திங்கள், 28 மே, 2012

பாதுகாப்பிற்கு தமிழக போலீசாரை அனுப்பவா? முல்லை பெரியாறு அணை

சென்னை:""முல்லை பெரியாறு அணை பகுதிக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையை, மத்திய அரசு அனுப்பி வைக்கத் தவறினால், அணை பாதுகாப்பிற்கு தமிழக போலீசாரை அனுப்பி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை,'' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமரிடம் முன்னதாக எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு பதிலாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை மீறியதுடன், அடுத்தடுத்து கேரள அரசு, தமிழக மக்கள் நலனுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இப்பிரச்னை, தமிழகத்தின் வாழ்வாதாரம் குறித்தது என்பதை முதல்வர் வலியுறுத்தி வருகிறார்.
இதுகுறித்து, பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்:ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த, உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். இக்குழு, முல்லை பெரியாறு அணை கட்டுமானம் வலுவாக இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து அறிய, பல்வேறு சோதனைகளை நடத்தியது.
தடுக்கிறது:அணையின் நிலைத்தன்மையை ஆய்வு செய்ய, அணையின் மேற்பரப்பில் ஆழ்துளைகளை இட்டு, அங்கிருந்த உள்ளீடுகளை வெளியே எடுத்து ஆய்வு நடத்தியது. இந்த சோதனை நிறைவடைந்தும், ஆழ்துளைகள் இதுவரை அடைக்கப்படவில்லை. கேரளாவில் மழைக்காலம் துவங்க இருக்கிறது.இந்த ஆழ்துளைகளை உடனே அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு திட்டவட்டமாகக் கூறிய பின்னும், ஆழ்துளைகளை மூட விடாமல் தமிழக அதிகாரிகளை கேரள அரசு தடுத்து வருகிறது. இப்பிரச்னையை கேரள அரசின் கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு சென்றது. ஆனால், அதனால் எவ்வித பயனும் ஏற்படவில்லை.கேரளாவில் மழைக்காலம் துவங்குவதற்கு முன், முல்லை பெரியாறு அணை பகுதியில் சோதனைக்காக தோண்டப்பட்ட ஆழ்துளைகளை உடனே அடைக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், முல்லை பெரியாறு அணையின்கட்டுமானத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், ஆழ்துளைகளை அடைக்கும் பணியை செய்ய விடாமல், கேரள அரசு தடுத்து வருகிறது.உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, முல்லை பெரியாறு அணை கட்டுமான ரீதியாக வலுவுடன் உள்ளது; பூகம்பத்தால் அணைக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. நீரியல் ஆய்வு ரீதியாகவும் அணை செம்மையாக உள்ளது. எனவே, முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்று கூறியது.முல்லை பெரியாறு அணை பகுதியை பாதுகாக்க, அங்கு கேரள போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். முல்லை பெரியாறு அணையை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு உறுதி அளித்துள்ளது.
முந்தைய கடிதம்:இருப்பினும், வழக்கமாக செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகளை, அணை பகுதியில் மேற்கொள்ளச் செல்லும் தமிழக பொறியாளர்களை, கேரள போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். கேரள அரசின் இத்தகைய போக்கு கண்டனத்துக்குரியது. இதை சரிப்படுத்த வேண்டியது அவசியம். இது தொடர்பாக நான் ஏற்கனவே உங்களுக்கு கடிதங்கள் எழுதியுள்ளேன். அதுமட்டுமில்லாமல், டிச., 25, 2011ல் மனு ஒன்றையும் நான் அளித்துள்ளேன். முல்லை பெரியாறுஅணை பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையை அனுப்பி வைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை.
வழியில்லை: பரிசோதனைக்காக தோண்டப்பட்டுள்ள ஆழ்துளைகளை அடைக்கச் செல்லும் தமிழக பொறியாளர்களை தடுக்கக் கூடாது என, கேரள அரசுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும். தொடர்ந்து இதே நிலை நீடித்தால், என் வேண்டுகோளின்படி, மத்திய தொழில் பாதுகாப்பு படையை முல்லை பெரியாறு அணை பகுதிக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு தவறினால், தமிழகத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள முல்லை பெரியாறு அணையை பாதுகாப்பதற்காக அங்கு, தமிழக போலீசாரை அனுப்பி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதுகுறித்து, உங்களது விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக