ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் தவிப்பு

புதுடில்லி: உ.பி., சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்ததால், அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அந்தக் கட்சியிடம் இருந்து பறிபோய் விட்டது. அதனால், தங்களுக்குப் பிடித்தமானவரை ஜனாதிபதி பதவிக்குத் தேர்வு செய்ய முடியாத நிலையில் தவிக்கிறது. சமாஜ்வாதி உட்பட மதச்சார்பற்ற கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில், ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், காங்கிரஸ் பெரிய கட்சி என்றாலும், தங்களுக்குப் பிடித்தமான ஒரு நபரைத் தேர்வு செய்து, "இவர்தான் அடுத்த ஜனாதிபதி' என, திட்டவட்டமாக அறிவிக்கும் அளவுக்கு, அந்தக் கட்சிக்குப் போதுமான எம்.பி.,க்கள் இல்லை.

அதிகாரம் போச்சு: உ.பி., சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பெற்றிருந்தால், ஒருவேளை ஜனாதிபதியை தன்னிச்சையாக முடிவு செய்யும் வாய்ப்பு உருவாகி இருக்கலாம். அதற்கு வாய்ப்பு இல்லாத வகையில், அங்கு முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அமோக வெற்றி பெற்று விட்டது. இதனால், அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி, மற்ற கட்சிகளிடம் ஒப்படைத்து விட்டது என்றே கூறலாம். முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு, அம் மாநில சட்டசபையில் 224 எம்.எல்.ஏ.,க்களும், லோக்சபாவில் 22, ராஜ்யசபாவில் எட்டு எம்.பி.,க்களும் உள்ளனர். அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்தம் 10.98 லட்சம் மதிப்பிலான ஓட்டுகளில், 1.30 லட்சம் மதிப்பிலான ஓட்டுகள் சமாஜ்வாதி கட்சி வசம் உள்ளன.

எதிர்க்கட்சிகள் ஆதிக்கம்: சமாஜ்வாதி கட்சி தவிர, திரிணமுல் காங்கிரஸ் (45,000), இடதுசாரி கட்சிகள் (51,000), அ.தி.மு.க., (35,000), பிஜு ஜனதா தளம் (29,000) என, ஓட்டுகளைக் கொண்டுள்ளன. இந்தக் கட்சிகளில் திரிணமுல் காங்கிரஸ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும்கூட, பல விஷயங்களில் காங்கிரசுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. அதனால், ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் வேட்பாளரை ஆதரிக்குமா என்பது தெரியவில்லை.

ஒருமித்த கருத்து: அதனால், ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, மதச்சார்பற்ற கட்சிகளை இந்த விஷயத்தில் ஒன்று சேர்க்கத் தீர்மானித்துள்ளது. மதச்சார்பற்ற கட்சிகளுக்கும் பிடித்தமான, அதேநேரத்தில், தங்களுக்குச் சாதகமாகச் செயல்படக் கூடிய ஒருவரைத் தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்கிறது. அப்படி தேர்வு செய்யும்போது, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், அந்த நபரை அங்கீகரித்தால், பிரச்னை இல்லை. ஏகமனதாக ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்து விடலாம். இல்லையெனில் பிரச்னை தான். இருந்தாலும், இந்த விஷயத்தில், முலாயம் சிங் கட்சி முக்கிய பங்கு வகிக்கும். அந்தக் கட்சியின் ஆதரவு பெற்ற நபர், ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

துணை ஜனாதிபதி தேர்வு எப்படி? துணை ஜனாதிபதி தேர்தல் தனியாக நடக்கக்கூடிய ஒன்று என்றாலும், அந்தப் பதவியை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலில், ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகள் இடையே பேரங்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லையெனில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் திரிணமுல் உட்பட சில கட்சிகளின் ஆதரவுடன் வேட்பாளரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் முற்படலாம். அந்தக் கட்சிகளுடன் இந்தப் பதவிகள் விவகாரத்தில் பேரங்களில் ஈடுபட்டு, ஒரு முடிவுக்கு வரலாம். ஏனெனில், இந்தக் கட்சிகளுக்கு பார்லிமென்டில் 93 எம்.பி.,க்கள் உள்ளனர். ஒருவேளை, ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை, இந்தக் கட்சிகள் ஆதரித்து, அதற்குப் பதிலாக, துணை ஜனாதிபதி பதவியைத் தாங்கள் சொல்லும் நபருக்குத் தர வேண்டும் என்றும் நிர்பந்திக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக