செவ்வாய், 24 ஏப்ரல், 2012

விருமாண்டி : கமல் கையில் சிக்கிய பூமாலை


www.tamilpaper.net
மரண தண்டனைக்கு எதிராக உரத்த குரலில் பேசும் படம்… தமிழகத்தின் தென் மாவட்ட வாழ்வைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் படம். வழக்கம்போல் கமல்ஹாசன் தன் நடிப்பின் உச்சத்தை எட்டிய படம் என்று பலவிதங்களில் புகழப்படும் படம் விருமாண்டி.
பொதுவாகவே, தமிழ் படங்களில் கதாபாத்திரங்களின் சாதி அடையாளம் மிகவும் மேலோட்டமாகவேதான் சித்திரிக்கப்படும். ஏதாவது ஒரு சாதியை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாக இருந்தாலும் அதன் சாதகமான அம்சங்கள் மட்டுமே காட்டப்படும். மக்களை எளிதில் உணர்ச்சிவசப்படவைக்கும் ஓர் அடையாளமாக இன்றும் சாதியே இருந்துவருவதனால் அந்த உணர்வுகள் சார்ந்து உண்மை நிலையைச் சித்திரிக்க யாருக்கும் தைரியம் இருப்பதில்லை.
திரையுலகப் படைப்பாளிகள் தாங்களாகவே மேற்கொள்ளும் இந்தச் சுய தணிக்கையானது, என்னதான் வணிக மற்றும் சமூகக் காரணங்கள் சொல்லி நியாயப்படுத்தப்பட்டாலும், கண்டிக்கத்தக்க ஒன்றுதான்.
உண்மையைச் சொல்வதனால் நெருக்கடிகள் வரும் என்றால் அதை உரத்த குரலில் சொல்பவனே கலைஞன். நாங்கள் வெறும் கோமாளிகள்தான்… கலைஞர்கள் அல்ல என்று தமிழ் திரையுலகப் படைப்பாளிகள் சொல்லிக்கொண்டாலும் அவர்கள் கையில் இருப்பது கலை ஊடகமே. அதுவும்போக, சார்லி சாப்ளினும் கோமாளி நடிகர்தான். ஆனால், அதிகாரமையத்தை அவரும் கேள்விக்குட்படுத்தவே செய்திருக்கிறார். நாஜி கொடூரம் பற்றி வெளியான படங்களிலேயே மிகவும் முக்கியமான படமான லைஃப் ஈஸ் பியுட்டிஃபுல் சிரிக்க வைத்தபடியே சோகத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்திய ஒன்றுதான். நமது பாரம்பரிய நாடகங்களில் கூட கட்டியங்காரன், விதூஷகன் என்ற வேடங்களில் வரும் நடிகர்கள் அதிகார மதிப்பீடுகளை எவ்வளவோ எள்ளி நகையாடவே செய்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், நகைச்சுவை என்பது மிகவும் பாதுகாப்பான, அதே நேரம் வலிமையான ஓர் ஆயுதமே. விஷயம் என்னவென்றால், அதிகாரமையத்தைக் கேள்விக்குட்படுத்த நீங்கள் தயாரா இல்லையா என்பதுதான் அடிப்படைக் கேள்வி. அந்த அற உணர்ச்சி உங்களுக்கு இல்லையென்றால், உங்கள் கலைப் படைப்புகள் உங்கள் காலத்துக்கு முன்பாகவே செத்து மடிந்துவிடும்.
அந்தவகையில் கமலின் அடுத்த பலவீனமான படைப்பு விருமாண்டி. ஹே ராமை ஒப்பிடும்போது பலவகைகளில் நேர்த்தியான படம்தான் இது. என்றாலும் தன்னளவுக்குப் போதிய ஓட்டை உடைசல்களுடனே இதுவும் மிளிர்கிறது.
தென் மாவட்டங்கள் சாதி மோதல்களால் உருவான ஒரு போர்க்களம்.  நாயக்கர்கள் அங்கு செல்வந்தர்களாக இருப்பது உண்மைதான் என்றாலும் அவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதிலும் தேவர்களுடன் மோதுவதை அவர்கள் நினைத்தே பார்க்க முடியாத நிலையே இன்று நிலவுகிறது. தேவர்-தலித் மோதலைப் படமாக்கினால் பெரும் பிரச்னைகள் வரும் என்பதால், உண்மை நிலையை அப்படியே விட்டுவிட்டு குறைவாக நடக்கும் நாயக்க-தேவர் மோதலை படத்தின் கருவாக ஆக்கியிருக்கிறார். தேவர் மகன் படத்தில் அதையே இரண்டு தேவர்களுக்கு இடையிலான சண்டையாக்க் குறுக்கியிருப்பார். புலிகளுக்குள்ளும் சண்டை உண்டென்றாலும் மானின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள்தானே புலியின் அசல் உலகம். பேசாப் பொருளைப் பேசுதல் என்பது உலகம் பொய்யைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும்போது உண்மையைத் துணிந்து சொல்வதில் இருக்கிறது. அதாவது, எதைச் சொல்ல வேண்டுமே அதைச் சொல்வதில் இருக்கிறது. எதைச் சொல்ல முடியுமோ அதைச் சொல்வதில் அல்ல. எனவே, தென் மாவட்டத்தில் மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும்தான் எப்போதும் சண்டை ஏற்படும் என்று கமல் சொல்லும்போது அவர் மணலுக்குள் தலையை நுழைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழியாகவே ஆகிறார்.
மரண தண்டனைக்கு எதிரான படம் என்கிற பம்மாத்து வேறு படத்தில் படு செயற்கையாக, எந்தவிதப் புரிதலும் இல்லாமல் திணிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் மரண தண்டனை என்பது ஓர் அரசால் தரப்படும் தீர்ப்பு. நீதித்துறை, காவல்துறை, அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள், ஊடகங்கள், பொது மக்கள் என இன்றைய அரசின்/சமூகத்தின் அனைத்து முக்கிய துறைகளும் ஊழலில் திளைத்திருக்கின்றன. அப்படியான ஓர் அமைப்புக்கு ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் இருக்கவேகூடாது. இது முதலாவது பார்வை.
இரண்டாவதாக, ஒருவேளை ஓர் அரசு எல்லா தளங்களிலும் நியாயமாகவே இருப்பதாக வைத்துக்கொண்டாலும், மிகப் பெரிய தவறுக்குக்கூட உயிர் பறிப்பு என்பதை தண்டனையாக வைக்கவேகூடாது. குற்றவாளியின் வயதுக்கு ஏற்ப ஒற்றை அல்லது இரட்டை ஆயுள் தண்டனை என்று வேண்டுமானால் வழங்கிக் கொள்ளலாம். அதுவே ஒருவகையில் ஒருவரை இல்லாமல் ஆக்குவதுதான். ஒரு நவீன அரசுக்கு அந்த அளவுக்காவது தார்மிக அக்கறையும் பொறுப்பும் இருந்தாக வேண்டும். இந்தக் கோணத்தில் பார்த்தாலும் மரண தண்டனை கூடவே கூடாது. அதுவும்போக மரண தண்டனை கூடாது என்று சொல்வதற்கு இணையாக அது தேவை என்ற குரலும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது. இந்தத் தரப்புகளின் மோதல் என்ற கோணத்தில்தான் மரண தண்டனை பற்றிய விவாதங்கள் எழவேண்டும்.
இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும் மரண தண்டனை என்ற விஷயத்தின் கொடூரத்தையும் அபத்தத்தையும் புரியவைக்க வேண்டுமென்றால் அந்தப் படம் அரசின் செயல்பாடுகளை மையமாகக் கொண்டதாக இருந்தாகவேண்டும்.
ஓர் உதாரணம் சொல்வதானால், இன்று கூடங்குளத்தில் உதயகுமார் தலைமையில் ஒரு போராட்டம் நடைபெற்றுவருகிறது. அவரை அரசு நக்சலைட் என்றும் தேச விரோதி என்றும் சித்திரிக்கிறது. இதுபோன்ற ஒரு போராளியை அரசாங்கம் தூக்கு தண்டனை வரை கொண்டு செல்வதாகக் காட்டினால் அப்போது அந்த அரசின் கொடூரமும் அந்த தண்டனையை ஒழித்தே ஆக வேண்டியதன் அவசியமும் ஒருவருக்குப் புரியவரும். கறுமையின் அடர்த்தியை அதி வெண்மை ஒன்றைப் பக்கத்தில் வைப்பதன் மூலம் நன்கு புலப்படவைக்கும் யுக்தி இது.
இந்தப் படத்தில் கூட பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவனை யதேச்சையாக அடிக்க அவன் இறந்துவிடுவதால் மரண தண்டனை நிச்சயிக்கப்பட்டதாகக் காட்டப்பட்டிருக்கிறது. அவருடைய வாழ்க்கை என்பது மரண தண்டனையைக் கேள்விக்குட்படுத்தும் அபாரமான கதையாக ஆகியிருக்க வாய்ப்பு உண்டு. பரிதாபத்தின் மூலம் கதாநாயக பிம்பத்தை விஸ்வரூபம் பெற வைப்பதும் வணிக வெற்றிகளைக் குவிக்கவே செய்யும்.
ஆட்டோ சங்கர் போன்ற ஒருவரின் கதையை மையமாக வைத்து, அவனுக்கு உடந்தையாக இருந்த எத்தனையோ காவல் துறையினரும் அரசியல்வாதிகளும் சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் வெளியில் உலவிக் கொண்டிருக்க பிடிபட்ட அவன் மட்டுமே தூக்கில் தொங்கவிடப்பட்டதன் அபத்தத்தை அநியாயத்தை படமாகக் காட்டியிருக்க முடியும். இவையெல்லாம் ஒரு எளிய ஃபார்முலா கதையாக ஆகிவிடும் என்று நினைத்தால் குறைந்தபட்சம் குற்றவாளியின் பின்னணிக்கு இணையாக அரசின் அநியாயமான செயல்பாடுகளையும் விவரித்திருக்க வேண்டும்.
ஆனால், இந்தப் படத்தில் காவல்துறையைச் சேர்ந்த பேய்க்காமன் என்ற ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே அரசின் அங்கமாக இடம்பெறுகிறது. அந்தக் கதாபாத்திரமும்கூடத் தெளிவான வில்லன் பிம்பத்துடன் படைக்கப்பட்டிருப்பதால் அரசமைப்பின் மீதான விமர்சனமாக அது கூர்மை பெறவில்லை. அதுபோல் பொய் சாட்சி சொல்லும் நபர்கள் அனைவருமே மக்களின் துல்லியமான பிரதிநிதிகளாக முழுவடிவம் பெறவில்லை. சமீபத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மன நிலை குன்றிய ஒருவரை வங்கிக் கொள்ளையன் என்று நினைத்து மக்கள் கூட்டம் அடித்து உதைத்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு தூக்கு தண்டனைகளின் போது மக்கள் கூட்டம் உற்சாகத்துடன் அதை வரவேற்று ஆர்ப்பரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவையே மக்கள் திரளின் தெளிவான சித்திரிப்பாக ஆக முடியும். அப்படி இல்லையென்றால் தனிப்பட்ட நபரின் குணாம்சமாக அது சுருங்கிவிட வாய்ப்பு உண்டு.
அந்தவகையில் மரண தண்டனை எதிர்ப்பு என்பது இந்தத் திரைக்கதையில் பலவீனமான ஒட்டு போலவே இருக்கிறது. எஸ்.வி.சேகர் தன்னுடைய துணுக்கு டிராமாக்களில் சமூகத்துக்கு செய்தி எதுவும் சொல்லப்படுவதில்லை என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளும்வகையில் காபியில சர்க்கரை குறைவா போட்டுக்கணும், குழந்தைகள் ஸ்கூல ஒழுங்கா படிக்கணும், அப்பா அம்மாவை மதிக்கணும் என்பதுபோன்ற நற்செய்திகளை ஒரு கதாபாத்திரத்தை விட்டு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேச வைத்திருப்பார். கமல்ஹாசனும் தனது படத்தின் கனத்தைக் கூட்ட மரண தண்டனையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எஸ்.வி.சேகரை விட கொஞ்சம் மேலான கலைநயத்துடன் அது இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அவ்வளவுதான்.
அதற்காக ரொம்பவே மெனக்கெட்டு டாக்குமெண்டரி, அதை எடுக்க வரும் பெண்மணிக்கு கீழ்வெண்மணி பின்னணி என்றெல்லாம் ஜல்லி அடித்திருக்கிறார். இந்தக் கீழ்வெண்மணி பின்னணி என்பது அதைவிட அபத்தம். காத்தமுத்துவின் மகளான அந்த டாக்குமெண்டரி இயக்குநர் ஜேம்ஸ் என்பவரைக் கல்யாணம் செய்துகொள்கிறாராம். ஜேம்ஸ் அவளைத் துன்புறுத்தவே அப்பாவே மருமகனைக் கொன்றுவிடுகிறாராம். அவருக்கு தூக்கு தண்டனை தரப்பட்டுவிடுகிறதாம். மகள் அந்த வேதனையால் தூக்கு தண்டனைக்கு எதிராகப் போராட ஆரம்பிக்கிறாராம்.
மருமகனைக் கொன்றதற்காக ஒருவருக்கு தூக்கு தண்டனை என்பது இன்றைய நடைமுறையில் இல்லாத ஒன்று. அதுதான் படத்தின் முக்கியமான துணைக் கதாபாத்திரத்தை மரண தண்டனைக்கு எதிராகப் போராடத் தூண்டிய விஷயமாம். அந்த அடிப்படையே மடத்தனமாக இருக்கிறதே. அது சரி… அந்தப் பெண்ணுக்கு எதற்காக கீழ்வெண்மணி என்ற பின்னணி. அது வேறு விஷயங்களை நினைவுபடுத்தும் ஒன்றல்லவா? தலித் ஒருவர் தன் மகளை நன்கு படிக்க வைத்து கடன் பட்டு கிறிஸ்தவருக்குத் திருமணம் செய்து கொடுத்த பிறகும் (அதிக வரதட்சணை?) அந்தப் பெண்ணுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. அவர் தானாக தன் வழியைத் தேடிக் கொள்கிறார் என்பதைச் சொல்ல வருகிறாரா? உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.
மாபெரும் கலைப்படைப்பில் செய்யப்படும் ஒவ்வொரு நுட்பமான விஷயமும் வலுவான காரணத்தைக் கொண்டதாக இருக்கும். போலிகளில் இது நேரெதிராக புலியைப் பார்த்து போட்டுக்கொள்ளும் சூடுபோல் கேலிக்கூத்தாகவே முடியும்.
அதுபோல் படத்தின் க்ளைமாக்ஸ் என்பதும் சற்றும் பொருந்தாக ஒன்றாகவே இடம்பெற்றிருக்கிறது. அதிலும் ஜெயிலில் கலவரம் செய்யும் கைதிகள் ஏதோ நேர்த்திக்கடன் போல ஜெயிலைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்துகொண்டே இருக்கிறார்கள். விஷயம் என்னவென்றால், அங்கு நடக்கும் கஞ்சா கடத்தல் விவகாரம் தலைமை காவலருக்குத் தெரிந்துவிடுகிறது. ஒரு கலவரம் போல் செட்டப் செய்து அவரைப் போட்டுத் தள்ள துணைக் காவலர் பேய்க்காமனுடன் கைதிகள் சேர்ந்து திட்டமிடுகிறார்கள். அதன்படியே செய்து கடத்தல் பொருட்களைக் கைப்பற்றுகிறார்கள். அதை வெளியேயிருக்கும் அவர்களுடைய ஆள் வசம் தூக்கி எறிந்தால் பிரச்னை தீர்ந்துவிடும். அல்லது ஜெயிலை விட்டுத் தப்பிக்க முயற்சி செய்யலாம். அதைவிட்டுவிட்டு ஏதோ பழங்குடி, மத்திய கால மேற்கத்திய படங்களில் வரும் போரைப்போல் மரத்தைக் கவண் போல் ஆக்கி அதில் டாய்லெட் பீங்கானில் ஆரம்பித்து சோபா செட்கள் வரை மாட்டி பீரங்கிபோல் எறிந்து என்னவெல்லாமோ செய்கிறார்கள். கிரில் கம்பிகளைப் பெயர்த்து எடுத்து சர் சர் என்று எறிகிறார்கள். கமல் சார் உலகப் படங்கள் நிறைய பார்த்திருக்கக்கூடும். ஜெயில் கைதிகளும் கூடவா? அதுவும்போக அவர்களுடைய நோக்கம் என்ன க்ளைமாக்ஸை விறுவிறுப்பாக ஆக்குவதா!?
மரண தண்டனை எதிர்ப்பில் ஆரம்பித்து, ஜல்லிக் கட்டுக்குப் போய், தமிழ் விவசாயம் என்று திரும்பி, நிலச் சண்டையாக மாறி, நாயக்கர்-தேவர் சண்டை என்று ஆகி, எஜமானன் பணியாள் சண்டையாகத் திரும்பி, ஜெயில் சண்டையாகி கடைசியில் மரண தண்டனை எதிர்ப்பில் வந்து முடிகிறது. நடு நடுவுல மானே தேனே என்று காதல் டிராக்கும் ஓடுகிறது. இரவு நேர யாசகரின் தூக்குப் பாத்திரத்தில் ஊசிப் போன சாம்பாரில் ஆரம்பித்து உளுத்துப் போன வடைவரை இருப்பதுபோல் ஒரு அசட்டுக் கலவை இது. கோடுகள் தேவையான வளைவு நெளிவுகளுடன் இருந்தால் அதற்குப் பெயர் ஓவியம். கண்டதையெல்லாம் தீட்டி வைத்தால் அதற்குப் பெயர் கிறுக்கல்.
படமானது கதாநாயகன், வில்லன் ஆகிய இருவரின் பார்வையில் சொல்லப்படும் கதையாக விரிகிறது. இந்த ரொஷோமான் யுக்தி படத்தில் மிகவும் மோசமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரொஷோமானில் உண்மை என்ன என்பது கடைசிவரை நமக்குப் புரியாமலேயே இருக்கும். அதுதான் உண்மையின் பன்முக சாத்தியக்கூறுகளையும் புதிர்த்தன்மையையும் வசீகரத்தையும் முழுவதுமாக எடுத்துக்காட்டும். இந்தப் படத்தில் வில்லனின் கதையானது முழுப் பொய் என்பது நாயகனின் கதையைக் கேட்டதும் தெரிந்துவிடுகிறது. எனவே, உண்மையின் பன்முகத்தன்மை இதில் இடம்பெறாமல் போய்விட்டது. ரொஷோமானைப் போல் எடுத்ததாக நான் சொல்லவில்லையே என்று கமல் சொல்லக்கூடும். ஆனால், அந்தப் பாணியைப் பலவீனமாகப் பயன்படுத்தியிருப்பதால் அந்த விமர்சனத்தையும் அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும்.
கமல் ஹாசனின் அறிமுகக் காட்சியே அபத்தத்தின் உச்சமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கும்போது கரண்ட் கம்பியின் மேல் நின்று கொண்டிருக்கிறார். ஏன் என்று கேட்டால், அவருடைய பாட்டி காளையை எல்லாம் அடக்கப் போகக்கூடாது. வெறுமனே வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று சொன்னாராம். பேரன் காளையை அடக்கக் களம் இறங்கினால் அடிபட்டுவிடுமே என்ற பயம் இருந்தால் கிழவி அதே கூட்டத்தில் நின்று அவனை இறங்கவிடாமல் தடுக்க வேண்டியதுதானே. அந்த ஊரில் அதிகபட்சம் ஆறேழு தெருக்கள் இருக்கக்கூடும். ஜல்லிக்கட்டு நடக்கும்போது ஊரே அந்த மைதானத்தில்தான் கூடியிருக்கும். கிழவி மட்டும் தன்னந்தனியாக வீட்டில் என்னதான் செய்துகொண்டிருந்தாள். நாயகன் காளையை அடக்கி முடித்ததும் கரெக்டாக வந்து அவனைத் திட்ட வேறு செய்கிறாள். பேரனின் மீது அக்கறை இருந்தால் முன்னாலேயே வந்திருக்க வேண்டியதுதானே.
அதுவும்போக அந்தக் காளையோ கமல் சார் மீது அவருடைய ஜால்ரா கூட்டத்தைவிட விசுவாசமானதாக இருக்கிறது. ஈட்டி போல் கூர் தீட்டப்பட்ட கொம்பு இருந்த பிறகும் அது கமல் சாரை செல்லமாகவே முட்டுகிறது. காளையை அடக்கிவிட்டு வெற்றிப் பெருமிதத்தில் நின்று கொண்டிருப்பவரை பின்னால் இருந்து தூக்கி எறிகிறது. கமல் சாரோ லேசான கொம்பு சிராய்ப்புடன் பேக் சம்மர் சால்ட் அடித்து எழுந்துவருகிறார். கொம்பு படாமல் குத்த அந்தக் காளை எங்குதான் படித்ததோ?
அதுவும்போக, சின்ன கோளாறுபட்டிக்காரன் காளையை அடக்கக்கூடாது என்று ஒரு நிபந்தனை சொல்லப்படுகிறது. ஏனென்றால், காளை அந்த ஊரைச் சேர்ந்தது. அந்த ஊர்க்காரர்களுக்கு முன்பே அதனுடன் பழக்கம் இருக்கும் என்பதாலோ என்னவோ அப்படி ஒரு நிபந்தனை சொல்லப்படுகிறது. அப்படியானால், அசலூரான் அடக்கலாமா என்று கூட்டம் கேட்கிறது. சரி என்று சொல்கிறார்கள். கேமரா நேராக தரையில் இருந்து மேலே எழுந்து கரண்ட் கம்பியை ஃபோகஸ் செய்கிறது. சிங்கப்பூர் மச்சான் அறிமுகப்படுத்தப்படும் கமல் காளையை அடக்க அங்கிருந்து குதிக்கிறார்.
ஆனால், உண்மை என்னவென்றால், அவர் அந்த சின்னக் கோளாறுபட்டியைச் சேர்ந்தவர்தான். அப்பாவுடன் சிங்கப்பூரில் சில காலம் வசித்தவர் அவ்வளவுதான். ஒருவர் எவ்வளவு காலம்தான் வெளியூரில் வசித்தாலும் சொந்த ஊர்க்காரராகத்தான் அடையாளப்படுத்தப்படுவார். இதுதான் கிராமப்புற யதார்த்தம். இங்கோ சில காலம் சிங்கப்பூரில் வசித்தவர் அசலூரான் ஆகிவிடுகிறார். அதோடு, அப்பா செத்த பிறகு பாட்டிதான் கிராமத்தில் வைத்துத் தன்னை வளர்த்ததாகச் சொல்கிறார். குபீர் ஜாலி பிரதர்ஸ் என்ற சங்கத்தை அமைத்து ஊரில் சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருப்பதாகவும் சொல்லவும்படுகிறது. காளையை அடக்க மட்டும் அசலூரானாக அரிதாரம் பூசிக் கொள்வதேன்? கரண்ட் கம்பி மேல இருந்து குதிக்கற மாதிரி சீன் யோசிச்சாச்சு. அப்ப எடுத்துத்தான ஆகணும்.
அப்பறம் காட்சிகள் எல்லாம் எந்தவொரு தர்க்கத்துக்கும் சிக்காமலே போய்க்கொண்டிருக்கின்றன.
சிறுநீர் கழிக்கப்போன விருமாண்டியை பின்னால் இருந்து ஒருவர் அருவாளால் வெட்டுகிறார். வெட்டுப்பட்டவர் மக்கள் கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிவராமல், ஆளரவமற்ற தெருக்களினூடாக ஓடிப் போய் நேராகத் தன் காதலி அன்னலட்சுமியின் வீட்டுத் தொழுவத்தில் போய்விழுகிறார். அந்த அருவாளோ ஃபெவிகால் போட்டு ஒட்டியதுபோல் விருமாண்டியின் உடம்புடன் ஒட்டியே இருக்கிறது. ரஜினிகாந்த் என்றால்கூட இதை நம்பலாம். ஏனென்றால், அவர் பெயரிலேயே காந்தம் இருக்கிறது. கமல் சாரின் பெயரில் மென்மையான கமலப் பூ மட்டும்தானே இருக்கிறது. அந்த அருவாளில் கொ என்ற கொத்தாளத் தேவனின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை அன்னலட்சுமி பார்க்கிறாள் என்றொரு காட்சி பின்னால் வருகிறது. அதனால் அருவாள் கீழே விழவே இல்லை என்று காட்டப்பட்டிருக்கிறது. அதோடு விருமாண்டிக்கு அடுத்த இரண்டு மாதம் சிகிச்சை தர வேண்டிய அளவுக்கு அந்தக் காயம் பலமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், விருமாண்டியைத் தூக்கிச் செல்லும்போது, மல்லாந்து படுத்தபடியே இருக்கிறார். முதுகில் காயம்பட்டால் குப்புறப் படுக்க வைக்கவேண்டும் என்ற எளிய விஷயம்கூடப் பின்பற்றப்பட்டிருக்கவில்லை.
தேன் கூடு கலைக்கப்பட்டு மாடு மிரண்டு ஓடுவதுபோல் ஒரு காட்சி வருகிறது. அன்னலட்சுமி தன் நவீன குதிரையான மொபெட்டை எடுத்துக்கொண்டு தலையில் சாக்கு ஒன்றைப் பின்பக்கமாகப் போத்திக்கொண்டு மாட்டைப் பிடித்துக் கொண்டுவர சர்ரென்று வெளியே கிளம்புகிறார். போகும் வழியில் ஒரு மரத்துண்டு ஒன்றில் அருவாள் சொருகி வைக்கப்பட்டிருக்கிறது. மொபெட்டில் விரைந்து செல்பவர் அந்த அருவாளை டக்கென்று எடுத்துச் செல்கிறார். இந்தக் காட்சி பார்க்க அருமையாகத்தான் இருக்கிறது. ஆனால், காளையை வீட்டுக்குக் கொண்டுவர விரும்புபவர் எதற்காக அருவாளை எடுத்துச் செல்கிறார். அந்தக் காளையோ செல்லப் பூனைக்குட்டி மாதிரி அவரைப் பார்த்தால் பம்மக்கூடியது. சாட்டையை எடுத்துச் சென்றாலாவது ஏதோ பயமுறுத்தப் போகிறார் என்று நினைக்கலாம். அதெல்லாம் தெரியாது… மொபெட்டில் வேகமாகப் போகும்போது இறங்காமலேயே சட்டென்று அருவாளை எடுத்துச் செல்லும் காட்சி பார்க்க அருமையாக இருக்கிறது. அதனால் அது படத்தில் இடம்பெற்றுவிட்டது. இதன் ஒரிஜினல் எது என்று எனக்குத் தெரியாது. ஆனால், கமல் சாருக்குத் தெரிந்திருக்கும். நைஸாகச் சொருகிவிட்டார். பின்னே நம்ம படம் எப்பத்தான் சர்வ தேசத் தரத்தை எட்டறது?
ஒரு காட்சியில் நல்லம்ம நாயக்கர் பஞ்சாயத்து கூட்டியதாகச் சொல்லப்படுகிறது. அடுத்த காட்சியில் அதே பஞ்சாயத்தை விருமாண்டி பிராது கொடுத்து கூட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதே பஞ்சாயத்தில் சம்பந்தமே இல்லாமல், விருமாண்டி தன் சொத்தில் ஒரு பங்கை ஊருக்கு எழுதுவதாக சவால் விடுகிறான். கொண்ட ராசு நாயக்கன் என்ற ஒருவர் தானும் எழுதி வைப்பதாக பந்தயம் கட்டுகிறார். கொத்தாளத் தேவனை வம்புக்கு இழுக்கிறார். கை கலப்பில் அந்தப் பஞ்சாயத்து முடிகிறது.
அன்று இரவு நல்லம்ம நாயக்கர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறச் சொல்கிறாள் அன்னலட்சுமி. மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன் என்று பஞ்ச் டயலாக் சொல்கிறாள். உண்மையில் அதை ஏற்றுக் கொள்வதானால், ஒருவர் என்ன செய்ய வேண்டும்? நல்லம்ம நாயக்கர் மீதான புகாரை வாபஸ் பெறவேண்டும். அல்லது அவரிடம் போய் சமாதானம் பேச வேண்டும். அதைவிட்டுவிட்டு விருமாண்டி நேராக கொண்ட ராசு நாயக்கரைப் போய்ப் பார்த்து மன்னிப்பு கேட்கிறான். பிரச்னை நல்லம்ம நாயக்கருக்கும் விருமாண்டிக்கும்தான். கொண்ட ராசு நாயக்கருடன் அல்ல.
பஞ்சாயத்தில் அன்ன லட்சுமியின் சித்தியைப் பற்றி அவதுறாகப் பேசியதற்கு கொண்ட ராசு நாயக்கனை விருமாண்டி அடிக்கப்போனார் என்பது உண்மைதான். ஆனால், இரவில் அவனிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அவனை மன்னிக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறார். தவறு செய்தது கொண்ட ராசு நாயக்கன்தானே. ஆனால், 24 உயிர்களின் பலி என்ற ஒரு கதை முடிச்சு அடுத்ததாக விழ வேண்டும் என்பதற்காக விருமாண்டி தனியாக கொண்ட ராசு நாயக்கரைப் பார்க்கப் போகிறான். திரைக்கதையின் குழப்பமான இடம் இது.
அதோடு மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன் என்ற படத்தின் பஞ்ச் டயலாக் மிகவும் அசட்டுத்தனமானது. தப்பு செய்துவிட்டு மன்னிப்பு கேட்பதில் எந்தப் பெருமையும் இல்லை. அது மிகவும் சாதாரண ஒரு செயல்தான். அந்தத் தவறினால் பாதிக்கப்பட்டு வேதனையில் இருக்கும் ஒருவர் தப்புச் செய்தவரை மன்னிக்கிறார் என்றால் அதுதான் பெரிய விஷயம். விருமாண்டி பலரைக் கொன்றுவிட்டு மன்னிப்புக் கேட்பதில் எந்தச் சிறப்பும் கிடையாது. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் வேதனையை மறந்துவிட்டு அல்லது விருமாண்டியைத் தூக்கில் போடுவதால் மட்டும் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் வரவா போகிறார்கள், அவனாவது திருந்தி வாழட்டும் என்று சொல்லி மன்னித்தால் அதுதான் பெரிய விஷயம். கொல்லப்பட்டவர்கள் துணை நடிகர்கள்தான் என்பதாலும் கொலைகளைச் செய்தது கமல் சார் என்பதாலும், மன்னிப்பதைவிட மன்னிப்பு கேட்பது பெரிய விஷயமாக ஆகிவிடுகிறது.
அடுத்ததாக, விருமாண்டிக்கும் நல்லம்ம நாயக்கருக்கும் இடையிலான சிறிய பகையைக் காரணமாக வைத்து கொத்தாளத் தேவன் கொண்ட ராசு நாயக்கரையும் அவருடைய ஆட்கள் 24 பேரையும் தன் ஆட்களுடன் போய்க் கொன்று குவிக்கிறான். தேவர்களில் ஒருவர் மீது ஒரு சிறு கீறல் கூட விழாதபடித்தான் அந்தச் சண்டை காட்சிப்படுத்தப்படுகிறது. பின்னே தென் மாவட்டத்தில் இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் தேவர் சாதியினர்தானே. அவர்கள்தானே கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யப் போகிறவர்கள். எனவே, கலவரத்தில் நாயக்கர் பிரிவினர் மட்டுமே சாகிறார்கள். வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது.
அதில் ஒரு மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், சம்பவம் நடந்த நேரத்தில் கொத்தாளத் தேவருடன் இருந்ததாக விருமாண்டி சாட்சி சொல்கிறான். கோர்ட் அதைக் கேட்டு இருவரையும் விடுவித்துவிடுகிறது. உண்மையில் அந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளே அவர்கள் இருவர்தான். ஒருவருக்கு ஒருவர் நல்லவர் என்ற சான்றிதழ் வழங்கியதும் நீதிமன்றம் அதைக் கேட்டு அவர்களை விடுவித்துவிடுகிறதாம். ஜெயா அக்கா நல்லவர் என்று சசி அக்காவும், சசி அக்கா அப்பாவி என்று ஜெயா அக்காவும் சொல்வதுபோல் கொத்தாளத் தேவரும் விருமாண்டியும் உடன் பிறவா சகோதர பாசத்தைக் காட்டியதும் நீதிமன்றம் நம்பி விடுதலை செய்துவிடுகிறது.
இது போதாதென்று அன்னலட்சுமி தூக்கில் தொங்கி இறந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும் வழக்கறிஞர் இந்த 24 கொலைகளைச் செய்தது விருமாண்டிதான் என்று நிரூபிக்கப் போவதாகச் சொல்வார். ஆனால், அப்படி எதுவும் செய்யாமலேயே நீதிமன்றம் 24 பேரைக் கொன்றதற்காகவும் காதலியை கற்பழித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டதற்காகவும் விருமாண்டிக்கு தூக்கு தண்டனை தந்துவிடுகிறது. இத்தனைக்கும் 24 பேர் கொலை கேஸானது ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கு.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அன்ன லட்சுமி தூக்கு மாட்டித்தான் இறக்கிறாள். போஸ்மார்டம் ரிப்போர்ட்டில் அப்படித்தான் தெரிய வந்திருக்கும். கொன்றுவிட்டுத் தூக்கில் மாட்டியதாக வந்திருக்காது. ஆனால், கொலைப்பழியை விருமாண்டி மேல் சுமத்துவதற்காக அப்படி காட்டப்படுகிறது. விருமாண்டியின் விந்து அன்ன லட்சுமியின் உடலில் இருந்ததும் அன்னலட்சுமியின் நகக்கண்ணில் விருமாண்டியின் சதைத் துணுக்குகள் இருந்ததும் மட்டுமே போஸ்ட்மார்டம் ரிப்போர்டில் இருந்து தெரியவந்ததாக நீதிமன்றத்தில் சொல்கிறார்கள். கொலை செய்யப்பட்டு தூக்கில் மாட்டப்பட்டதாக அல்ல. அதுவும் போக, விருமாண்டியும் அன்ன லட்சுமியும் காதலர்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். கற்பழித்ததாகச் சொல்வதில் எந்த ஆதாரமும் இல்லை. அந்த ஊர்க்கார்களும் விருமாண்டியின் நண்பர்களும் ஏன், நல்லம்ம நாயக்கரின் ஊரார்கூட அந்தக் காதலுக்கு சாட்சி சொல்ல முடியும்.
இருவரும் ஊரை விட்டு ஓடியபோது சென்னையில் தங்க இடம் கொடுத்த உறவுக்காரப் பெண்மணி விருமாண்டிக்கும் அன்ன லட்சுமிக்கும் திருமணம் நடந்துவிட்டதைச் சொல்லியிருந்தால் வழக்கு அப்போதே வலுவிழந்திருக்கும். இத்தனைக்கும் சிங்கப்பூரில் தன் மகன் செய்த ஒரு தப்புக்காக விருமாண்டிதான் பழியை ஏற்றுக்கொண்டதாகவும் அந்த வீடே அவனுடையதுதான் என்றும் அந்தப் பெண்மணி சொல்கிறாள். விருமாண்டியைத் தன் மகன் போலவே மதிக்கிறார். ஆனால், அவரை அந்த உண்மையைச் சொல்லாமல் ஊமையாக்குகிறார் வசனகர்த்தா. அது நியாயமே இல்லை.
இடையில் இடம்பெறும் ஒரு கமல் டச் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். தேனி மாவட்டத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிப்போகும் காதல் ஜோடிகள் டி.வி.எஸ். மொபெட்டிலேயே சென்னைக்கு போய்ச் சேர்ந்துவிடுகிறார்கள். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, போகும் வழியில் ஜலக்கிரீடை செய்கிறார்கள். ஊரை விட்டு ஓடும் பரபரப்பான நேரத்திலும் வேறு யாராவது பார்த்தால் பிரச்னை ஆகிவிடுமே என்ற பயமெல்லாம் இல்லாமல் ஜாலியாகப் புனலாடுகிறார்கள். விஷயம் என்னவென்றால், அடுத்த நாளே சென்னை வந்துவிடுகிறார்கள். சென்னையில் இதுபோல் புனலாட ஆறு, ஏரி எதுவும் கிடையாது. கிராமத்தில்தான் அது சாத்தியம். எனவே அந்த சம்பவம் அங்கு நடந்தேறுகிறது.
அப்படியானால், முன்பே கிராமத்தில் புனலாடியிருக்க வேண்டியதுதானே என்று கேள்வி உங்களுக்கு வரக்கூடும். ஆனால், தமிழ் பண்பாடு என்ற ஒன்று இருக்கிறதல்லவா? தாலி கட்டிய பிறகுதானே முதலிரவு நடக்க முடியும். தாலி கட்டிய மறுநாளே சென்னைக்குப் போய்விடுகிறார்கள். புனலாட ஊரை விட்டு ஓடிப்போகும் அந்த இரவு மட்டுமேதான் அவகாசம் இருக்கிறது. எனவே, அந்தப் பரபரப்புக்கு இடையிலும் பேண்ட் சட்டை போட்ட விருமாண்டி வேட்டியைக் காய வைத்துவிட்டுப் புனலாடுகிறார்.
இறந்த அன்ன லட்சுமியின் உடலில் விருமாண்டியின் விந்து இருந்ததாக போஸ்ட்மார்டத்தில் தெரிய வந்து அதை வைத்துத்தான் கற்பழித்தாகப் பழி சுமத்தப்படுகிறது. அப்படியானால் முதலிரவு நடந்தே ஆக வேண்டிய கட்டாயம் வருகிறது அல்லவா என்று கேட்பீர்கள். அது உண்மைதான் ஆனால், சென்னைக்குப் போன பிறகு ஏறு தழுவுவதாகக் காட்டப்படுகிறதே. அதுவே போதாதா என்ன? ஊரை விட்டு ஓடும்போதும் புனலாடத்தான் வேண்டுமா? அந்தக் காட்சியை நான் மிகவும் பயத்துடனேயேதான் பார்க்க வேண்டியிருந்தது. இரவு லைட்டிங்கில் வேறு எடுத்திருக்கிறார்கள். கேமரா எந்தப் பக்கம் திரும்பினாலும் கொத்தாளத் தேவனின் அருவாள் போலவே காட்சி அளித்தது. எந்த நிமிடமும் அது பாய்ந்து வந்து காதல் சிட்டுகளை வெட்டிவிடும் என்ற பயத்துடனேயே அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கிளு கிளு காதல் காட்சியை இப்படிப் பார்க்க நேர்ந்தது எவ்வளவு பெரிய வேதனை என்பது அனுபவித்தால்தான் தெரியும். எதை மன்னித்தாலும் இதை மன்னிக்க முடியாது.
விருமாண்டிக்காக நீதிமன்றத்தில் வழக்காடும் வைத்தியநாதய்யர் படு அம்மாஞ்சியாக இருக்கிறார். விருமாண்டி அன்னலட்சுமியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அன்னலட்சுமியின் உடல் கொத்தாளத் தேவனின் வீட்டு உத்தரத்தில்தான் தொங்கிக்கொண்டிருந்திருக்கிறது. விருமாண்டி கொன்றிருந்தால் கொத்தாளத் தேவனின் வீட்டில் மாட்டிவிட்டிருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஒன்றைச் சொன்னாலே விருமாண்டி கொலைப்பழியில் இருந்து தப்பித்துவிட முடியும். ஆனால், அந்த அம்பி ஐய்யரோ, திருமணம் நடந்ததா இல்லையா என்ற கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு சாதுவாக போய் உட்கார்ந்துவிடுகிறார்.
இதைவிட இன்னொரு அசட்டுத்தனம் என்னவென்றால், அன்னலட்சுமி இறந்தது தெரிந்ததும் விருமாண்டி அதற்குக் காரணமான பலரை வெட்டிக் கொல்கிறான். காவல் துறை அவனைத் துரத்துகிறது. அடைக்கலம் தரும் நல்லம்ம நாயக்கர் விருமாண்டியை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். அது தெரிய வந்ததும் விருமாண்டியை என்னிடம் ஒப்படைத்துவிடு என்று கொத்தாளத் தேவன் நல்லம்ம நாயக்கரிடம் கேட்கிறான். நல்லம்ம நாயக்கரும் அவனை மறைத்து வைத்திருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வதாக கொத்தாளத் தேவனையும் அவனுடைய ஆட்களையும் கூட்டிச் செல்கிறார். தன்னுடைய பரம விரோதியான கொத்தாளத் தேவனிடம் அப்படி தனியாக போய் அவர் மாட்டிக் கொள்ளவேமாட்டார். ஆனால், இங்கோ கமல் சாரின் திரைக்கதை சாதுரியத்தினால் அப்படி அசட்டுச் செயலை நல்லம்ம நாயகர் செய்கிறார்.
அவர் அழைத்துச் சென்ற பாழடைந்த வீட்டில் ஒரு பீரோ இருக்கிறது. அதில் ஒரு பெரிய துப்பாக்கி இருக்கிறது. அதை எடுத்து பட்டென்று நல்லம்ம நாயக்கர் சுடுகிறார். உண்மையில் உங்கள் கையில் ஒரு துப்பாக்கி இருக்கிறது. எதிரி கையில் வெறும் அருவாள்தான் இருக்கிறது. உங்கள் துப்பாக்கியோ ஒவ்வொரு தோட்டாவாக போட்டுச் சுட வேண்டிய ஒன்று. அப்படியானால் என்ன செய்வீர்கள். பிரதான எதிரியைக் குறிவைத்து சுடப்போவதாக மிரட்டி மற்றவர்களை அவர்களுடைய ஆயுதங்களைக் கீழே போட வைப்பீர்கள். இதுதானே புத்திசாலித்தனம். ஆனால், இங்கோ நல்லம்ம நாயக்கர் பட்டென்று யாரோ ஒருவரைப் பார்த்து சுடுகிறார். அடுத்த தோட்டாவை நிரப்புவதற்குள் கொத்தாளத் தேவன் அவரை அருவாளால் வெட்டிச் சாய்த்துவிடுகிறான். பாவம் கமலின் பலவீனமான திரைக்கதையால் நல்லம்ம நாயக்கர் கையில் துப்பாக்கி இருந்தும் இறந்துவிட்டார்.
இதாவது பரவாயில்லை. பதற்றத்தில் அப்படிச் செய்துவிட்டார் என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், நல்லம்ம நாயக்கரைக் கொன்ற விஷயத்தை காவலர் பேய்க்காமனிடம் போய் கொத்தாளத் தேவன் சொன்னதும் அவர் என்ன சொல்கிறார் தெரியுமா… கொத்தாளா… மதுரை கோர்ட்ல சரண்டைஞ்சுடு. இப்படி யாராவது சொல்வார்களா? அந்தக் கொலையைப் பார்த்த சாட்சி என்று யாருமே கிடையாது. நல்லம்ம நாயகருக்கு வேறு பல எதிரிகள் இருக்கவும் கூடும். கொண்ட ராசு நாயக்கரையும் அவருடைய ஆட்கள் 24 பேரையும் கொன்றது கூட நல்லம்ம நாயக்கராக இருக்கக்கூடும் என்றுதான் இதற்கு முன் நீதிமன்றத்தில் வழக்காடவே செய்திருக்கிறார்கள். இப்போது கொண்ட ராசு நாயக்கரின் ஆட்கள்தான் நல்லம்ம நாயக்கரைக் கொன்றதாக பிளேட்டை எளிதில் மாற்றிவிட வழி உண்டு. இருந்தும் காவலர் பேய்க்காமன் கமல் சாரின் அசட்டு வசனத்தை அப்படியே பேசுகிறார்.
அதுவும் எப்படி? விருமாண்டி முதல்ல சாட்சி சொல்லிட்டா அவன் சொல்றதுதான் சரின்னு ஆயிடும். எனவே, நீ போய் நான் தான் கொன்னேன்னு சரண்டர் ஆகிடு என்கிறார். என்ன ஒரு முட்டாள்தனம். விருமாண்டி முதலில் சொல்வதற்குள் அவன்தான் கொலைகாரன் என்று வேண்டுமானால் கொத்தாளத் தேவன் சொல்லலாம். ஆனால், உண்மையில் இந்தக் கொலையில் இருந்து அவன் விலகி இருப்பதுதான் அவனுக்கு நல்லது. அதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது. ஆனால், அவனைப் போய் சரண்டையச் சொல்கிறார் காவலர் பேய்க்காமன். கொத்தாளத் தேவனுக்கு ஆயுள் தண்டனை தரப்படுகிறது. விருமாண்டியுடன் கடைசி ஜெயில் சண்டைல கொத்தாளத்தேவனும் இருந்தாகணுமே. அதுக்கு இப்படி சரண்டர் ஆனாத்தான முடியும். எனவே, சாட்சியே இல்லாத கொலைக்கு சரண்டர் ஆகிறார் கொத்தாளத் தேவர்.
அதுமட்டுமல்லாமல் அவர் அப்ரூவராகவும் ஆகிறாராம். விருமாண்டியைவிடப் பெரிய சண்டியர் அந்தக் கொத்தாளத் தேவன். செல்வச் செழிப்பிலும் அரசியல் செல்வாக்கிலும் விருமாண்டியைவிடப் பல மடங்கு உயர்ந்தவர். அதோடு விருமாண்டியே கொத்தாளத் தேவனின் அடியாள்தான். என்னதான் உயிர் பயம் இருந்தாலும் விருமாண்டிதான் என் எஜமானர். அவர் சொன்னதைக் கேட்டுத்தான் கொலைகளை எல்லாம் செய்தேன் என்று கொத்தாளத் தேவன் ஒருபோதும் சொல்லமாட்டான். அப்படிச் சொன்னால், அதன் பிறகு ஊருக்குள் அவனால் நடமாடவே முடியாது. தேவனுக்கு உயிரைவிட மானம்தான் பெரிசு. கமல் சார்தான் பசுபதிக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்பது சரிதான். அதற்கான விசுவாசத்தை பசுபதியிடம் கமல் எதிர்பார்க்கலாம். ஆனால், கொத்தாளத் தேவனைப்போய் விருமாண்டிக்கு அடியாளாக ஆக்குவது தவறு..
அதோடு, குற்றம் சாட்டப்பட்ட விருமாண்டியையும் கொத்தாளத் தேவனையும் சென்னை மத்திய சிறையில் அடைக்கிறார்கள். தேனி எஸ்.ஐ.யாக இருந்த பேய்க்காமனும் ”கூடவே நானும் வரேனப்பு’ என்று சொல்லி அதே சிறையில் துணை ஜெயிலராகிவிடுகிறார். க்ளைமாக்ஸ் சண்டை களைகட்ட வேண்டுமல்லவா?
க்ளைமாக்ஸில் காவலர் பேய்க்காமன் கைதிகளிடம் ரகசியமாக தணிந்த குரலில் ஒரு சதித்திட்டம் பற்றிப் பேசுகிறான். விருமாண்டி மீது பொய் வழக்குகள் போட்டு தூக்கு தண்டனை வரை கொண்டுவந்தது பற்றியும் பேசுகிறான். அதை டாக்குமெண்டரி எடுக்க வந்த கேமராமேன் தூரத்தில் இருந்து படமெடுத்துவிடுகிறான். ஆனால், பேய்க்காமனுக்கு மிக அருகில் கீழே உட்கார்ந்திருக்கும் விருமாண்டிக்கு மட்டும் இது கேட்கவே இல்லையாம். அந்த கேமராவையும் பொண்ணையும் கொண்டுவந்து என்னிடம் ஒப்படைத்துவிடு என்று விருமாண்டியிடம் பேய்க்காமன் டீல் பேசும்போது என் அன்னலட்சுமியை எனக்குத் தருவியா… தூக்கு தண்டனையில இருந்து விடுதலை வாங்கித் தருவியா என்று டயலாக் அடிக்கிறார். பேய்க்காமன் சதித்திட்டம் பற்றிப் பேசியது விருமாண்டியின் காதில் விழுந்ததோ இல்லையோ, பேய்க்காமன் கெட்டவன் என்பது விருமாண்டிக்கு நன்கு தெரியும். எனவே, அந்த கேஸட்டையும் டாக்குமெண்டரி இயக்குநரையும் பேய்க்காமன் பிடித்துத் தரச் சொன்னால் அதற்கு எதிரானதைச் செய்வதுதான் விருமாண்டிக்கு நல்லது. ஆனால், அவனோ முதலில் அவர்களைப் பிடித்துக் கொடுக்கவே முயற்சி செய்கிறான். டாக்குமெண்டரி டைரக்டரை தலையில் அடித்து தூக்கிக் கொண்டு செல்கிறான். கொத்தாளத் தேவன் வந்து விருமாண்டியைக் கத்தியால் குத்தி அந்த கேமராவைப் பறிக்க முயற்சி செய்யும்பொதுதான் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்கிறான்.
இப்படியாக கதையின் எந்தவொரு நகர்வை எடுத்தாலும் அதில் லாஜிக்கே கிடையாது. இதுபோன்ற தவறுகள் ஏன் நடக்கின்றன என்றால், கதை, திரைக்கதை வசனத்தை செப்பனிடுதல் என்ற சங்கதியே தமிழில் நடப்பதில்லை. ஒரு சாதாரண கட்டுரை, கதை எழுதுவதாக இருந்தாலும் அதை ஐந்தாறு தடவை அடித்துத் திருத்தி எழுதுவது உலக வழக்கம். இங்கோ கோடிகளைக் கொட்டி எடுக்கும் படத்தை எந்தவித முன் திட்டமிடலும் சரிபார்ப்பும் இல்லாமல் எடுத்துவருகிறார்கள். தப்பித்தவறி யாராவது இலக்கிய அல்லது எழுத்து ஊடகத்தில் பரிச்சயம் உள்ள ஒருவரை கதை திரைக்கதை வசனம் போன்றவற்றுக்கு உதவிக்காக வைத்துக்கொண்டால், அந்த பிரகஸ்பதிகளோ வாங்கற காசுக்கு மேல கூவ ஆரம்பித்துவிடுகிறார்கள். நீ நின்றால் சிலை… நடந்தால் கலை… பேசினால் காவியம்… தும்மினால் ஓவியம் என்று ஆஸ்தான வித்வானாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆஸ்தான விதூஷகராகவும் ஆகிவிடுகிறார்கள். இந்த நிலை மாறாதவரை, குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகத்தான் தமிழ் சினிமா இருந்து கொண்டிருக்கும்.
இந்தப் படத்துக்கு கொரிய நாட்டில் விருது கிடைத்தது என்று வேறு சொன்னார்கள். வெள்ளைக்காரன் மேல் நமக்கு இருக்கும் அடிமை பக்தியினால் வெளிநாட்டுக்காரன் என்றாலே புத்திசாலி என்று ஒரு எண்ணம் நமக்கு. கேவலம் மனுஷ ஜென்மம் தானே நாம் எல்லோரும்.
இந்தப் படத்துக்கு மாற்று திரைக்கதை எழுதுவதென்றால், முதலில் மரண தண்டனை எபிசோடை எடுத்து தனியே வைத்துவிடுவேன். அது தனியாக எடுக்கப்படவேண்டிய வலுவான கதை. அதுபோல் க்ளைமாக்ஸ் சண்டையும் படத்துடன் பொருந்தாத ஒன்று. அப்படிப் பார்த்தால், உயிருக்கு உயிராகக் காதலித்த ஒரு பெண்ணை காதலனே கற்பழித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுதல் என்ற விஷயம்தான் கதையாக மிஞ்சும். அதை வைத்து மிக அற்புதமான படம் தமிழில் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டிருக்கிறது. அதைவிட மேலான ஒன்றை யோசிப்பது கடினமே. கமல் சார் 100 ஜென்மம் எடுத்தாலும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் படம் அது.
0
B.R. மகாதேவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக