செவ்வாய், 29 மே, 2012

சசிகலாவின் ‘விக்ரமாதித்தன் ட்ரை’ மீண்டும் ஊத்திக் கொண்டது!


Viruvirupu,

முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தாமதம் செய்யும் நோக்கத்துடன் சசிகலா தரப்பு செய்த மற்றொரு முயற்சியும் ஊற்றிக்கொண்டு விட்டது. சசிகலா தாக்கல் செய்த மனு ஒன்றை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதனால், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், ஜூன் 6-ம் தேதி, சசிகலா கட்டாயம் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கன்னித்தீவு கதை போல பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. முடிந்தவரை இழுஇழுவென இழுக்கப்பட்ட இந்த வழக்கில் ஒரு வழியாக, ஜெயலலிதா தமக்குரிய கேள்விகளுக்கு பதில் அளித்து முடித்துவிட்டார். இப்போது சசிகலாவின் டர்ன்.

கடந்த சில வாரங்களாகவே சசிகலாவிடம் கேள்வி கேட்கும் படலம் நடந்தது. இதற்கிடையே தோழிகள் இருவரும் பிரிந்தனர், பிரிந்திருந்த நாட்களிலும், சசிகலா கோர்ட்டில் ஆஜராகி பதில்களை கூறிக்கொண்டிருந்தார். அந்தப் பதில்கள் போகும் போக்கு அவ்வளவாக நன்றாக இல்லை என்ற ஒரு அபிப்பிராயம், ஜெயலலிதா தரப்பு வக்கீல்களுக்கு இருந்தது.
அதையடுத்து, தோழிகளின் இணைப்பு படலம் நடந்தது. இப்போது இருவரும் ஒரே இடத்தில் வசிக்கின்றனர்.
இணைப்புக்குப் பின், கோர்ட்டில் சசிகலா பிரேக் அடிக்க துவங்கினார். தொடர்ந்தும் பதில்கூற அவர் விரும்பவில்லை என்பது நன்றாகவே புரிந்தது.
அதையடுத்தே வழக்கை தாமதப்படுத்தும் முயற்சியில் அவரது தரப்பு இறங்கியது. 300-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த நிலையில், வழக்கின் ஆவணங்களை பார்த்தால்தான் இனி பதில் கூற முடியும் என அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை, சிறப்பு நீதிமன்றம் ஒரு கிண்டல் சிரிப்புடன் தள்ளுபடி செய்தது.
கிண்டல், கேலி எல்லாம் பார்க்கும் நிலையிலா நம் தோழிகள் உள்ளார்கள்? கருமமே கண்ணாக, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சசிகலாவின் வழக்கறிஞர் உதயஹொல்லா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதி, முழுமையான விசாரணை நடத்துவதற்காக, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மூன்று வாரம் தடை விதித்தார். விசாரணையை மே 28-ம் (நேற்று) தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார்.
சசிகலா தரப்புக்கு, ‘சிறு துளி, பெரு வெள்ளமாக’ 3 வாரங்கள் கால அவகாசம் கிட்டியது.
சசிகலாவின் மனு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த்தின் பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது. சசிகலாவின் வக்கீல் உதயஹொல்லா, “என் கட்சிக்காரர், முக்கியமான கேள்விகளுக்கு வழக்கின் கூடுதல் ஆவணங்களை பார்த்தால்தான், சரியாக பதிலளிக்க முடியும். இதற்கு முன் பல நீதிமன்றங்களில் நடந்த இது போன்ற பல வழக்குகளில், ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா விடுவாரா? அவர் குறுக்கிட்டு,“இதே வழக்கு, சென்னை நீதிமன்றத்தில் நடந்தபோது, ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவருமே ஆஜராகி பதிலளித்துள்ளனர். அப்போது, இதே சசிகலா ஆவணங்களை கேட்கவில்லை. பெங்களூருவில் நடந்த விசாரணையிலும், ஜெயலலிதா ஆவணங்களை கேட்கவில்லை. சசிகலாவிடம் பாதிக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்ட வரை அவர் ஆவணங்களை கேட்கவில்லை. இப்போது, திடீரென வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில், ஆவணங்களை கேட்கிறார். இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது” என்றார்.
நீதிபதி ஆனந்த், “விசாரணையில், சசிகலாவிடம் பாதிக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், கூடுதல் ஆவணங்களை பார்க்க வேண்டும் என கேட்பதை ஏற்க முடியாது. கேள்விகள் கேட்டு முடிந்த பின், தேவைப்பட்டால் ஆவணங்கள் கேட்டு நீதிமன்றத்தை அணுகலாம்” என்று தீர்ப்பளித்து, சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
மனு தள்ளுபடியானதால், வழக்கை விசாரிக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு விதிக்கப்பட்டிருந்த மூன்று வார தடை விலக்கப்படுகிறது.
அப்படியானால், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், வரும் 6-ம் தேதி நடக்கும் விசாரணையில், சசிகலா கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கூறிவிட்டு போங்களேன். தோழிக்கு தோள் வலி வரலாம், மயக்கம் வரலாம், அல்லது வக்கீலுக்கு புதிதாக ஒரு ஐடியா வரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக