிப் பிடிக்க வேண்டும்; கதாநாயகர்களாகக் காட்ட வேண்டும், அவ்வளவு தான். ப்ளாக் ஹாக் டவுண் படத்தைப் பார்த்தால் அதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தோல்வியடைவதை நீங்கள் உணர மாட்டீர்கள்; ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வி’ விட்டதாக உச்சுக் கொட்டுவீர்கள். சில பத்து அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்காக சில நூறு சோமாலிய மக்கள் கொல்லப்பட்டது குறித்து எந்தக் குற்ற உணர்வுமின்றி, அமெரிக்க ராணுவ வீரனின் கொடூரத்தையே தேசபக்தி, தியாகமாக வியந்தோதும் படம் அது.
“முடியாது! நான் ராணுவத்தை விமர்சித்துப் படம் எடுக்கப் போகிறேன்” என்றால் நீங்கள் சொந்தமாகப் பணம் செலவழித்துதான் அந்தப் பிரமாண்டத்தை திரையில் கொண்டு வர வேண்டும். அது அமெரிக்க ஜனநாயகத்தின் பேச்சுரிமை என்று பீற்றினாலும் உண்மையில் சாத்தியமில்லை. ராணுவத்தின் உதவியுடன் ராணுவத்தைப் போற்றும் ஜால்ரா படங்களின் முன்பு, ராணுவத்தை விமர்சனம் செய்யும் இத்தகைய படங்கள் நிற்க முடியாது. அதாவது அவ்வளவு செலவழிக்க முடியாது.
ஆலிவர் ஸ்டோன் எனும் இயக்குனர், முன்னாள் ராணுவ வீரர், வியட்நாம் போரில் பங்கெடுத்தவர். வியாட்நாமிற்கு சென்ற போது ராணுவ வீரர்களின் உள்மனப் போராட்டங்களையும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், வியட்நாம் மக்களின் துயரத்தையும் நேரில் பார்த்தவர். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவுடன் இந்த அனுபவத்தையே படமாக எடுக்கலாம் என நினைத்தார். அவரது இயக்கத்தில் ப்ளாட்டுன் படமும் தயாராகத் தொடங்கியது. இவ்வளவுக்கும் இந்தப் படம் அமெரிக்க ஆக்கிரமிப்பை அரசியல் ரீதியாக எதிர்க்கவில்லை; மாறாக அமெரிக்க வீரர்களது உளவியல் துன்பம் என்ற கோணத்தில் மட்டுமே விமரிசித்தது. மேலும் அவருக்கு ராணுவத்திடமிருந்து பெரிதாக எந்த உதவியும் தேவைப்படவில்லை.
அவரது திரைப்படத்தின் கதையை மோப்பம் பிடித்த ராணுவத்தினர் முதலில் அதிர்ச்சி அடைந்தனர். படத்தில் ராணுவ வீரர்கள் கஞ்சா புகைப்பது, சக ராணுவ வீரர்களைக் கொல்லும் சதி, அப்பாவி மக்களைக் கொல்லும் கொடூரம், பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது போன்ற காட்சிகள் ஏராளம் இருந்தன என்று தெரிய வந்தது. விளைவு, அமெரிக்காவில் இருந்தே அவரைத் துரத்தி விட்டார்கள். வேறு வழியின்றி ஆலிவர் ஸ்டோன் அந்தப் படத்தை இங்கிலாந்து போய் எடுத்தார்.
ஆலிவர் ஸ்டோனுக்கு முன்பு இதே மாதிரி ஒரு படத்தை எடுக்க முனைந்த ஸ்டான்லி க்யுப்ரிக் நிலமை ஒன்றும் மேம்பட்டதல்ல. அவர் படமான ஃபுல் மெட்டல் ஜாக்கட் திரைப்படத்தில் ராணுவ வீரர்கள் பயிற்சி என்ற பெயரில் அனுபவிக்கும் கொடுமைகள், அவை அவர்களின் மனதைப் பாதித்து, மனநலம் பிறழ்ந்தவர்களாக அதன் பின் போருக்குச் செல்வது, அதனால் சகலரையும் சுட்டுக் கொண்டே செல்வது என்று அமெரிக்க ராணுவத்தைக் கொஞ்சம் விமர்சித்தது.
ஏன், 8 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹர்ட் லாக்கர் என்ற திரைப்படம் பெண்டகனால் உதவிகள் மறுக்கப்பட்டது. காரணம் எளிமையானது. அதில் இராக்கில் உள்ள அப்பாவி மக்களை அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கொல்லும் காட்சி இடம் பெற்றதுதான். இதில் உண்மை ஒரு சிறு துளி அளவுதான் சொல்லப்படுகின்றது. அதையே நிரகரித்து விடுகிறார்கள். அதன்படி 10 இலட்சம் இராக் மக்களைக் கொன்றதைப் பற்றி எப்பொழுதுமே ஹாலிவுட்டில் படம் வராது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?
ராம்போ துவங்கி இண்டிபெண்டன்ஸ் டே வரை ஏராளமான ஹாலிவுட் படங்களின் பிரமாண்டம் என்பது அமெரிக்க ராணுவம் போட்ட பிச்சைதான். அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பெண்டகனும், அமெரிக்க சினிமாவின் தலைநகரமான ஹாலிவுட்டும் இணைந்து நடத்தும் வாண வேடிக்கைதான் இந்தப் படங்கள்.
‘கம்யூனிஸ்டுகள்தான் கலை வெளிப்பாட்டு உரிமையில் தலையிடுவார்கள்; ஆணையிடுவார்கள்; பேச்சுரிமையை மறுப்பார்கள்‘ என்று அவதூறு பேசும் அறிஞர் பெருமக்கள், அமெரிக்க சினிமாவின் திரைக்கதையை விருப்பம் போல யாரும் எழுத முடியாது, அது இராணுவம் மட்டுமே எழுத முடியும் என்பதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக