செவ்வாய், 24 ஏப்ரல், 2012

INDIA தண்ணீருக்காக அலைந்து தாகத்தில் இறந்த பெண்!

தாணே, ஏப்.23: காலி குடத்துடன் மணிக்கணக்காக அலைந்தும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் பசியாலும் தாகத்தாலும் வாடிய பார்வதி ராமு ஜாதவ் (37) என்ற பழங்குடிப் பெண், வீடு திரும்பும் வழியில் களைப்பாலும் நீர்ச்சத்து குறைந்ததாலும் உயிரிழந்தார்.  மகாராஷ்டிர மாநிலத்தின் மொக்காடா வட்டத்தில் டோலாரா என்ற கிராமத்தில் இத்துயரச் சம்பவம் நடந்தது. மாவட்டத் தலைநகர் தாணேவுக்கு திங்கள்கிழமை காலைதான் இத் தகவல் கிடைத்தது.  பார்வதியும் இதர பழங்குடிப் பெண்களும் வசிக்கும் இந்தக் கிராமப் பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. கிராமப் பொதுக்கிணற்றில் தண்ணீர் பிடிக்க நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.  மாவட்ட நிர்வாகம் தண்ணீர் லாரிகளை அனுப்புகிறது. அவை 4 நாள்களுக்கு ஒரு முறைதான் ஒவ்வொரு கிராமத்துக்கும் வருகின்றன. இப்போது கடுமையான வெயில் காலமாக இருக்கிறது. குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமல் ஆறு, குளங்கள், ஓடைகள் வற்றிவிட்டதால் மக்கள் அரசு தரும் தண்ணீரையே நம்பியிருக்கின்றனர்.  லாரியில் தண்ணீர் பிடிப்பதற்காக காலி குடத்துடன் நீண்ட நேரம் காத்திருந்தார் பார்வதி. அவருடைய முறை வரும்போது டேங்கர் லாரியில் தண்ணீர் தீர்ந்துவிட்டது. மிகுந்த ஏமாற்றத்துடன் அவர் கிராமத்திலிருந்த கிணற்றில் தண்ணீர் பிடிக்கச் சென்றார். அங்கு மிகநீண்ட வரிசையில் ஏராளமானோர் காத்திருந்தனர். அங்கும் மணிக்கணக்காக கால்கடுக்க நின்றார். அப்போது தண்ணீர் பிடிக்க வந்தவர்களிடையே தள்ளுமுள்ளும் சண்டையும் ஏற்பட்டது. அதில் அவர் கீழே தள்ளப்பட்டார். இனியும் இங்கு நின்றால் தண்ணீர் கிடைக்காது என்று மன வேதனையுடன் அவர் வீட்டுக்குப் புறப்பட்டார். வழியில் தாகம் மேலிட, நாக்கு வறண்டு நெஞ்சு உலர்ந்து சுருண்டு விழுந்தார். மற்றவர்கள் ஓடிவந்து தூக்கியபோது அவர் இறந்துவிட்டிருந்தார்.  இதை நிருபர்களிடம் தெரிவித்த வசாய் சட்டப் பேரவை உறுப்பினர் விவேக் பண்டிட், இனியாவது கிராமங்களுக்கு அதிக அளவு தண்ணீர்விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக