புதன், 2 மே, 2012

மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் ஸ்டாலின் கூட்டம் தள்ளிவைப்பு

நெல்லை மாவட்ட தி.மு.க.,விலும், "சகோதரர்கள்' மத்தியில் வெடித்துள்ள மோதலால், வரும் 8ம் தேதி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்க இருந்த, "சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு' என்ற கண்டன பொதுக்கூட்டம், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தடபுடல் வரவேற்பு: மதுரையில் நடந்த மோதல் விவகாரமே இன்னும் சுமுகமான முடிவுக்கு வராத நிலையில், அடுத்ததாக நெல்லை மாவட்ட தி.மு.க.,விலும், கோஷ்டி மோதல் உருவாகியுள்ளது. அம்மாவட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் ஆகிய நான்கு பேர், முக்கிய பிரமுகர்களாக உள்ளனர்.இதில், கருப்பசாமி பாண்டியன் மட்டும் ஸ்டாலின் ஆதரவாளர். மற்ற மூவரும், தற்போது அழகிரியின் ஆதரவார்களாக உள்ளனர். வரும் 8ம் தேதி நெல்லையில், "சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில், கண்டன பொதுக்கூட்டம் நடக்க இருந்தது. அக்கூட்டத்தில், ஸ்டாலின் சிறப்புரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஸ்டாலினுக்கு தடபுடலான வரவேற்பு அளிக்கவும், அழகிரியின் படம், பெயரை புறக்கணித்து விட்டு, பெரிய அளவில் பேனர்கள், போஸ்டர்கள் வைத்து அமர்க்களப்படுத்தவும், ஸ்டாலின் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.


கூட்டம் தள்ளி வைப்பு: தனது பெயர் இருட்டடிப்பு செய்யப்படுவதை, ஆதரவாளர்கள் மூலம் அறிந்து கொண்ட அழகிரி, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், ஸ்டாலின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும், உடனே அந்தக் கூட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என புகார் தெரிவித்ததாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு காரணத்தைக் காட்டி, அக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது:தி.மு.க.,வை பொறுத்தவரையில் மாவட்டச் செயலர் அனுமதி பெறாமல், எந்தக் கூட்டமும் நடத்த முடியாது. அதே போல, தென்மண்டல அமைப்புச் செயலர் அனுமதி இல்லாமல், தென் மாவட்டங்களில் கூட்டம் நடத்த முடியாது என இருந்த நிலையும், தற்போது மாறி விட்டது. அவர் இல்லாமல் எப்படி கூட்டம் நடத்தலாம் என்ற கேள்விகளை, அழகிரி ஆதரவாளர்கள் எழுப்புகின்றனர்.

செல்வாக்கை நிரூபிக்க...:நெல்லையில் சமீபத்தில் தான், தி.மு.க., இளைஞர் அணி நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? நெல்லையில் தனக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது என்பதை நிரூபிக்கவே, அங்கு பொதுக்கூட்டம் நடத்த ஸ்டாலின் திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளார். அவரது திட்டம் முறியடிக்கும் வகையில், அக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக