திங்கள், 23 ஏப்ரல், 2012

சசிகலா: “பெங்களூருல அந்தாள் மிரட்டுராரு.. ஆளை த்ரட்ல விடுவோமா?”


தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டனில் வசிக்கும் தோழி சசிகலா, இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜராவாரா? இந்தக் கேள்விக்கு பதில் தெரிய பெங்களூரு கோர்ட்டில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.
காரணம், இன்றைய விசாரணையில் சசிகலா ஆஜராகாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, அவரது வழக்கறிஞரிடம் எச்சரிக்கை விடுத்திருந்தார் நீதிபதி மல்லிகார்ஜூனையா.
பெங்களூரு கோர்ட்டில் ‘ஆயுள் சந்தா’ போல வருடக்கணக்கில் நடைபெற்றுவரும் சொத்துக் குவிப்பு வழக்கை தமது ஆயுள்வரை நீடிக்கும் உத்தேசம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு உள்ளது ஒன்றும் ரகசியமல்ல.
அதற்காக வழக்கில் ஏதாவது ஒன்றைக் கேட்டு இழுஇழு என்று இழுப்பதை நீதிபதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வழக்கின் முதலாவது குற்றவாளியான ஜெயலலிதா ஏற்கனவே பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துவிட்டார். அப்போது, தோழிகள் இருவரும் பிரிந்திருந்த காரணத்தாலோ, என்னவோ, ஜெயலலிதா வழக்கை இழுத்துச் செல்லும் முயற்சிகளில் ஈடுபடாமல், பட்பட்டென்று பதில் அளித்திருந்தார்.
ஆனால், சசிகலா பதிலளிக்கத் துவங்கும் நேரத்தில் காட்சிகள் மாறின. அறிக்கையோடு பிரிந்த தோழிகள் மற்றொரு அறிக்கையோடு இணைந்து ஒரே இல்லத்தில் வசிக்கத் துவங்கினார்கள். முன்பு முறைத்துக் கொண்டு நின்றிருந்த ஜெயலலிதாவின் வக்கீல்கள், சசிகலாவுக்கு விறைத்துக் கொண்டு சல்யூட் அடிக்க வேண்டிய நிலைக்கு போய் விட்டார்கள்.
தோழியுடன் இணைந்த ஆனந்தத்தில் சசிகலாவும், நீதிமன்றத்தில் புகுந்து விளையாடத் துவங்கினார். பிட் அடித்தார், ரிட் மேல் ரிட் அடித்தார். நீதிபதியைத்தான் இன்னமும் அடிக்கவில்லை.
ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களைப் பார்வையிட அனுமதி கோரி இரு புதிய ரிட்கள் கடந்த 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டன. கடந்த வார இருதியில் இந்த மனு மீதான தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி மல்லிகார்ஜூனையா தெரிவித்திருந்தார்.
ஆனால், அவர் கூறிய தினத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் வேறு சோலி இருந்ததால், நீதிமன்றத்துக்கு வரவில்லை.
மஞ்சள் தண்ணி தெளித்துவிட்ட ஆடுகளாக அவர்களது வழக்கறிஞர்களே ஆஜராகினர்.
இவர்கள் சசிகலா குரூப் ஆஜராகாத காரணத்தால் கடும் சீற்றமடைந்த நீதிபதி மல்லிகார்ஜூனையா, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தார். அதையடுத்து அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததற்கு கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்தார்.
“இந்த வழக்கின் விசாரணை நாளை (இன்று, திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.
அரசு வக்கீல் ஆச்சார்யாவும் கடும் கோபத்தில் உள்ளார்.
அவர் செய்தியாளர்கள் பக்கமாக சென்று, “கோர்ட்டுக்கு வராமல் வழக்கை இழுத்துக் கொண்டு போகும்போது ஒரு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் இப்போது வெளியே இருப்பதே ஒரு வகையான ஜாமீனில்தான். அதை ரத்து செய்துவிட்டு, சிறையில் வைத்து தினமும் கோர்ட்டுக்கு அழைத்துவந்து விசாரணையை தொடரவும் சட்டத்தில் இடம் இருக்கிறது” என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
ஹா! எச்சரிக்கை!! இப்படி எத்தனையோ சலசலப்புக்களை கண்டவர் சின்னம்மா. அவருக்கு புடிச்சா வருவாரு.. புடிக்கலைன்னா நீங்க அடுத்த எச்சரிக்கை விடவேண்டியதுதான்.
அரசு வக்கீலுக்கோ, நீதிபதிக்கோ, அவர்கள் பதவியில் இருந்து ஓய்வு பெறும் வரைதான் இந்த வழக்கு. நம்ம தலைவிகளுக்கு ‘lifetime assignment’.  தெரிஞ்சுக்குங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக