வியாழன், 19 ஏப்ரல், 2012

KKSSRR ஜாமீன் மனு தள்ளுபடி: 2 டிஎஸ்பிக்களும் சிக்குகின்றனர்

ஸ்ரீவில்லிபுத்தூர்: தபால் துறை ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்களை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சேதுராஜபுரத்தைச் சேர்ந்த லெட்சுமணன் (50) நெல்லை மாவட்டம், திருவேங்கடத்தில் தபால் துறையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மாரியம்மாளுக்கும் (45), பந்தல்குடியைச் சேர்ந்த அருப்புக்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் சாகுல் அமீதுவுக்கும் (49) இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.இதனைக் கண்டித்த லெட்சுமணனை சாகுல் அமீதுவும், மாரியம்மாளும் கடந்த 30.10.2007 அன்று காரில் ஏற்றிச் சென்று கொலை செய்து முட்புதரில் பிணத்தை வீசியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தான் காப்பாற்றியதாக சாகுல் அமீது வாக்குமூலம் கொடுத்ததாகக் கூறி கடந்த 10ம் தேதி ராமச்சந்திரனும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று போலீசாருக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர். நெருக்கடி தந்ததாக புகார் பதிவாகியுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று கூறி ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவாகியுள்ளது.

இந் நிலையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சாகுல் அமீது, மாரியம்மாள், ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் செசன்சு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மாவட்ட நீதிபதி (பொறுப்பு) பரமராஜ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சாகுல் அமீது, மாரியம்மாள் ஆகியோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

இதனால் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது மட்டும் விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் ராமச்சந்திரன் உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இரு போலீஸ் அதிகாரிகளும் சிக்குகின்றனர்?:

இந் நிலையில் ஓய்வு பெற்ற டிஎஸ்பிக்களான குமாரவேல், வி.எம்.சாகுல் ஹமீது ஆகியோர் மீதும் இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவாகவுள்ளது. இதையடுத்து இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

தங்களது மனுவில், இந்த வழக்கை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தான் முறையாக விசாரிக்க விடாமல் தடுத்ததாக இருவரும் கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக