வியாழன், 5 ஏப்ரல், 2012

தமிழ் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி!

தமிழ் தேசியம்
பொதுவுடைமையைத் தனது பெயரில் தாங்கி, தேசிய இன விடுதலையைத் தனது இலட்சியமாக அறிவித்துக் கொண்ட ஒரு கட்சி குறுகிய இனவெறிக் கட்சியாக, அதுவும் பாசிச இனவெறிக் கட்சியாகவும் இருக்க முடியுமா? முடியும் என்று திரும்பத் திரும்பக் காட்டி வருகிறது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி (த.தே.பொ.க.) என்ற பெயரிலுள்ள ஒரு அமைப்பு.
பாட்டாளி வர்க்க அரசியல் சித்தாந்தத்துக்கு மாறாக, எதிராக, இணையாக, தொழிற்சங்கப் பிழைப்புவாதத்தைத் தனது சித்தாந்தமாகக் கொண்டிருந்த நம்பூதிரிபாடின் சீடர்கள் அல்லவா, இவர்கள்! அதனாலேயே தமது தொப்புள் கொடி உறவைக் கைவிட மறுக்கிறார்கள்! தாங்களே அறிவித்துக் கொண்ட இலட்சியத்தையும் கொள்கையையும் மட்டுமல்ல; சொந்த அறிவையும் புதைகுழியில் போட்டுவிட்டு அவற்றுக்கு எதிரான நிலைக்கு வலிந்து வாதம் புரிகிறார்கள்.

“தமிழர் இன எழுச்சி ஏற்படும் போதெல்லாம் தமிழகத்திலுள்ள இடதுசாரி இந்தியத் தேசியவாதிகளும் வலதுசாரி இந்தியத் தேசியவாதிகளும் பீதி அடைகின்றனர். இந்தியத் தேசியத்திற்கும் இந்திய ஒற்றுமைக்கும் இடையூறு ஏற்பட்டு விடுமோ என்று கலவரமடைகின்றனர்; கலங்கித் தவிக்கின்றனர்.”
“இனி முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் வெறும் வர்க்கச் சிக்கலாகவும் அரசியல் கட்சிகளின் குறைபாடுகளாகவும் திரித்துக் காட்டி இரசவாதம் செய்வார்கள் இந்தியத் தேசிய இடதுசாரிகள்” (த.தே.பொ.கவின் பத்திரிக்கையான  தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2012 மார்ச் 1613) என்று குற்றஞ்சாட்டும் மணியரசன் கும்பல் அதற்கு எடுத்துக்காட்டாக, ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளையும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் இவற்றின் நிலைப்பாடுகளையும் சுட்டுகிறது.
இன முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் அலசி ஆராய்ந்து கரை கண்ட மேதையாகிய, சிந்தனைச் சிற்பியாகிய மணியரசனே! நேர்மையிருந்தால் இங்கே நாங்கள் எழுப்பும் சில கேள்விகளுக்கு உங்கள் பேராசான் நம்பூதிரிபாடு பாணியில் சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பதில் சொல்லுங்கள்:
தமிழ் தேசியம்இந்திய தேசியத்துக்கும் அதனால் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு, மராத்தி, ஒடியா, வங்காளி, காசுமீரி, பஞ்சாபி, அசாமி முதலிய தேசிய இனங்களுக்கும் இடையிலான முரண்பாடுதானே பகை முரண்பாடு?அவ்வாறின்றி இத்தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பகை முரண்பாடுகளா? ஒடுக்கப்படும் இந்த தேசிய இனங்கள் தமது எதிரியாக, பகைச் சக்தியாகக் கொண்டுள்ளது, இந்திய தேசியத்தைத்தானே தவிர தங்களைப் போன்ற நிலையிலுள்ள பிற தேசிய இனங்களை எதிரியாக பகை சக்தியாகக் கொள்ள முடியுமா?
நேரடியாகவே கேட்கிறோம்: தமிழ் தேசிய இனத்துக்கும் இந்திய தேசியத்துக்கும் இடையிலானதுதான் பகை முரண்பாடு; தமிழ் தேசியத்தின் எதிரியாக, பகை சக்தியாக இருப்பது, இந்திய தேசியம்தான்! அண்டை தேசிய இனங்களாக இருக்கும் மலையாள, கன்னட, தெலுங்கு இனங்களோடு ஆற்றுநீர் பகிர்வு, எல்லைப் பிரச்சினை போன்றவைகளில் முரண்பட்டு நிற்பதாலேயே தமிழ் தேசிய இனம் அவற்றை பகை சக்தியாக எதிரி சக்தியாகக் கருத முடியுமா?
இன்னும் நேரடியாக, பகிரங்கமாகவே கேட்கிறோம்: முல்லைப் பெரியாறு  தேவிகுளம், பீர்மேடு பிரச்சினைக்காக  மலையாளியையும்; காவிரி  கோலார் பிரச்சினைகளுக்காக கன்னடனையும்; பாலாறு  சித்தூர் பிரச்சினைகளுக்காக தெலுங்கனையும் தமிழன் எதிரியாகக் கொண்டு பகைநிலை எடுக்க வேண்டுமா? அப்படிச் செய்வதைத் தானே இந்திய தேசியம் விரும்புகிறது. அதுதானே இந்திய தேசியத்துக்குத் துணைபோவது? இதைத் தானே த.தே.பொ.க தலைமையாகிய நீங்கள் செய்கிறீர்கள்?
இந்திய தேசியத்திற்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் தேசிய இனங்களுக்கிடையிலான நதிநீர் மற்றும் எல்லைப் பிரச்சினைகளைப் பகை முரண்பாடுகளாக வளர்த்து மோதவிடுவது தானே இந்திய தேசியத்தை பராமரித்து, பாதுகாப்பது; இதன் மூலம் இந்திய தேசியத்துக்கு எதிரான போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதுதானே த.தே.பொ.க.வின் வேலையாக இருக்கிறது?
தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைப் பகை  முரண்பாடுகளாக வளர்த்து மோதவிடுவிடும் த.தே.பொ.க.வின் கொள்கையை, வேலையை ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் செய்யவில்லை என்று குத்தாட்டம் போடுகிறது மணியரசன் கும்பல்.
“முல்லைப் பெரியாறு அணைய மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத் தடைபோடு!” என்ற தலைப்பிலான  ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் 2012 ஜனவரி வெளியீடு குறித்து, “முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க, கேரளாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும்,கேரளாவுக்குச் செல்லும் 13 பாதைகளை மூடவேண்டும் என்றும், அது கூறுவது சரி. ஆனால் இதே ம.க.இ.க. கேரளாவுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் நமது கோரிக்கையை 11.02.2010இல் எதிர்த்து தனது வினவு இணையத் தளத்தில் எழுதியது என்று த.தே.பொ.க. வாதிடுகிறது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான முரண்பாடு 2012  ஜனவரியில் நிலவிய அளவுக்கு 2010  பிப்ரவரியில் கூர்மையடைந்திருக்கவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வினவு இணைய தளத்தில் எழுதியதை எடுத்து வைத்துக் கொண்டு மேற்படி கோரிக்கைகளை முன்வைத்த தமிழினவாதிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராகவும் முன்னுக்குப்பின் முரணாக எழுதுவதாகவும் இப்போதைய ‘தமிழின எழுச்சியை மடைமாற்றுகிறது ம.க.இ.க.’ என்றும் அவதூறு செய்கிறது த.தே.பொ.க.  அப்போதும்கூட கேரளாவுக்கு எதிரான பொருளாதார தடை, முற்றுகை விதிப்பது உடனடி நடவடிக்கையாக இருக்கக்கூடாது கடைசி பட்சமாக நடத்தலாம் என்று தான் வினவு இணையத்தளம் எழுதியிருந்தது.
2012 ஜனவரி வெளியீட்டில் முல்லை பெரியாறு பிரச்சினை கூர்மையடைந்ததற்கான அடிப்படையை விளக்கும் போது தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கத்தின் விளைவாக எழுந்தது என குறிப்பிட்டிருக்கிறோம். இது ஏதோ இனப்பிரச்சினை, வர்க்கப் பிரச்சினையாகவும் இந்திய தேசியத்திற்கு ஆதரவாகவும் மடைமாற்றுவது என்றும் த.தே.பொ.க. வியாக்கியானம் செய்கிறது.
இந்திய தேசியத்தை உருவாக்கிப் பேணி வளர்க்கும் ஆளும் வர்க்கங்களையும் அவர்களின் தனியார்மயம்  தாராளமயமாக்கம்  உலகமயமாக்கத்தையும் ம.க.இ.க. முதலிய புரட்சிகர அமைப்புகள் எதிர்ப்பது, எப்படி த.தே.பொ.க. சொல்வதைப் போல இன உணர்வாளர்களை இந்திய தேசியவாதத்திற்குள் இழுத்துச் செல்வதாகும்?
ஆனால், இந்திய தேசியத்தையும், அதைக் கட்டிக் காக்கும் இந்திய அரசையும் தனது பகைச் சக்தியாக அறிவித்துக் கொண்டுள்ள த.தே.பொ.க. அவற்றுக்கு எதிராக ஒரு புல்லைக் கூட பிடுங்கியதில்லை என்பது இருக்கட்டும்; ம.க.இ.க. முதலிய புரட்சிகர அமைப்புகளைவிட தமிழீழத்தின் உறுதியான, ஆதரவாளராகப் பீற்றிக் கொள்ளும் த.தே.பொ.க.வும் பிற தமிழ் இனவாதிகளும் கூட முள்ளிவாய்க்கால் படுகொலை வரை இந்தியாவை (இந்திய தேசியம், இந்திய அரசு முதலியவற்றை) தமிழீழ விடுதலையின் பகைச் சக்தி என்ற உண்மையைக்  சொல்லத் துணிந்ததுண்டா?
நக்சல்பாரிப் புரட்சிக் கட்சி தோன்றிய காலத்திலிருந்தே இந்திய தேசியத்துக்கு எதிராக தேசிய இனங்களின் விடுதலையை உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது. அதனாலேயே தேசிய இனப் பிரச்சினை என்பது இனிமேலும் கிடையாது, முடிவுக்கு வந்துவிட்டது என்று தனது கட்சிப் பேராயத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நம்பூதிரியின் போலி மார்க்சிஸ்ட் கட்சி. அப்போதும் அந்தக் கட்சியில்தான் இன்றைய த.தே.பொ.க. தலமை குப்பை கொட்டிக் கொண்டிருந்தது. அதன்பிறகு வெவ்வேறு அவதாரமெடுத்து, தனது விரைவான சொந்த வளர்ச்சிக்கான குறுக்குவழி  “அடையாள அரசியல்” என்ற முறையில் த.தே.பொ.க. தலமை தெரிந்தெடுத்துக் கொண்டதுதான், தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை. மற்றபடி தமிழ்த் தேசிய இனத்தின் மீது அதற்குள்ள பற்றினால் அல்ல.
ஏற்கெனவே இங்கே பல பத்து தமிழ்த் தேசிய இனக் குழுக்கள் உள்ளன; அவை எல்லாவற்றையும் விடத் த.தே.பொ.கட்சித் தலைமை வித்தியாசமானதும் ஆழ்ந்த சிந்தனையும் தமிழ்த் தேசியத்தின் தீவிரப் பற்றும் தெளிவும் கொண்டதாகக் காட்டிக் கொள்கிறது; ஆனால், நடைமுறையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே த.தே.பொ.கட்சித் தலைமை பலவாறு உளறிக் கொட்டிக் கிளறி மூடுகிறது.
நிலவுடைமை பண்பாட்டையும், பார்ப்பனிய சனாதனத்தைப் புகுத்திய நிலவுடைமை மன்னர்களின் அருமை பெருமைகளை ஏற்றிப் போற்றி பாரம்பரிய உரிமை பாராட்டி தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்துகிறது. இந்திய தேசியத்தை  இந்து தேசியத்தை உயர்த்திப் பிடித்த பார்ப்பனிய பாரதியைப் போற்றுகிறது. இராமன் தமிழ்க் கடவுள் என்று சொல்லி இந்துத்துவத்தையும் தமிழ்த் தேசியத்துக்குள் புகுத்துகிறது.
இவ்வாறு உண்மையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான இந்துத்துவ  இந்திய தேசியத்தையும் ஏற்றுக் கொண்டுள்ள த.தே.பொ.க. தலைமை, குறுகிய இனவெறி சிவசேனா பாசிசத்தையும் கையிலெடுத்துக் கொண்டுள்ளதில் வியப்பில்லை. பிற மாநிலங்களில் இருந்து பிழைப்புத் தேடித் தமிழகத்தில் குடியேறும் பிற மாநிலத்தவர்கள் அனைவரும் கிரிமினல் குற்றவாளிகள், தமிழர்களுக்கு எதிராக ஆதிக்கம் புரிபவர்கள், அவர்களை  வெளியேற்ற வேண்டும் என்று கூறி  சிவசேனாக்களின் பாசிச  இனவெறி பாணியில் நஞ்சு கக்குகிறது, த.தே.பொ.க. தலைமை.
“கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை எனப் பலக் குற்றச் செயல் தமிழ்நாட்டில் பெருகிவிட்டதற்கு முகாமையான காரணம் வெளிமாநிலத்தவர்களின் மிகை வருகை என்று தமிழகக் காவல்துறை அறிவித்துள்ளது” என்று கூறும் த.தே.பொ.க. தலைமை, தானும் அதை வழிமொழிந்து, “தமிழகத்தில் தமிழர்கள் நடத்தும் கொள்ளை, பாலியல் வன்முறைகளை விட அதிக விகிதத்தில் வெளிமாநிலத்தவர் நடத்தும் கொள்ளை, பாலியல் வன்முறை நிகழ்வுகள் இருக்கின்றன” என்று பச்சையாக கோயாபல்சு புளுகுகளை அள்ளி வீசுகிறது.
குடியேறும் வெளிமாநிலத்தவர் அனைவரும் ஒரே வகையினர் அல்ல. இன்றைய தனியார்மயம், தாராளமயம், உலகமய சூழலில் வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்டு, துரத்தியடிக்கப்படும் உழைப்பாளி மக்கள் பிற மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து,  ஓலைக்கொட்டைகளிலும்,  தகரக் கொட்டடிகளிலும் புழுங்கித் தவிக்கின்றனர். தமிழ் ஒப்பந்தக்காரர்களிடம் கொத்தடிமைகளாக அற்பக் கூலிக்கும், சில தமிழ்க் கிரிமினல்களின் கேட்பாரற்ற தாக்குதல், வழிப்பறிக்கும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் பலியாகிறார்கள்.
தமிழகத்திலுள்ள சுயநிதிக் கல்லூரிகளில் சேர்ந்து சீரழிந்த பண்பாட்டிலும், கிரிமினல் குற்றங்களிலும் ஈடுபடும் வெளிமாநிலத்தவர் வேறொரு பிரிவினர். இவர்கள், தமது சொந்த மாநிலங்களில் குறுக்கு வழியில் செல்வத்தைக் குவிக்கும் குடும்பங்களின் செல்லப்பிள்ளைகள். இந்த வேறுபாட்டை  மூடிமறைக்கிறது, த.தே.பொ.க. தலைமை.
தமிழ்த் தேசத்தில் குடியேறும் வெளிமாநிலத்தவர்கள் எல்லாம் அடகுக்கடை, சினிமா முதலீட்டாளர்கள், தமிழர்கள் மீது ஆதிக்கமும் சுரண்டலும் செய்பவர்கள் மட்டுமல்ல,  கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்று பார்ப்பன  பாசிச ஜெயாவும் அதன் போலீசும் கூறுவதை வழிமொழிந்து மணியரசன் கும்பல் குற்றஞ் சுமத்துகிறது. அதனால் வெளிமாநிலத்தவர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று போராடவும் செய்கிறது.
வெளி தேசங்களில் குடியேறும் தமிழர்கள் எல்லாம்  உழைக்கும் மக்கள்;  குடியேறும் தமிழர்கள் அம்மாநிலங்களில் ஆதிக்கம் புரிபவர்களோ சுரண்டுபவர்களோ அல்ல என்று புளுகுகிறது, த.தே.பொ.க. தலைமை.
இதுவும் உண்மையல்ல. வெளிமாநிலங்களில் குடியேறும் தமிழர்களிலும் ஒருபிரிவினர் கந்துவட்டி  லேவாதேவியிலும், அம்பானி, டாடா, பிர்லாக்களின் கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகார வர்க்க முதலாளிகளாகவும், (சசிகலா) நடராசன், தம்பிதுரை, தேவநாதன் போன்ற தமிழர்கள் உ.பி., பீகார், அரியானாவில் சுயநிதிக் கல்லூரிகள் வைத்துக் கொள்ளையடிக்கிறார்கள், குடிபெயரும் தமிழர்கள் மற்றும் புலம் பெயரும் ஈழத்தமிழர்களிலும் ஒரு சிலர் குற்றச் செயல்களில் பிடிபடுகின்றனர். அதற்காக எல்லாத் தமிழர்களையும் வெளியேற்ற வேண்டும் என்பது சரியாகுமா என்று மணியரசன் கும்பல்தான் கூறவேண்டும்.
பாசிசக் கழிசடை அரசியல் மணியரசன்களே! ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவியில் வாழும் ஐந்து இலட்சம் உழைக்கும் தமிழ் மக்களைத் தாக்கும் சிவசேனா இனவெறியர்களுக்கும், உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைத் தாக்கும் அந்தந்த நாட்டு நிறவெறி பாசிஸ்டுகளுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?
பின் குறிப்பு:  மணியரசன் வகையறாக்கள் எமக்கு எதிராகத் தமது அவதூறுகளைத் தொடர்வதற்கு வசதியாக ஒரு தகவல்:  எமது தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நூற்றுக் கணக்கில் ஒரிசா, ஜார்கண்ட், பீகார், சட்டிஸ்கர், வங்காள புலம்பெயர் தொழிலாளர்களை உறுப்பினர்களாக்கி வருகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக