திங்கள், 21 மே, 2012

சேமிப்பு கிடங்குகளில் உணவு தானியங்கள் அழுகி வீணாவதாகவும் புகார்

புதுடில்லி :சேமிப்பு கிடங்குகளில், தேவைக்கு அதிகமான அளவில் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், அவற்றில், 15 மில்லியன் டன் தானியங்களை, நியாய விலைக் கடைகள், திறந்த வெளி அங்காடிகள் ஆகியவற்றுக்கு வினியோகிப்பது குறித்து, மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு செய்யவுள்ளது.
இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமாக, நாடு முழுவதும் உள்ள சேமிப்பு கிடங்குகளில், உணவு தானியங்கள் தேவைக்கு அதிகமாக உள்ளதாகவும், அவை, அழுகி வீணாவதாகவும் புகார் எழுந்தது.இந்நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்த ரங்கராஜன் கமிட்டி, உபரியாக உள்ள உணவு தானியங்களில்,
15 மில்லியன் டன் தானியங்களை, நியாய விலைக் கடைகள் மூலம், பொதுமக்களுக்கு வினியோகிக்கும்படியும், திறந்தவெளி அங்காடிகளில் விற்பனை செய்யும்படியும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்படியும், கடந்த வாரம் பிரதமரிடம் அறிக்கை அளித்தது.
இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு எடுப்பதற்காக, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சரவை குழு, இந்த வாரத்தில் முடிவு எடுக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய விளைச்சல் மூலம், கோதுமை, நெல் போன்ற உணவு தானியங்கள், அதிக அளவில் சேமிப்பு கிடங்குகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதை அடுத்து, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக