திங்கள், 23 ஏப்ரல், 2012

இப்போதைக்கு ஜாமீனே கிடையாது... ராசா திட்டவட்டம்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் என்னை நிரபராதி என்பதை நிரூபித்து விட்டுத்தான் வெளியே வருவேன். அதுவரை நான் ஜாமீன் கோரப் போவதில்லை என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதான அத்தனை பேருமே ஜாமீனில் வெளியே வந்து ஹாயாக உலா வந்து கொண்டுள்ளனர். ராசா மட்டுமே இன்னும் சிறையில் வாடி வருகிறார். அவர் சிறையில் இருப்பதுதான் நல்லது, வெளியில் வந்தால் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று சுப்பிரமணியம் சாமி கூட அடிக்கடி கூறி வருகிறார்.
ஒரு வேளை ராசா சிறையில் இருந்து வெளியே வர மறுப்பதற்கு இதுதான் காரணமா என்று தெரியவில்லை.
திமுக தரப்பில் ஆரம்பத்தில் ராசாவை அடிக்கடி வந்து சந்தித்தனர். இப்போது யாரும் வந்து பார்ப்பதாகவே தெரியவில்லை. கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார் ராசா.

இந்த நிலையில், இன்று சிபிஐ சிறப்பு கோர்ட்டுக்கு ராசா அழைத்து வரப்பட்டார்.அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிரபராதி என்பதை நிரூபித்து விட்டுத்தான் நான் வெளியே வருவேன். அதுவரை ஜாமீன் கோர மாட்டேன் என்றார்.

கடந்த ஒன்றே கால் வருடங்களாக ராசா திஹார் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார். இந்த கால கட்டத்தில் அவரது நெருக்கமான நண்பரான சாதிக் பாட்சா, சென்னையில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூட ஒரு பேச்சு உள்ளது என்பது நினைவிருக்கலாம். இதையெல்லம் மனதில் கொண்டே ராசா ஜாமீனை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக