வியாழன், 10 மே, 2012

இங்கே ஒரு தலித் முதல்வராக முடியுமா? – தொல். திருமாவளவனுடன் ஒரு சந்திப்பு


முரண்பாடுகளோடு உறவாடாமல், முரண்பாடுகளோடு உரையாடாமல் இன்றைய தேதியில் அரசியல் களமாடுவது சாத்தியமல்ல என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர், தொல். திருமாவளவன்.  திமுகவோடு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், சங்கரன்கோயிலில் அக்கட்சியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். தலித் மக்களை அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்தி அரசியல் அதிகாரத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதே தன் லட்சியம் என்று அறிவிக்கும் தொல். திருமாவளவன் அதை அடைவதற்கான பாதையில் உள்ள தடைக்கற்களே இந்த முரண்பாடுகள் என்பதை இந்தப் பேட்டியில் தெளிவுபடுத்துகிறார்.

சமகாலப் பிரச்னைகள் குறித்தும் தன் கட்சியின் எதிர்காலம் குறித்தும் ‘திராவிட இயக்க வரலாறு’ நூலாசிரியர் ஆர். முத்துக்குமாரிடம் ஆழம் இதழுக்காக மனம் திறந்து உரையாடுகிறார் தொல். திருமாவளவன். பேட்டியிலிருந்து முக்கியப் பகுதிகள்.
அங்குலம் அங்குலமாக வளர்ந்தாலும் அழுத்தந்திருத்தமாக வளர்ந்துவருகிறது விடுதலைச் சிறுத்தைகள் என்று சில ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் கூறியிருந்தீர்கள். ஆனால் இன்று தமிழக சட்டமன்றத்தில் சிறுத்தைகளின் குரல் ஒலிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக இன்னமும் காத்துக்கொண்டிருக்கும் நிலையே நீடிக்கிறதே…
தேர்தலில் வெற்றிபெறவில்லை என்பதற்காக கட்சியே வளரவில்லை என்று சொல்லமுடியாது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் கட்சியை விரிவுபடுத்தவும் வலிமைப்படுத்தவும் திட்டமிட்டோம். மாநிலம் முழுக்கக் கட்சிக் கிளைகளை உருவாக்குவது, உறுப்பினர்கள் சேர்ப்பது, தலைமை அலுவலகம் உள்ளிட்ட கட்சி அலுவலகங்கள் உருவாக்குவது, கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளைச் செய்திருக்கிறோம். கட்சிக்கு நாற்பத்தைந்து லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டோம். அதில் பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி சுமார் பதினேழு லட்சம் பேர் தீவிர உறுப்பினர்களாகியுள்ளனர். கட்சி உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் 65 சதவிகிதப் பணிகள் முடிந்துள்ளன. கட்சிக்கென தொலைக்காட்சி ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அதற்காகவும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆங்கிலத்தில் Inclusive Growth என்பார்கள். அப்படியான ஒருங்கிணைந்த வளர்ச்சியை நாங்கள் அடைந்திருக்கிறோம். எனினும், சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதால் கட்சியே காணாமல் போய்விட்டது என்று அர்த்தப்படுத்தக்கூடாது. 1980 மக்களவைத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக படுதோல்வி அடைந்தது. அத்தோடு அதிமுக அழிந்துவிட்டதா என்ன.. தேர்தலில் காமராஜர் தோற்றிருக்கிறார். அண்ணா தோற்றிருக்கிறார். ஆகவே, தேர்தல் வெற்றி – தோல்வி மட்டுமே ஒரு கட்சியின் வளர்ச்சியைக் கணிக்கும் முதன்மையான அளவுகோல் அல்ல.
தலித் மக்களுக்கான அரசியல் அதிகாரம் என்ற ஒற்றை இலக்கில் கவனம் குவித்துச் செயல்படாமல் ஈழத் தமிழர்கள், தமிழ்த் தேசியம், சிறுபான்மையினர் நலன் என்று பல தளங்களில் செயல்பட்டதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் தோல்விக்குக் காரணம் என்ற விமரிசனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காக, தமிழகத்தில் இருக்கக்கூடிய பொதுவான மக்கள் பிரச்னைகளைக் கண்டும் காணாமலும் ஒரு இயக்கம் ஒதுங்கியிருப்பது சாத்தியம் இல்லை.
அது நியாயமும் இல்லை. ஈழப்பிரச்னை, தமிழ்த் தேசியம் பற்றியெல்லாம் இன்று, நேற்று நான் பேசவில்லை. கால்நூற்றாண்டு காலமாகப் பேசிவருகிறேன்.
பெண்கள் விடுதலை, அரவாணிகள் பிரச்னை, காவிரி – முல்லை பெரியாறு – கூடங்குளம், சிறுபான்மையினர் நலன் என்று அனைத்து தரப்பினருக்காகவும் குரல் கொடுக்கிறோம். பொது நீரோட்டத்தில் இருந்து எங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அனைத்து தரப்பு மக்களோடும் இணைந்து, கலந்து, செயல்படவே விரும்புகிறோம். இலக்குகள் பரவலாக இருப்பது தோல்விக்குக் காரணமல்ல. அது வளர்ச்சிக்கான அடையாளம்தான்.
காங்கிரஸை கடுமையாக எதிர்த்துக்கொண்டே அவர்களுடன் கூட்டணியில் நீடிப்பது உறுத்தலாக இல்லையா?
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது என்னுடைய விருப்பத்துக்கு மாறாக நடந்த ஒரு விபத்து.
மத்தியில் காங்கிரஸுக்கு யார் மாற்று? இந்துத்துவ சக்தியான பாஜக. அவர்களை நாங்கள் ஆதரிக்கமுடியாது. பாமகவுக்கோ வைகோவுக்கோ பாஜகவுடன் எளிதில் உறவாட முடியும். அவர்களுக்கு சாதியமோ இந்துத்துவமோ ஒரு பிரச்னை அல்ல; ஆனால் எங்கள் கொள்கை அதற்கு இடம் கொடுக்காது. அதனால்தான் திமுக, காங்கிரஸ் இடம்பெற்ற அணியில் இணைந்தோம்.
உண்மையில், என்னுடைய எண்ணம் எல்லாம் ஈழப்பிரச்னையை முன்னிறுத்துகின்ற மதிமுக, பாமகவோடு இணைந்து புதிய அணியைக் கட்டமைப்பதுதான். அதற்கான முன்முயற்சிகளை நான் எடுத்தால், ‘இவன் எதற்காக முயற்சி எடுக்கிறான்? என்று விமரிசிப்பார்கள். அதனால் பழ. நெடுமாறன் அந்தக் கூட்டணியை உருவாக்கித் தருவார் என்று நம்பினேன். ஆனால் அந்த முயற்சியை நெடுமாறனே தோல்வியடையச் செய்துவிட்டார். நான் திமுகவுக்கு ஆதரவாளன் என்று சொல்லி என்னை ஓரங்கட்டினார்கள்.
நெடுமாறன், வைகோ, ராமதாஸ் போன்ற அனைவருமே அதிமுக ஆதரவாளர்கள் என்று தெரிந்தும் அவர்களுடன் சேர்ந்து அணி அமைக்க விரும்பியதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்? ஒன்று, நான் தேர்தல் அரசியலில் முட்டாளாக இருக்கவேண்டும் அல்லது இன உணர்வு கொண்டவனாக இருக்கவேண்டும். நான் உண்மையான இன உணர்வாளன். அதனால்தான் அவர்களுடன் அணி அமைக்க விரும்பி, வலியச் சென்று பேசினேன். ஆனால் அவர்கள் என்னைப் புறக்கணித்தார்கள். தனிமைப்படுத்தினார்கள்.
தேர்தல் அரசியலில் தனித்து நிற்பது சாத்தியமில்லை. விடுதலைச் சிறுத்தைகள் எங்கள் அணியில் நீடிப்பார்கள் என்று கலைஞர் அறிவித்தபோது, அதை எங்கள் கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர். ஆகவே, திமுக கூட்டணியில் தொடர்ந்தோம். அந்த அணியில் காங்கிரஸும் இருந்தது. அதனால்தான் காங்கிரஸ் கூட்டணியை விபத்து என்கிறேன்.
ஆக, காங்கிரஸைக் கையாளும் விஷயத்தில் குழம்பிப்போயிருக்கிறீர்களா?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டங்களில் நான் கலந்துகொள்வதன் காரணம் மிக எளிமையானது. ஈழத்தமிழர் பிரச்னை பற்றி இலங்கை அரசிடம் விவாதிக்க வேண்டும் என்றால் நாம் ராஜபக்ஷேவுடன்தான் பேசவேண்டும். அவர்தான் அங்கே ஆட்சியில் இருப்பவர். அதிகாரம் அவர் கையில்தான் இருக்கிறது. அவர் கையில் ரத்தம் இருக்கிறது என்பதற்காக அவருடன் கைகுலுக்கமாட்டேன் என்று சொல்லமுடியாது. அதைப்போலவே நம்முடைய பிரச்னைகளைப் பற்றிப் பேசவேண்டும் என்றால் இங்கே அதிகாரத்தில் இருக்கும் சோனியாவிடமும் மன்மோகன் சிங்கிடமும்தான் பேசவேண்டும். அதற்கு அவர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்ளவேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன். அவர்கள் அழைத்துவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் சொல்வதற்கெல்லாம் நாம் தலையாட்டுவதில்லை. நம் எண்ணங்களைப் பதிவுசெய்கிறோம். நம்முடைய கோரிக்கைகளை நேரில் கொடுக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், எல்லா முரண்பாடுகளும் ஒற்றுமையை நோக்கியே; எல்லா யுத்தங்களும் பேச்சுவார்த்தையை நோக்கியே!
காங்கிரஸைப் போலவே திமுகவுடனான உறவிலும் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றனவே!
திமுகவுடன் எங்களுக்குக் கசப்புணர்வுகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் அவர்களைக் காப்பாற்றுவதற்கு கலைஞர் இன்னும் தீவிரமாக இயங்கியிருக்கலாம் என்ற கருத்தை நாங்கள் அவரிடமே வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறோம். முக்கியமான தருணங்களில் காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்க திமுக தவறிவிட்டது என்பதிலும் எங்களுக்கு வருத்தம் இருக்கிறது.
திமுக ஆட்சிக்காலத்தில் எங்கள் இயக்கத் தோழர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். பலர் மீது பொய்வழக்குகள் போடப்பட்டன. அவற்றில் பல இன்னமும் நிலுவையில் இருக்கின்றன. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் என்று இருப்பது போல மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஒன்றை உருவாக்கித் தரவேண்டும் என்று கோரினோம். ஆனால் அதனை திமுக அரசு கடைசிவரை நிறைவேற்றவில்லை.
அதே சமயம், விடுதலைச் சிறுத்தைகளின் குரல் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் முதன்முதலில் ஒலித்ததற்குப் பங்களிப்பு செய்த திமுகவை நாங்கள் மறந்துவிடவில்லை. சமீபத்திய சங்கரன்கோவில் இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு நாங்கள் ஆதரவளித்தோம். மீண்டும் சொல்கிறேன். எல்லா முரண்பாடுகளும் ஒற்றுமையை நோக்கித்தானே!
திமுகவுடனும் மனமொத்து இயங்கவில்லை; பாமக உள்ளிட்ட ஈழ ஆதரவு இயக்கங்களுடனும் சுமுக உறவு இல்லை; அதிமுகவையும் எதிர்க்கிறீர்கள்; எனில், விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்காலம் கவலைதரக்கூடியதாக இருக்கிறதே?
ஈழத்தை முன்னிலைப்படுத்தும் இயக்கங்கள் எங்களை ஏனோ அணியில் சேர்த்துக்கொள்ளத் தயங்குகின்றன. பிரபாகரனைப் பிடித்துவந்து தூக்கிலிடவேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவை அவர்கள் ஏற்கிறார்கள். ஆனால் கால் நூற்றாண்டு காலமாக ஈழத்துக்காகக் குரல் கொடுத்துவரும் என்னை அவர்கள் ஏற்பதில்லை. கேட்டால், திமுக ஆதரவாளன்; காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறான் என்று என்னைச் சொல்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் கடைசிவரை அங்கம் வகித்த பாமக, காங்கிரஸுடன் உறவாடிய மதிமுக ஆகியோருடன் அவர்களால் உறவாட முடிந்தது.
இத்தனைச் சிக்கல்களையும் கடந்து, விடுதலைச் சிறுத்தைகள் முக்கியமான இயக்கமாக வளர்ந்தெழும். அதற்கான உணர்வுகளையும் புரிதலையும் கட்சியினருக்கு ஏற்படுத்தி வருகிறோம். எங்களுடைய பயணம் நீண்டகாலத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, எதிர்காலம் குறித்த நம்பிக்கை எங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.
தனியொரு கட்சிக்காக இருபத்தைந்து ஆண்டுகால உழைப்பைச் செலுத்தியதற்குப் பதிலாக, பலம் பொருந்திய ஒரு கட்சியில் இணைந்திருந்தால், தலித் மக்களுக்கான அரசியல் அதிகாரம் என்ற இலக்கில் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கமுடியுமே!
விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலுக்கு வராத சமயம் அது. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்ஷிராமை சென்னையில் சந்தித்தேன். ம. நடராசன்தான் என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைமையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார் கான்ஷிராம். ஆனால் தேர்தல் அரசியலில் எனக்கு நாட்டமில்லை என்று சொல்லிவிட்டேன். எனினும், ‘நீங்கள் எதிர்காலத்தில் தேர்தல் அரசியலுக்கு வருவீர்கள்’ என்றார். எதற்காகச் சொல்கிறேன் என்றால் தொடக்கத்திலிருந்தே எனக்கு பிரபலமான கட்சியில் சேரவேண்டும் என்ற எண்ணமே இல்லை. இப்போதும் அப்படியொரு எண்ணம் இல்லை. இனியும் வராது.
ஒருவேளை பிரபலமான கட்சியில் நான் இணைந்திருந்தால் ஒரு துதிபாடியாக இருந்திருக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். தனிப்பட்ட அளவில் வளர்ந்திருப்பேன்; பதவி, அந்தஸ்து எல்லாம் கிடைத்திருக்கும். அது எனக்கு ஏற்புடையதல்ல. இங்கே பிரபலமான கட்சியில், தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் முதலமைச்சராகவோ, அல்லது நிதி உள்ளிட்ட முக்கியத்துறைகளுக்கான அமைச்சர்களாகவோ ஆவதில்லை. வெகு சாதாரண துறைகள்தான் அவர்களுக்குத் தரப்படுகின்றன. நான் தனிக்கட்சி தொடங்கியதால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் வட்டச்செயலாளர் தொடங்கி மாநிலத் தலைமை வரையிலான பதவிகளை அடைந்துள்ளனர். அதிகாரத்துக்கான பாதையும் அவர்களுக்கு வகுத்துத் தரப்பட்டுள்ளது.
பெரியார் பிறந்த மண்ணில் ஒரு தலித் இன்னமும் முதல்வராக ஆகமுடியவில்லை என்ற கருத்து தொடர்ச்சியாகப் பேசப்படுகிறதே?
சாதி இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டவர் பெரியார். அவர் பேசிய விஷயங்களைத்தான் அண்ணா பேசினார். அவருக்குப் பிறகு கலைஞர், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலரும் பேசினார்கள். ஆனாலும் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் தொடர்பாக சாதி இந்துக்களின் மன இறுக்கத்தைத்
தளர்த்தும் பணியை பெரியாருக்குப் பின் வந்தவர்களால் அந்த அளவுக்குச் செய்யமுடியவில்லை. அதனால்தான் பெரியார் பிறந்த மண்ணில் ஒரு தலித் முதல்வராக முடியவில்லை.
அதேசமயம் சாதிக்கட்டமைப்புகள் நிறைந்த உத்தர பிரதேசத்தில் ஒரு தலித் ஐந்து முறைக்கு மேல் ஆட்சியைப் பிடிக்க முடிந்திருக்கிறது. அங்கே இருக்கும் பிராமணர்களும் மாயாவதியைத் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இங்கே நிலைமை அப்படியா இருக்கிறது? அரசியல் அங்கீகாரத்தை விடுங்கள். தலித் இயக்கங்களுக்குக் கூட்டணி அங்கீகாரத்தைக்கூட இங்கே ஒழுங்காகத் தருவதில்லையே.
கூட்டணி அங்கீகாரம் என்று எதைச் சொல்கிறீர்கள்?
தமிழகத்தில் இருக்கின்ற பெரிய கட்சிகள் எங்களைப் போன்ற தலித் இயக்கங்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அங்கீகாரம் கொடுக்கத் தயங்குகின்றனர். இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே இதுதான் இங்கே நிலைமை. ராமசாமி படையாட்சியாரும் மாணிக்கவேல் நாயக்கரும் முத்துராமலிங்கத் தேவரும் கட்சி தொடங்கியபோது அவர்களுக்குக் கூட்டணி அங்கீகாரம் கொடுத்தார்கள். ஆனால் எம்.சி. ராஜா, சிவராஜ், இரட்டை மலை சீனிவாசன், இளையபெருமாள் போன்றோர் கட்சி தொடங்கியபோது அவர்களுக்கு அத்தகைய அங்கீகாரம் தரப்படவில்லை.
இன்று ராமதாஸோ, வைகோவோ, விஜயகாந்தோ கட்சி தொடங்கினால் அவர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்குவார்கள். ஆனால் நானோ, கிருஷ்ணசாமியோ, ஜான் பாண்டியனோ கட்சி தொடங்கினால் எங்களுக்கு அத்தகைய அங்கீகாரம் தருவதில்லை. நான்கு, ஐந்து, ஆறு என்று ஒற்றை இலக்கத்திலேயே தொகுதி ஒதுக்குகிறார்கள். கூட்டணிக்கு நாங்கள் தேவை.. வாக்குகளைத் திரட்டித்தர நாங்கள் தேவை.. போஸ்டர் ஒட்டுவது தொடங்கி எல்லாவற்றுக்கும் நாங்கள் தேவை… ஆனால் எங்களுக்கான அங்கீகாரம் மட்டும் கிடையாது. இப்படியான நிலை தொடரும்போது இங்கே ஒரு தலித் முதல்வராக முடியுமா?
தலித் மக்கள் எல்லோரையும் ஓரணியில் திரட்டி கூட்டணி அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியில் விடுதலைச் சிறுத்தைகள் ஈடுபடலாமே?
ஒருங்கிணைப்பு என்பது வெறுமனே தலைவர்களை ஒன்று சேர்ப்பது அல்ல. நானும் கிருஷ்ணசாமியும் ஜான் பாண்டியனும் ஒரு மேடையில் திரள்வது அல்ல. அடித்தட்டு மக்களை ஒன்றாகத் திரட்டுவது. அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவது. ஒருங்கிணைப்பின் அவசியம் குறித்த புரிதலை உருவாக்குவது. அதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்தபோது அவர்கள் என்னை அந்நியமாகவே பார்க்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? நான் தலித் பிரச்னைகளை மட்டும் பேசுவதில்லை. ஈழம் பற்றியும் தமிழ்த் தேசியம் பற்றியும் விவாதிக்கிறேன் என்கிறார்கள். குறிப்பாக, சாதிப்பெருமையைப் பற்றி மேடைகளில் பேசுவதில்லை என்கிறார்கள். இப்படியான பிரச்னைகள்தான் எங்களுக்குள் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கின்றன.
திராவிட இயக்கத்தின் மீது கடுமையான கருத்து யுத்தத்தைத் தொடங்கியுள்ள பாமகவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிஞர் குணா எழுப்பிய வாதம்தான் இது. அதன்காரணமாக, குணா அவர்கள் பலமாக விமரிசிக்கப்பட்டதும் கண்டிக்கப்பட்டதும் தனிமைப்படுத்தப்பட்டதும் எல்லோருக்கும் தெரியும். ஒருவேளை, திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பன போன்ற கோஷங்களை ராமதாஸ் அப்போதே எழுப்பியிருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும். அதற்கு மக்கள் ஆதரவும் கிடைத்திருக்கலாம். அந்த வாய்ப்பை அப்போது தவறவிட்டதோடு, திராவிட இயக்கத்தின் முக்கியக் கட்சிகளோடு தேர்தல் உறவுகளை மாற்றிமாற்றி வைத்துவிட்டு, திடீரென அந்தக் கட்சிகளைப் பற்றி விமரிசித்துப் பேசுவது மக்கள் மத்தியில் எடுபடாது.
திமுக, அதிமுக இல்லாமல் இன்றைய தேர்தல் களத்தில் வெற்றிபெறுவது சாத்தியமே இல்லை. இத்தகைய கோஷத்தை இன்று புதிதாகப் பிறக்கும் ஒரு கட்சி எழுப்பினால் ஒருவேளை மக்கள் ஆதரவு கிடைக்குமே தவிர பாமக போன்ற கட்சிகள் எழுப்பினால் அதற்கு எவ்வித ஆதரவும் கிடைக்காது. மேலும், தமிழ்நாட்டில் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மார்வாடிகள் என்று பலரும் பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்துவருகிறார்கள். இனத் தூய்மைவாதம் பேசுவதாக நினைத்துக்கொண்டு நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடாது.
இலங்கைக்குச் சென்ற நாடாளுமன்றக் குழுவில் இருந்து திமுக, அதிமுக விலகியது சரியான செயல்தானா?
இலங்கை செல்லும் குழுவில் பங்கேற்கமாட்டோம் என்று அதிமுக சொன்னது ஒரு அரசியல் நடவடிக்கைதான். இதோ பாருங்கள், நாங்கள் செல்லவில்லை. ஆனால் திமுகவினர் சென்று ராஜபட்சேவுடன் கைகுலுக்கிறார்கள் என்று திமுகவை விமரிசனம் செய்யவே அப்படியொரு நடவடிக்கையை அதிமுக எடுத்தது. அதிமுக விலகியதும் திமுகவும் விலகி, அதிமுகவின் விமரிசனத்தில் இருந்து தன்னைத் தற்காத்துக்கொண்டுவிட்டது. உண்மையில், எம்.பிக்கள் குழுவில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டு, இலங்கை சென்றிருக்கவேண்டும். அங்கு நடப்பனவற்றைப் பார்த்து, நாடாளுமன்றத்தில் பதிவுசெய்வதற்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கவேண்டும்.
(ஆழம், மே மாத இதழில் வெளியான நேர்காணலின் முழு வடிவம் இது).
0
ஆர். முத்துக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக