சனி, 28 ஏப்ரல், 2012

Stink ஆயுத பேர ஊழல் வழக்கில் BJP பங்காரு லட்சுமண் குற்றவாளி

புதுடில்லி: தெகல்ஹா இணையதளம் அம்பலப்படுத்திய, போலி ராணுவ ஆயுத பேர ஊழல் வழக்கில், பா.ஜ., முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமண் குற்றவாளி என, டில்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த 2001ல் பா.ஜ., தலைவராக இருந்தவர் பங்காரு லட்சுமண், 72. தெகல்ஹா என்ற இணையதளத்தைச் சேர்ந்த சிலர், தங்களை பிரிட்டனின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான, "வெஸ்ட் என்ட் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனக் கூறி, அப்போது பங்காரு லட்சுமணை அணுகினர். டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், பங்காருவை இவர்கள் சந்தித்தனர். அப்போது, "எங்கள் நிறுவனத்தால் அதிநவீன பைனாகுலர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கு வாங்கும்படி, ராணுவ அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க வேண்டும்' என, பொய்யாகக் கூறினார். இதை நம்பிய பங்காரு லட்சுமண், இதற்காக அவர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொண்டார்.


ரகசிய பதிவு: லஞ்ச பேரம் பேசப்பட்டதையும், பங்காரு லட்சுமண் லஞ்சம் வாங்கியதையும், தெகல்ஹா இணையதளத்தைச் சேர்ந்தவர்கள் ரகசியமாக படம் பிடித்தனர்; இந்த காட்சிகளை, தங்கள் இணையதளத்திலும் வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பங்காரு லட்சுமண், பா.ஜ., தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பான வழக்கு, டில்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. கடந்த மாதம் 3ம் தேதியுடன் வழக்கு விசாõரணை முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், டில்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி கன்வால் ஜீத் அரோரா, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். இதையொட்டி, பங்காரு லட்சுமண், தன் மகளுடன் நேற்று காலை கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

குற்றவாளி: நீதிபதி அளித்த தீர்ப்பில், "இந்த வழக்கில், பங்காரு லட்சுமண் மீதான குற்றத்தை, சி.பி.ஐ., நிரூபித்துள்ளது. எனவே, இந்த வழக்கில் பங்காரு லட்சுமண் குற்றவாளி என, இந்த கோர்ட் அறிவிக்கிறது. இவருக்கான தண்டனை, நாளை (இன்று) அறிவிக்கப்படும்' என்றார். அப்போது எழுந்த பங்காரு லட்சுமண் வழக்கறிஞர், ஜாமின் மனு தாக்கல் செய்வது குறித்து கருத்து தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, "தண்டனை அறிவிக்கப்பட்ட பின், ஜாமின் மனு குறித்து பரிசீலிக்கப்படும்' என்றார். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, பங்காரு லட்சுமண் அதிர்ச்சியில் உறைந்து போய் காணப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு, திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீர்ப்பு அறிவிக்கப்படும் போது, இன்று மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

* பங்காரு லட்சுமண், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

* வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசில், ரயில்வே இணை அமைச்சராக பதவி வகித்தவர்.

* பா.ஜ., தேசிய தலைவராக இருந்தபோது தான், லஞ்ச வழக்கில் சிக்கினார். பா.ஜ., கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

* சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், "கடந்த 2000ம் ஆண்டு டிசம்பரில் இருந்து, 2001 ஜனவரி 7ம் தேதி வரை தெகல்ஹா குழுவினர், பங்காருவை ஏழு முறை சந்தித்து, லஞ்சப் பேரம் பேசினர்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

* பங்காரு லட்சுமணின் தனிச் செயலர் சத்தியமூர்த்தி, இந்த வழக்கில் அப்ரூவராக மாறியதையடுத்து, கோர்ட் அவருக்கு பொது மன்னிப்பு அளித்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக