வியாழன், 24 மே, 2012

ADMK க்கு ஒத்துழைக்காததால் மதுரை கலெக்டர் சகாயம் மாற்றம்

நேர்மையான, கண்டிப்பான அதிகாரி என, பெயர் எடுத்த மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டு, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 இந்நிலையில் மதுரை அதிமுகவினருக்கு ஒத்துழைக் காததால் சகாயம் மீது அதிருப்தி இருந்து வந்தது.   அதிமுக அமைச்சர் ஒருவர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தும்,   சகாயம் தன் கடமையில் இருந்து தவற மறுத்து விட்டாராம்.

குவாரி முதலாளிகள்?கடந்த சட்டசபை தேர்தலின் போது, மதுரை மாவட்ட கலெக்டராக சகாயத்தை, தேர்தல் கமிஷன் நியமித்தது. தேர்தலுக்குப் பின், அதே மாவட்டத்தில் பணியைத் தொடர்ந்தார். நேர்மையான மற்றும் கண்டிப்பான செயல்பாடுகளால், மக்களிடம் நற்பெயர் பெற்றார்.இந்நிலையில், "டம்மி' பதவியாகக் கருதப்படும், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர் பதவிக்கு, அவர் ஏன் மாற்றப்பட்டார் என்பது குறித்து பல பரபரப்பான தகவல்கள் சுழலத் துவங்கியுள்ளன. மதுரை மாவட்டத்தில், கல் குவாரிகள் அதிகளவில் உள்ளன. கிரானைட் குவாரிகளில், பாகுபாடு இல்லாமல் சோதனை மேற்கொண்டு, அங்கு நடந்த வரி ஏய்ப்பு முறைகேடுகளைக் கண்டுபிடிக்க முயற்சித்தார். புதிய குவாரிகளுக்கு அனுமதி தருவதிலும், சட்டத்தை சரியாகக் கடைபிடித்து, பல முதலாளிகளை எரிச்சல் அடையச் செய்துள்ளார்.குவாரிகள் பெரும்பாலும் பெரிய முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் குடும்பத்தார், பினாமிகளுக்கு சொந்தமானவை என்பதால், சகாயத்தின் பதவிக்கு வினை வந்துள் ளது.மேலும், மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு வளைந்து கொடுக்காததால், விரைவில் மாற்றப்படுவார் என்று கூறப்பட்ட தகவல் தற்போது உறுதியாகிவிட்டது. "மக்கள் கலெக்டர்' என்று குறுகிய காலத்தில் பெயரெடுத்தவர் பணி இனி இருக்காது.

மதுரை கமிஷனர்:மதுரை மாநகராட்சி கமிஷனர் பதவி இதுவரை காலியாக இருந்தது. அப்பதவிக்கு, அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை சிறப்பு அலுவலரான நந்தகோபால் நியமிக்கப்பட்டார்.

சகாயம் இடத்தில் அன்சுல் :சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கும்போது, திருவண்ணாமலை தனியார் பள்ளியில் அதிரடியாக நுழைந்து, தேர்வு முறைகேட்டை அந்த மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கண்டுபிடித்தார். இந்த விவகாரம், சட்டசபையில் வெடித்தது.ஆளுங்கட்சிக்கு, சட்டசபையில் இதை சமாளிப்பதற்கு தலைவலியாக இருந்தது என்பதால், ஆளுங்கட்சி வட்டாரத்தில், கலெக்டர் நடந்து கொண்ட விதம், சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இவர் மாற்றப்படுவார் என, அப்போதே கூறப்பட்டது.
தற்போது இவரை, மதுரை மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மற்ற அதிகாரிகள்
*விடுமுறையில் இருந்து திரும்பும் பூஜா குல்கர்னி, சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (சுகா
தாரம்) நியமனம்.
*மத்திய அரசுப் பணியில் இருந்த பிராஜ் கி÷ஷார் பிரசாத், மாநிலப் பணிக்கு அழைக்கப்பட்டு, போக்குவரத்து துறை முதன்மை செயலராக நியமனம்.
*கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர் பிங்கலே விஜய் மாருதி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமனம்.

கருத்து:கலெக்டர் சகாயத்திடம் கேட்டபோது, ""அரசு ஊழியர் என்ற முறையில், தமிழக அரசின் உத்தரவை ஏற்கிறேன். எங்கிருந்தாலும், இதேபோல் நேர்மையாக பணியாற்றுவேன்,'' என்றார்.

மக்கள் கலெக்டரின் அதிரடிகள்
*மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்த போது, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் அடிக்கடி சோதனை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.
*மாவட்ட அளவில் பல பஸ் ஸ்டாண்டுகளை ஆய்வு செய்து, அடிப்படை வசதியில்லாத திருமங்கலம், செக்கானூரணி, பேரையூர், உசிலம்பட்டி என, பல பஸ் ஸ்டாண்டுகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தார்.
*பிற்படுத்தப்பட்டோர், ஆதிராவிடர், கள்ளர் பள்ளிகள், விடுதிகளை அடிக்கடி சோதனை நடத்தி, அலுவலர்களை சஸ்பெண்ட் செய்து, அதிகாரிகளை நடுங்கச் செய்தார்; லஞ்சம் வாங்குவோரை கண்டித்தார்.

அன்சுல் மிஸ்ரா யார்?உ.பி., அயோத்தியைச் சேர்ந்த அன்சுல் மிஸ்ரா, எம்.ஏ., (இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ்), எம்.பில்., (அமெரிக்கன் ஸ்டடீஸ்) படித்தவர். இவர், 2004ல் ஐ.ஏ.எஸ்., ஆக பணியில் சேர்ந்தார். கோபிசெட்டிபாளையம் சப்-கலெக்டர், மதுரையில் கூடுதல் கலெக்டராக பணிபுரிந்தார். செம்மொழி மாநாடு நடந்த போது, கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்தார். ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்டு, அது தொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டார்.இவர், திருவண்ணாமலை மவுன்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வில் முறைகேடு நடந்ததை, கையும் களவுமாக கண்டுபிடித்தவர்.

- நமது நிருபர் குழு -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக