சனி, 5 மே, 2012

மதுரை ஆதீனம் போதை ஊசி மயக்கத்தில் இருந்தால், அரசு தலையிடும்!

Viruvirupu “மதுரை ஆதீனம் விவகாரத்தில், தமிழக அரசு சட்ட ரீதியாக தலையிடுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது” என்று தமிழக அரசின் சிறப்பு வக்கீல் தெரிவித்துள்ளார். நித்தியானந்தாவின் ஆட்கள் மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர் என்று தாக்கல் செய்யப்பட்ட புகார் தொடர்பான விசாரணையின்போது, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தர்மபுரம் ஆதீனத்தின் மதுரை கிளை மேலாளர் குருசாமி தேசிகர் என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, மற்றும், இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு ஆகியவை மதுரை ஹைகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆகியோர் வாதிடுகையில், “மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். மூத்த ஆதீனத்துக்கு மணிக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் பார்த்துக் கொள்கின்றனர்” என்று கூறி அதிர வைத்தனர்.
“மூத்த ஆதீனம் அருணகிரிநாத சுவாமி, தான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்று தாக்கல் செய்துள்ள மனுவில் உள்ளதுகூட அவரது கையெழுத்துதானா என்பது நிச்சயமில்லை” என்று கூறிய மனுதாரர்கள் தரப்பு, “இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தா மீது பாலியல், வரி ஏய்ப்பு வழக்குகள் உள்ளன. இதனால், மதுரை ஆதீன நிர்வாகத்தை அரசு எடுத்து நடத்த வேண்டும்” என வாதிட்டனர்.
மதுரை ஹைகோர்ட் கிளையில் நீதிபதிகள் சத்யநாராயணன், ஹரி பரந்தாமன் ஆகியோர் முன்னிலையில் தமிழக அரசின் சிறப்பு வக்கீல் முகமது மைதீன், “மதுரை ஆதீனம் விவகாரத்தில் தமிழக அரசு தலையிட சட்டத்தில் இடமுள்ளது” என்றார்.

“ஆதீனம் பிரச்னைக்கு இந்து அறநிலைய துறை சட்டம் 59-வது பிரிவின் கீழ் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். இந்து அறநிலைய துறைக்கு ஆதீன நிர்வாகம் தொடர்பாக யாராவது புகார் கொடுத்தால், சட்டப்பிரிவு 60-ன் படி, அந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெறும்போது, ஆதீன நிர்வாகத்தை தற்காலிகமாக அரசு எடுக்கலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.
“ஆனால், மதுரை ஆதீனம் தொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் அறநிலையத் துறைக்கு வரவில்லை’’ என்றும் தெரிவித்துள்ளார் அரசு தரப்பு சிறப்பு வக்கில்.
இருந்து பாருங்கள்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக