வியாழன், 24 மே, 2012

அழகிரி கை ஓங்குகிறது; 16 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை ரத்து?

தி.மு.க.,வில் மத்திய அமைச்சர் அழகிரியின் கை ஓங்கும் வகையில், அவரின் ஆதரவாளர்கள் 16 பேர் மீது எடுக்க இருந்த ஒழுங்கு நடவடிக்கை முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 15ம் தேதி, மதுரையில் நடந்த இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை, மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர், வரவேற்காததால், அழகிரி ஆதரவாளர்கள் 17 பேருக்கு, தி.மு.க., மேலிடம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.அதற்கு, 17 பேரும் பதில் அனுப்பி இருந்தனர். சபைத் தலைவர் இசக்கிமுத்து அனுப்பிய பதில், கட்சித் தலைமைக்கு அதிருப்தியை அளித்தது. அதனால் அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மற்ற 16 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
விசாரணை :அழகிரி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என, ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரை திருப்திப்படுத்தும் வகையில், 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதே சமயம் அவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினால், அழகிரி அதிருப்தி அடைவார் என்பதால், சபைத் தலைவர் இசக்கிமுத்து மட்டும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மற்ற 16 பேரின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, விசாரணை என்ற பெயரில் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.கடந்த சில நாட்களுக்கு முன், ஸ்டாலின் வெளிநாடு சென்றிருந்தார். இந்த தருணத்தில், ஒழுங்கு நடவடிக்கை முடிவை ரத்து செய்ய வேண்டும் என, அழகிரியிடம், அவரின் ஆதரவாளர்கள் 16 பேரும் கோரிக்கை விடுத்தனர்.

அழகிரி வலியுறுத்தல்:இதையடுத்து, நேற்று முன்தினம் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியை, அழகிரி சந்தித்துப் பேசியதாகவும், அப்போது தன் ஆதரவாளர்களின் ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என, அவர் வலியுறுத்தியதாகவும், கூறப்படுகிறது.அழகிரியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், 16 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலின் கிளப்பிய விவகாரம், அவர் இல்லாத நேரத்தில் சுபமாக முடிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக