ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

பரோட்டா' தயாரிக்கும் France நாட்டு இளைஞர்

குன்னூரிலுள்ள சாலையோர பரோட்டா கடையில்,வெளிநாட்டு இளைஞர் ஒருவர் பரோட்டா தயாரித்து வாடிக்கையா ளர்களுக்கு வழங்கினார்.



ஊட்டி, குன்னூர் உட்பட நீலகிரி மாவட்டத்துக்கு தமிழகத்தின் பிற மாவட்டத்திலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இது தவிர ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். அந்த வரிசையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்திருந்த வாலிபர் ஒருவர் குன்னூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பரோட்டா கடையில், பரோட்டா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். தனது பெயர் போரீஸ் எனவும், பிரான்ஸ் நாட்டை சார்ந்த பொறியியல் பட்டதாரி என பரோட்டா கடைக்காரரிடம் அவரை அறிமுகம் செய்து கொண்டு; அங்கு பரோட்டா தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தார்.

பரோட்டா தயாரிப்பது குறித்து அவர் கூறியதாவது; இந்தியாவின் பல இடங்களில் சுற்றுலா சென்றேன்; இந்தியர்களின் விருப்ப உணவுகளில் ஒன்றான பரோட்டா மீது ஆர்வம் ஏற்பட்டது; அதை தயாரிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். அதற்காக கன்னியாகுமரி சென்ற போது அங்குள்ள ஒரு கடையில் பரோட்டா சுட கற்றுக் கொண்டேன். தற்போது குன்னூரை சுற்றி பார்க்க வந்துள்ளேன். அங்கு கற்றுக்கொண்டது சரிதானா என்பதை பரிசோதிக்க கடைக்காரரிடம் அனுமதி கேட்டேன். சரி என்று அவர் சொன்னார். அதன் படி சில மணி நேரம் பரோட்டா தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்தேன். இதனால் முழுமையாக பரோட்டா தயாரிப்பதற்கு கற்றுக்கொண்ட முழு மன திருப்தி எனக்கு ஏற்பட்டுள்ளது. இது எனக்கு நானே செய்து கொண்ட சுய பரிசோதனையாகும். என்னுடைய சொந்த ஊருக்கு சென்று அங்கு பரோட்டாவை தயாரித்து கொடுத்து பரோட்டாவை பிரபலப்படுத்துவேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக