திங்கள், 7 மே, 2012

புதுக்கோட்டையில் அதிமுக அதிர்ச்சி சிபிஎம் போட்டி?.. திமுக, தேமுதிக, மதிமுக ஆதரவு?

சென்னை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக போட்டியிடாமல் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் ஜகா வாங்கி விட்ட நிலையில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொது கட்சியாக நிறுத்தி அக்கட்சிக்கு திமுக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
புதுக்கோட்டைக்கு ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மே 18ம்தேதி தொடங்குகிறது. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசாரத்தையும் தொடங்கி விட்டார்.
இந்தத் தொகுதியில் தற்போது உறுப்பினராக இருந்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தராமல் புறக்கணித்து விட்டது அதிமுக. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலே வேண்டாம் என்று போய்விட்டது.
எப்படியும் தோல்வி உறுதி என்பதால் திமுகவும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு விட்டது. ஆனால் திமுகவின் ஒதுங்கலில் ஒரு ராஜதந்திரம் இருப்பதாக கூறுகிறார்கள். காரணம், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கிறது திமுக. அதற்கு இந்த புதுக்கோட்டையைப் பயன்படுத்திக் கொள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தேர்தலைப் பயன்படுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகளையும், மதிமுக, தேமுதிகவையம் திமுக பக்கம் இழுக்க அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

எனவே நாம் போட்டியிடாமல் அங்கு போட்டியிடும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்ற கருத்தோட்டத்தில் திமுக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அப்படி போட்டியிட்டால் அக்கட்சி வேட்பாளருக்கு மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும். திமுகவும் தனது ஆதரவை தானாக முன்வந்து அளிக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி நடக்கும், நடக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டுதான் கருணாநிதியும் தேர்தலைப் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக இங்கு தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் தற்போது ஆட்சியும், அதிகாரமும் அதிமுகவிடம் இருப்பதால் அப்படி ஒரு நிலையை இப்போது எதிர்பார்க்க முடியாது. ஒட்டுமொத்த அமைச்சர்களையும் அங்கு போய் அதிமுக குவித்துள்ளதால், பிரிந்து போய் போட்டியிடுவதை விட ஒரே வேட்பாளராக, பொது வேட்பாளராக நின்றுதான் அதிமுகவை எதிர்க்க வேண்டும் என்று திமுக கருதுகிறது.

திமுக தன்னைப் பொது வேட்பாளராக அறிவிக்க விரும்பினால் அதற்கு மதிமுக, தேமுதிக ஆதரவு கிடைப்பதில் சிக்கல்கள் எழலாம். ஆனால் கம்யூனிஸ்ட் வேட்பாளர் என்றால் அத்தனை பேரின் ஆதரவும் கிடைக்கும். எனவேதான் சிபிஎம் மூலமாக அதிமுகவுக்கு புதுக்கோட்டையில் நெருக்குதலை அளிக்க திமுக நினைப்பதாக தெரிகிறது.

தேமுதிக இதுவரை தான் போட்டியிடுவது குறித்து தெரிவிக்கவில்லை. ஆனால் போட்டியிடாமல் தவிர்க்க என்ன வழியெல்லாம் உள்ளது என்பதுகுறித்து அது ஆலோசித்து வருகிறது. ஒருவேளை சிபிஎம் போட்டியிடுவதாக இருந்தால் ஆதரவு தருவதாக கூறி தப்பித்துக் கொள்ளலாம் என்பது அக்கட்சியின் திட்டம். இதுவும் கூட ஒரு ராஜதந்திரம்தான். சங்கரன்கோவிலில் மிக மோசமான முறையில் அக்கட்சி தோல்வியைத் தழுவி பெரும் கெட்ட பெயரை சம்பாதித்தது நினைவிருக்கலாம். அப்படி ஒரு நிலையை புதுக்கோட்டையில் சந்திக்க அக்கட்சி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே சிபிஎம் வேட்பாளர் புதுக்கோட்டையில் போட்டியிட்டால் அவருக்கு திமுக, தேமுதிக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்பட பல கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்ற பேச்சு வலுவாகி வருகிறது. விரைவில் தனது முடிவை சிபிஎம் அறிவிக்கும் என்று தெரிகிறது. ஒருவேளை இவர்கள் அனைவரும் இணைந்து சிபிஎம்முக்கு ஆதரவு தெரிவித்தால், அது ஒரு வேளை அ திமுகவுக்கு ஏதாவது ஒரு வகையில் பாதகத்தை ஏற்படுத்தினால் நிச்சயம் தமிழக அரசியலில் அது ஒரு புதுத் திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக